என் நிலத்திலேயே வாழ வேண்டும்! என் மக்களை பற்றியே எழுத வேண்டும்!! தீபச்செல்வன் தி இந்து நாளிதழுக்கு வழங்கிய பேட்டி

0

கவிஞர் தீபச்செல்வனின் இயற்பெயர் பாலேந்திரன் பிரதீபன். ஈழ கவிஞரான இவர் இதுவரை 15 நூல்களை தமிழ் இலக்கிய உலகிற்கு படைத்தளித்த படைப்பாளி. இவற்றில் பல கவிதை தொகுப்புகள், சில கட்டுரை தொகுப்புகள், சில சிறுகதை தொகுப்புகளும் அடக்கம். வெளிவரவிருக்கும் இவரது புதிய நாவல் #நடுகல், டிஸ்கவரி புக் பேலஸின் வெளியீடாக மதுரை புத்தக கண்காட்சியின் போது வெளிவர இருக்கிறது. தீபச்செல்வன் கவிதைகள், கட்டுரைகள், கதைகள் என அனைத்தும் பெரும்பாலும் போர் சூழல், விடுதலை, போருக்கு பிந்தைய நிலத்தின் நிலையை பிரதிபலிப்பதாகவே இருக்கின்றன.

தீபச்செல்வன் 1983 ஆம் ஆண்டில் பிறந்தவர், அவரது எழுத்துக்கள் அவரின் கடந்தகாலமான இராணுவத்தின் டாங்கிகள் சூழ்ந்து நிற்பதாக மாற்றப்பட்ட ஒரு இளம் பையனின் வாழ்க்கையில், போர் ஏற்ப்படுத்திய முட்டுக்கட்டைகளை சுமந்து நிற்கின்றன. கிளிநொச்சி மத்திய கல்லூரியில் பள்ளிப் படிப்பை முடித்த தீபச்செல்வன், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கியத்தில் பட்டம் பெற்றவர். தனது உயிரின் அச்சுறுத்தல்களுக்கு நடுவில் அவர் பல்கலைக்கழக மாணவர் தலைவராக இருந்தார். தீபச்செல்வன் தமிழகத்தில் உள்ள சென்னை பல்கலைக்கழகத்தில் இதழியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

தொடர்ந்து இலங்கை இராணுவத்தின் கண்காணிப்பில் வாழ்ந்தவர் அவர். அவரது கவிதைகள் அவரைப் போன்றே விதியால் வீதியில் தூக்கி எறியப்பட்ட அவருடைய இனமக்களுடைய வாழ்க்கை நிலைமையின் நம்பிக்கையற்ற தன்மையை எதிரொலிக்கின்றன. இலங்கை பத்திரிகை சங்கம் மற்றும் தமிழ் இலக்கிய பத்திரிகையான கனையாழி அவரது எழுத்துக்களை இனங்கண்டு அவரை அங்கீகரித்துள்ளன.

ஈழ தமிழ் இலக்கியவாதிகள் என்ற பெயரில் சில புல்லுருவிகள் ஈழ விடுதலை போரையும், போர் கால சூழல்களையும் , அதன் நியாங்களையும், புரட்டு பேசி பொய்யான குற்றச்சாட்டுகள் மூலம் கடுமையான விமர்சிக்கும் இந்த இக்கட்டான சூழலில்.. தமது மண்ணுக்கான போராட்டத்தின் நியாயங்களை அம்மண்ணை விட்டு அணுவளவும் அகலாமல் நேரடி சாட்சியமாக நின்று இலங்கை தாண்டிய வெளியுலகிற்கு இயல்பு மாறாமல் மிக எதார்த்தமாக அதே சமயம் மண்மணம் மிக்கதாக எடுத்து இயம்புவதால் தீபச்செல்வன் மற்ற ஈழ எழுத்தாளர்களைவிடவும் அதிமுக்கியத்துவம் பெறுகிறார்.

வளர்ந்து வரும் ஈழ இளம் எழுத்தாளரும், ஈழத்தை தம் ஈரமான எழுத்துகள் மூலம் எல்லை தாண்டி எடுத்துவரும் கவிஞர் தீபச்செல்வனிடம் நேரடியாக நாம் சில கேள்விகளை முன் வைத்தோம்.

நமது கேள்விகளும் கவிஞரின் பதில்களும்..

**ஏன் தீபச்செல்வன் என்ற ஒரு புனைப்பெயரைத் தேர்வு செய்தீர்கள்?

இது ஒரு தமிழ் பெயர். நீங்கள் எழுதத் தொடங்கும்போது போது ஒரு புனைப்பெயர் மிகச்சிறந்த அடையாளமாகி உதவுகிறது.

**உங்கள் குடும்பத்தை பற்றி சொல்லுங்கள்..?

எனது குடும்பத்தின் மூன்று குழந்தைகளில் நான் இரண்டாவது. எனக்கு ஒரு மூத்த சகோதரர் மற்றும் ஒரு இளைய சகோதரி. என் சகோதரி 11ஆம் வகுப்பில் இருக்கிறாள். (என ஆச்சரியத்தில் சிரித்துக்கொண்டே) ஆமாம்.. எங்களுக்குள் 10 ஆண்டுகள் இடைவெளி.

யுத்தம் தீவிரமடைந்த காலத்தில் நான், என் தாய், தங்கை நாங்கள் மூவரும் பிரிய நேர்ந்தது. மூன்று பேரும் வெவ்வேறு இடங்களில் இருந்தோம். என் தாயார் போராளிகளின் குழந்தைகளுக்கான இல்லப் பராமரிப்பகத்தில் பணியாற்றினார்.

என் தங்கை தாயிடமிருந்து பிரிந்தபோது இயக்கத்தை சேர்ந்த ஒருவர் வீட்டிலேயே வளர்ந்தார். எனது தாய் என் சகோதரியுடன் மீண்டும் இணைந்த 2009 இறுதி யுத்த முடிந்த சமயத்தில் இலங்கை இராணுவத்தால் தடுப்பு முகாமுக்கு அனுப்பப்பட்டார்கள்.

எனது சகோதரர் பிரசன்னா என்னை விட இரண்டு வயது மூத்தவர். அவர் 16 வயதில் 2001 ஆம் ஆண்டில் இயக்கத்தில் சேர்ந்தார். அதிலிருந்த ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர் இறந்துவிட்டார். அவர் 10 வயதில் இருந்தே ஒரு போராளியாக விரும்பினார். அதற்காக அவர் ஐந்து முறை வீட்டை வெளியேறியுள்ளார். ஆனால் ஒவ்வொரு முறையும் அவர்கள் அவனை மீண்டும் மீண்டும் வீட்டிற்கே கொண்டு வந்து விட்டுவிடுவார்கள்.

கடைசியாக ஒருநாள் அவர் வீட்டை விட்டு வெளியேறினார். அந்த முறை அவர் திரும்பி வரவேவில்லை. அவருடைய வாழ்வும் முடிவும் வாழ்க்கை பற்றியதான என் பார்வையை வெகுவாக பாதித்திருக்கிறது.

எனது தந்தை இலங்கையின் மின்வழங்கல் துறையில் பணியாற்றும் ஒரு ஊழியர். கொழும்பில் வசிக்கின்றார். அவர் ஒரு உண்மையான ஸ்ரீலங்கா குடிமகன். தமிழர் மற்றும் இயக்கத்துடன் எந்தத் தொடர்பும் இல்லாதவர். முதல் முறையாக என் தந்தையை நான் பார்த்தபோது எனக்கு 10 வயது. என் சகோதரி அவரை பார்த்ததே இல்லை. என் சகோதரன் இறந்தபோதுகூட அவர் எங்களை சந்திக்க வரவில்லை. பல ஆண்டுகள் எங்களுடன் ஏன் அவர் வாழவில்லை என்று நான் வருத்தப்பட்டேன். என் நண்பர்களின் தந்தைகள் போல் அவரும் எங்களுடனேயே இருக்க வேண்டும் என்று நான் விரும்பினேன்.

யுத்தத்தின் போது நாங்கள் நிறைய துன்பங்களை சந்தித்தோம், ஆனால் அவர் எங்களை பார்க்கவோ உதவவோ ஒரு முயற்சியும் செய்யவில்லை. போருக்குப் பின் அவருடன் மீண்டும் இணைவதற்கு நான் விரும்பவில்லை. அவரைப்பற்றிய எந்தக் குறிப்பும் என்னிடம் இல்லை. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் படிக்க தொடங்கியதை அறிந்த பின்பு அவர் என்னை தொடர்புகொண்டார்.

பல்கலைக்கழக பட்டப்படிப்புகளுக்கு பொது நுழைவுத்தேர்வு மூலமே அனைத்து மாணவர்களும் தேர்வு செய்யப்படுவர். பரீட்சைக்கு போட்டியிடும் ஆயிரம் மாணவர்களில் நானும் தேர்வு செய்யப்பட்டேன். என் படிப்புக்கு உதவுவதாக அப்பா சொன்னார். நான் உங்கள் உதவி தேவையில்லை என்றேன். அதுவே நான் அவருடன் கடைசியாக பேசியது.

**உங்கள் நகரத்தை பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன். நாட்டின் பிற பகுதிளோடு அது இணைக்கப்பட்டுள்ளதா? ரயில், பேருந்து இவையெல்லாம் வருகிறதா?

நான் என் சிறுவயதில் ஒரு முறை என் ஊரில் ரயிலை பார்த்துள்ளேன். (சிரிக்கிறார்) அந்த ரயில்பாதை 30 வருடங்களுக்கு முன் அழிந்தது. சண்டைகளில் அழிந்தவற்றுள் அதுவும் ஒன்று. என் நகரத்தில் சாலைகள் இருக்கின்றன. ஆனால் அவை எதுவும் ஒழுங்காக இல்லை.

எழுத்துதான் உங்கள் வாழ்க்கை பாதையென எந்த தருணத்தில் தேர்வு செய்தீர்கள்?

எட்டாம் வகுப்பு படிக்கும்போதே கவிதை எழுத தொடங்கிவிட்டேன். அப்பொழுதெல்லாம் இயற்கை, வாழ்க்கை இயல்புகள் குறித்து மட்டுமே கவிதை எழுதினேன். என் அண்ணன் ஒரு போராளியாக முடிவெடுத்து மரணித்தபிறகு அவரின் இழப்பு என்னை வெகுவாக பாதித்தது.
நான் கிளிநொச்சி நகரத்தில் உள்ள இரத்தினபுரத்தில் பிறந்தேன்.

1996 ஆம் ஆண்டு எனது நகரத்திலிருந்து வெளியேற்றப்பட்டு அக்கரையான் என்ற ஊருக்கு இடம்பெயர்ந்தோம். அது ஒரு போர் காலம். அப்போது என்னுடைய பள்ளிபடிப்பும் நிறுத்தப்பட்டது. நான் கூலி வேலைக்கு சென்றேன். 1998 ஆம் ஆண்டு மீண்டும் பள்ளியில் சேர்ந்து படிப்பை தொடர்ந்தேன். நான் என் கல்லூரி படிப்பை தொடங்கிய பிறகு நூலகங்களில் நிறைய படிப்பதை வழக்கமாக கொண்டேன். அப்போது மீண்டும் கவிதை எழுத ஆரம்பித்தேன்.

எனது தாயும், தங்கையும் முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டிருந்த காலகட்டத்தில்தான் எனக்கு முகாம்பற்றி எழுத வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. மட்டுமின்றி ஒரு தமிழ் துறை பயின்ற மாணவன் தமது படைப்புகளை இதழ்கள் ஊடகங்களை நோக்கி அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்வது இயல்புதானே.

உங்களின் மனம் கவர்ந்த எழுத்தாளர்கள், கவிஞர்கள்..?

பாப்லோ நெருடா. பாலஸ்தீனிய விடுதலை கவியான முகமது தர்விஸ், ஈழ கவிஞர்கள் சேரன், ஜெயபாலன்..

உங்கள் எழுத்துக்கள் பெரும்பாலும் போர்ச்சூழ்ந்த பூமியின் வாழ்வை பற்றியதாகவே உள்ளன. உங்களின் ஒரு கட்டுரை சற்று வித்தியாசமாக புகைப்படங்கள் பற்றியதாக இருந்தது. புகைப்படங்கள் அவ்ளோ முக்கியமானதா என்ன?

எனது குழந்தை பருவத்தில் என் தந்தையை நான் புகைப்படத்தில் மட்டுமே கண்டுள்ளேன். போருக்கு செல்லும் முன் என் அண்ணன் அவற்றில் சிலவற்றை எடுத்து சென்றான். அவர்களின் நினைவாக எங்களிடம் இருந்தவை அந்த புகைப்படங்கள் மட்டுமே.
ஆனால் முதல் போரின்போது நாங்கள் எங்கள் வீடு, உடைமைகளை இழந்தபோது அவற்றோடு அந்த புகைப்படங்களையும் இழந்தோம்.

பின்னதாக நான் ஒரு ஊடகவியலாளனாக போர் நடைபெற்ற இடம்பெறுங்களில் செய்தி சேகரிக்க சென்ற போது எங்களை போன்றே பல குடும்பங்கள் அவ்வாறு இழப்புகளை சந்தித்திருப்பதை கண்கூடாக கண்டேன். அதுவே எனக்கு அவர்களை பற்றி எழுத வேண்டும் என்ற உந்துதலை ஏற்ப்படுத்தியது.

எனது முள்வேலி கவிதைகள் எல்லாம் என் தாயின் மறுவாழ்வு முகாம்காலத்து அனுபவங்களே! அப்படி அனுபவங்களாக எழுதப்பட்ட கட்டுரைகளில் ஒன்றுதான் ” யாழ் சுமந்த பையன்” – அது முள்ளிவாய்க்கால் போர் பூமியில் வயலினோடு சுற்றி திரிந்த ஒரு சிறுவனை பற்றிய கதை. முன்னதாக அந்த பையனை பற்றி தமிழ் இதழ் ஒன்றில் படித்து தெரிந்துகொண்டு அவனை தேடி அலைந்தேன். இறுதியாக அவன் இரத்தினபுரத்துக்கு அடுத்துள்ள கிராமத்தில் இருப்பதை அறிந்து தேடிச் சென்று சந்தித்தேன். அப்போதே அவனை பற்றி எழுத வேண்டும் என்று முடிவு செய்தேன். என்னுடைய பெரும்பாலான கட்டுரைகள் அவ்வாறு அனுபவங்களால் ஆனவையே.

உங்கள் எழுத்துக்கள் உங்கள் மக்களுக்கு உதவியுள்ளதாக நினைக்கிறீர்களா?

நான் போரினால் நிலமற்று போன எம்மக்களை பற்றி எழுதுகிறேன். நாங்கள் எங்கள் வீடுகளை இழந்துள்ளோம். எங்களில் பலர் தங்களது குடும்பத்தை இழந்தவர்கள். இந்த அனுபவங்களை எழுத வேண்டியது எனது கடமை. எழுதித்தான் ஆக வேண்டும்.

இலங்கை பத்திரிக்கை சங்கம் மூன்று முறை எனக்கு சிறந்த ஊடகவியலாளருக்கான விருதினை அளித்துள்ளது. இந்த நிகழ்வுகள் சில மாற்றத்தை ஏற்ப்படுத்திதான் உள்ளன. சில கிராமங்களில் மக்களுக்கு அவர்களின் நிலத்தை இராணுவம் மீள கொடுத்துள்ளது.

இன்னும் பல கிராமங்களின் நிலங்கள் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அவற்றை பற்றி தொடர்ந்து எழுதுவேன்.

உங்கள் எழுத்துகள் ஏன் எப்போதும் வீடு திரும்புதலையே உணர்த்துகிறது?

என்னுடைய பால்ய வயதில் எங்கள் வீடு வரவேற்பறை , ஒரு சமையலறை மற்றும் ஒரு அறையைக் கொண்ட மண்ணால் ஆன ஒரு சிறிய வீடு. என்றாலும் அது என்னுடைய வீடு என்ற உணர்வு இருந்தது. உலகில் வேறெங்கும் அந்த உணர்வை பெற முடியாது.
நான் என்னுடைய நிலத்திற்கு மீள செல்ல வேண்டும். என் வாழ்வு அச்சமூட்டுவதாக இருந்தாலும் நான் அங்குதான் வாழ வேண்டும்.

நீங்கள் கனடா அல்லது பிரிட்டன் உள்ளிட்ட இதர ஐரோப்பிய நாடு ஒன்றிற்கு இடம் பெயர்வது குறித்து ஏன் சிந்திக்கவில்லை..?

இல்லை. ஒருபோதும் புலம்பெயர்வது குறித்து யோசிக்க மாட்டேன். நான் என் நிலத்திலேயே வாழ வேண்டும். என் மக்களை பற்றியே எழுத வேண்டும்.

நீங்கள் தமிழகத்தில் இரண்டு ஆண்டுகள் வசித்துள்ளீர்கள் ஏன் அதைப்பற்றி அதிகம் எழுதுவதில்லை?

நான் தமிழ்நாடு பற்றி இரு கவிதைகள் மட்டுமே எழுதி உள்ளேன். அதில் ஒன்று நான் மெரீனா கடற்கரை சென்ற அனுபவத்தை பற்றியது.
நான் எப்போதுமே நான் வாழும் நிலம் மற்றும் மக்களை பற்றி எழுதுவதை மட்டுமே சிந்திக்கிறேன். நிறைய மக்கள் சொல்கிறார்கள் ஒரே மொழி பேசும் தமிழகம் தம்முடைய இரண்டாம் வீடு என்று ஆனால் நான் அப்படி உணரவில்லை.

அங்கே வாழ்ந்தபோது அந்த நிலம் ஏனோ எப்போதும் என்னிலிருந்து தனித்தே நின்றது. நான் இடம்பெயரக் கூடியவன் அல்லவே. அதனால் அந்த நிலம் எனக்கு வேறாக தோன்றுகிறது போல. நிறைய ஈழ எழுத்தாளர்கள் இதை கடந்துவிட்டனர். ஆனால் என்னால் அதை கடக்க முடியவில்லை. என்னால் அதை தாய்நிலம் என்று உணர முடியவில்லை. என்னுடைய மொழி வழக்கும், கலாச்சாரமும் அந்த மண்ணிலிருந்து சற்று வேறுபட்டே நிற்கிறது.

உங்கள் எதிர்காலம் எப்படி இருக்குமென்று எண்ணுகிறீர்கள்?

எனக்கு தெரியும் அது மிக போராட்டகரமானதாக இருக்குமென்று. ஆனால் நான் அதிலிருந்து பின்வாங்குவதாக இல்லை.

நேர்காணல்- தி இந்து (ஆங்கில நாளிதழ்), நேர்கண்டவர்- சுஜாதா ரகுநாதன்
தமிழாக்கம் : சபரி சியான்

Leave A Reply

Your email address will not be published.