கண்களற்ற எலும்புக்கூடுகள் எதனையோ சொல்கின்றன! தீபச்செல்வன்

0

1996இல் இலங்கை இராணுவம் கிளிநொச்சியை கைப்பற்றியபோது ஊர் பாக்கவும் பஞ்சத்தில் வயிறு வளர்க்கவும் கிளிநொச்சிக்கு வந்தவர்களை இலங்கை இராணுவம் கொன்று புதைத்தது. மிகவும் கொடூரமாக அவர்கள் சித்திரவதை புரிந்து கொல்லப்பட்டார்கள். அதில் காயங்களுடன் இராணுவத்தினரிடமிருந்து சாதுரியமாக தப்பியவர்களும் உண்டு. திரும்பி வருவார் என்று ஊருக்குச் சென்றவர்கள் பலரும் காணாமல் போயினர். இதன் விளைவாக 2000ஆம் ஆண்டில் ஆனையிறவு மீட்புடன் கிளிநொச்சி திரும்பியபோது பலரது வீட்டு கிணறுகளிலும் மலசல கூடங்களிலும் எலும்புக்கூடுகளே காத்திருந்தன.

அந்தக் காட்சி இப்போதும் நினைவில் இருக்கிறது. கந்தபுரம் தமிழீழ காவல்துறை அலுவலகத்தில் பல எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வரிசையாக படுக்க வைக்கப்பட்டிருந்தன. தம் உறவுகளின் எலும்புக்கூடுகளின் நாடி பிடித்து பார்ப்பதற்காக மக்கள் வந்திருந்தார்கள். அதற்குள் ஏதேதோ அடையாளங்களை வைத்தெல்லாம் பல எலும்புக்கூடுகளை அடையாளம் காண்டுகொண்டனர். இவர் என் கணவர். இது என் பிள்ளை, இது என் தந்தை என்று அடையாளம் காண்டுகொண்டனர். எலும்புக்கூடுகள் பார்க்க அச்சமூட்டும் வடிவத்தை கொண்டிருந்தாலும் ஈழத்தில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளில் அந்த அச்சத்தை எவரும் உணர்வதில்லை.

எலும்புக்கூடுகள் ஏதோ இறுதி வாக்குமூலத்தை சுமந்திருப்பதைப்போல அவர்களின் உறவினர்கள் உணர்வதுண்டு. கண்களற்ற அந்த எலும்புக்கூடுகள் கண்களால் எதனையோ சொல்வதைப்போல அவர்கள் உணர்வதுண்டு. தமிழில் கலிங்கத்துப் பரணியில் இடம்பெற்ற போரில் பார்த்ததைப்போலவே ஈழமும் ஒரு கோலத்தை கண்டிருக்கிறது. கிளிநொச்சிக்கு 2000ஆம் ஆண்டு மீளத் திரும்பியபோது அப்படித்தான் எங்கும் மண்டை ஓடுகளும் எலும்புக்கூடுகளும் மீட்கப்பட்டன. தமிழீழ விடுதலைப் புலிகளின் நித்ரசனம் பிரிவில் இருந்த கஜானி என்ற போராளி ஒளிப்படக் கலைஞர் ஒருவரது அக்கால கட்டத்தின் எலும்புக்கூடுகள் குறித்த புகைப்படம் எண்ணற்ற வார்த்தைகளின் சித்திரத்தை வரைந்திருந்ததது.

ஈழ மக்களை மீண்டும் மன்னார் புதைகுழி நடுக்கமுற வைக்கிறது. அண்மையிலும் மன்னார் புதை குழியில் தாயும் ஓர் குழந்தையும் அருகருகாக புதைக்கப்பட்ட நிலையில் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. சின்னக் குழந்தைகளுக்கான சவப்பெட்டிகள் அதிகம் விற்பனை செய்யப்பட்ட ஈழத்தில் சின்னக் குழந்தைகளின் பிஞ்செலும்புக் கூடுகள் மீட்கப்படுவதும் எத்தினை துயரமானது?. மன்னார் மனிதப் புதைகுழியில் மேலும் சிறுவர்களின் எலும்புக்கூடுகளும் மீட்கப்பட்டிருக்கின்றன. அத்துடன் அவற்றில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டமைக்கான முறிவுக் காயங்கள் இருப்பதாகவும் மீட்புப் பணியில் முன் நிற்பவர்கள் கூறியிருக்கிறார்கள்.

மன்னார் புதை குழி பற்றிய செய்திகள் குறிப்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை பெரும் கலவரமடைய செய்திருக்கிறது. போரின்போதும், போர்க்களத்தின் முடிவிலும் இராணுவத்திடம் கையளிக்கப்பட்டும், போர்க்களங்களுக்கு வெளியிலும் பலர் தனியாகவும் குடும்பமாகவும் காணாமல் ஆக்கப்பட்டிருக்கிறார்கள். தமது உறவுகள் பற்றிய உண்மை வெளிப்படுத்தப்படும் என்றும் தமது உறவுகள் உயிருடன் உள்ளனர், மீண்டு வருவார்கள் என்றும் காத்திருக்கும் பலரது உறக்கத்தை கலைத்து மனதை துன்பக் கலக்கத்தில் தள்ளியுள்ளது மன்னார் புழைகுழி.

மன்னார் புதைகுழி, மன்னாரில் கடந்த 2013ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. புதைகுழி கண்டுபிடிக்கப்பட்ட இடம், மன்னாரின் மாந்தை சந்தியிலிருந்து 75 கிலோமீற்றர் தொலைவில் உள்ள திருக்கேதீச்சரம் பகுதியில் இருக்கிறது. குடி நீர் திட்டத்திற்காக மண்ணை அகழ்ந்தபோது எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதனையடுத்து நீதிமன்ற உத்தரவுடன் மண்ணை அகழ்ந்தபோது பத்து மண்டை ஓடுகளும் மனித எச்சங்களும் முதல்நாளில் கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றில் துன்புறுத்தி கொலை செய்யப்பட்டமைக்கான அடையாளங்கள் காணப்பட்டதுடன் தொடர்ந்து நடத்திய சோதனையில் 80 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டிருந்தன.

இதேவேளை இலங்கையின் முன்னைய அரசின் காலத்தில் மன்னார் மனிதப் புதைகுழியை மயானம் என கூறப்பட்டது. எனினும் அப் பகுதியில் கிணறு ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது நாற்பது நாட்களை கடந்து புதை குழி அகழ்ந்து மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. தற்போது மாத்திரம் 53 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. உண்மையில் இது ஒரு பாரிய மனிதப் புதைகுழி என்றே நம்பப்படுகிறது. இப் பகுதி 1990முதல் 2009 வரையான காலப் பகுதியில் இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்துள்ளது.

இந்தப் புதை குழியில் மீட்கப்பட்டவர்களின் எலும்புக்கூடுகளைக் கொண்டு அவர்கள் யார்? யாரால் எக் காலத்தில் கொலை செய்து புதைக்கப்பட்டவர்கள் என்பது கண்டுபிடிக்கப்பட முடியும். எனினும் இந்த விடயங்களை எலும்புக்கூடுகளை மீட்கும் ஆய்வாளர்கள் சொல்லத் தயங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
000

ஒரு காலத்தில் மண்ணை அகழந்தால் பொன்னும் பொருளுமாய் புதையல்கள் கிடைக்கும். முன்னோர்கள் தமது சந்ததிகளுக்காக பொன்னையும் பொருளையும் மண்ணில் புதைத்து வைப்பவர்கள். அல்லது எம் மூதாதையர்கள் வாழ்ந்தமைக்கான சுவடுகள் மண்ணில் புதையுண்டு இருக்கும். ஆனால் ஈழத்தில் இன்றோ மண்ணில் நமது தலைமுறைகள் புதைக்கப்பட்டிருக்கிறார்கள். கணவனை, பிள்ளைகளை தேடும் மனைவிமாரும் தாய்மார்களும் இத் தீவின் மண்ணில் எங்கு தம் உறவு உயிருடன் இருக்கிறது என்று மண்ணை தேடி அலைகின்றனர். ஈழத்தில் அகழும் இடங்களில் எல்லாம் புதைக்கப்பட்டவர்களின் எலும்புக்கூடுகள் மேல் வருகின்றன.

அண்மையில் யாழ்ப்பாணம் செம்மணியிலும் எலும்புக்கூடுகளின் எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. செம்மணி ஈழத் தமிழர்கள் எவராலும் மறக்க முடியாத மனிதப் புதைகுழி. 1996 – 1998 காலப் பகுதியில் யாழ்ப்பாணத்தின் இளையதலைமுறை கொன்று புதைக்கப்பட்ட இடம். இளைய தலைமுறையை அழிப்பதன் மூலம் அவர்களின் போராட்டக் குணத்தையும் சமூக சிந்தனையையும் அழிக்க முடியும் என்ற இன அழிப்பு நோக்கத்தில் இலங்கை அரச படைகளினால் கொல்லப்பட்ட இளைஞர் யுவதிகள் புதைக்கப்பட்ட இடம் செம்மணி.

இன்றைக்கும் செம்மணியை கடந்து செல்லும் எவரும் அங்கு காணப்படும் பிரமாண்ட பாலத்தையும் யாழ் வளைவையும் பல்தேசி்ய நிறுவனங்களின் விளம்பர பலகைகளையும் கடந்து அந்த செம்மணி மண்ணில் புதைக்கப்பட்டவர்களை ஒருமுறை நினைத்தே செல்வார்கள். 1996 காலப் பகுதியில் சுமார் 600 இளைஞர்கள் இங்கே புதைக்கப்பட்டார்கள். யாழ் சுண்டுக்குழி மகளீர் கல்லூரியை சேர்ந்த மாணவி கிருசாந்தி குமாரசுவாமியை இராணுவத்தினர் வன்புணர்ந்து படுகொலை செய்ததுடன் செம்மணிப் புதைகுழி வெளிச்சத்திற்கு வந்தது.

கிருசாந்தியின் படுகொலையுடன் தொடர்புடையவராக கைதுசெய்யப்பட்ட கொலையாளி சோமரத்தின ராஜபக்ச செம்மணிப் படுகொலை தொடர்பான பல விடயங்களை அம்பலப்படுத்தினார். இரண்டு ஆண்டுகளின் பின்னர் அதாவது 1998 இதேபோல் ஒரு காலத்தில் அதாவது ஜூலை 3ஆம் திகதி நடந்த வழக்கிலேயே அவர் உண்மைகளை அம்பலப்படுத்தினார். 1998- 2018 இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் அப் பகுதியில் மீண்டும் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

செம்மணிப்படுகொலை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்காவின் அரசிற்கு பெரும் அகௌரவத்தை உலகம் முழுவதும் ஏற்படுத்தியது. தேர்ந்த திட்டமிட்ட ஒரு இன அழிப்புச் செயற்பாட்டை செய்த குற்றச்சாட்டையும் சுமத்தியது. அதன் பின்னர் ராஜபக்சவின் காலத்திலும் செம்மணி பெரும் அபாயம் கொண்ட வலயமாகவே காணப்பட்டது. அப் பகுதி இராணுத்தின் முழுச் செயற்பாட்டு வலயமாகவும் காணப்பட்டது. அங்கு பாரிய இராணுவ முகாம் அமைந்திருந்தது. யாழ்ப்பாண நகரத்திற்கு தென்மராட்சியிலிருந்து வருபவர்கள் அந்த அபாய வலயத்தை தாண்டி வருவது பெரும் சிக்கல் நிறைந்ததாக 2008- 2009 காலப் பகுதி இருந்தது.

குறித்த காலத்தில் அதாவது நான்காம் ஈழ யுத்தம் தொடங்கிய கால்த்திலும் பலர் யாழ்ப்பாணத்தில் சுட்டுக் கொன்றழிக்கப்பட்டதுடன் பலர் காணாமல் ஆக்கப்பட்டார்கள். தினமும் பத்துக்கும் அதிகமான இளைஞர் யுவதிகள் கொல்லப்பட்ட செய்திகளுடன் யாழ்ப்பாணம் இருந்த காலம் இதுவாகும். அத்துடன் ஒரு வீட்டில் நான்கு பிள்ளைகளும் காணாமல் ஆக்கப்பட்டார்கள். இலங்கை இராணுவத்தாலும் அவர்களுடன் இணைந்து செயற்பட்ட தமிழ் துணை இராணுவக் குழுக்களாலும் தமது பிள்ளைகள் கடத்திச் செல்லப்பட்டதாக யாழ்ப்பாணத்தை சேர்ந்த பல பெற்றோர்கள் பகிரங்கமாக வாக்குமூலத்தை அளித்துள்ளார்கள்.

செம்மணியில் நீர் குழாய் நிர்மாணப் பணிகளின்போது இந்த மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தச் செய்தி ஈழ மக்களை பெரும் அதிர்ச்சி கொள்ளச் செய்துள்ளது. இவைகள்தான் எங்கள் புதையல்கள். இப் படுகொலைகள் நிகழும் காலத்துடன் மாத்திரம் இதன் வாதைகள் முடிந்துபோவதில்லை. இவை பற்றிய உண்மைகளை வெளிக் கொணரும் காலம் வரையும் இந்த வாதைகள் நீடிக்கின்றன. இவை பற்றிய பெறுப்பேற்புகளும் மன்னிப்புக் கோரல்களும் நிகழும்காலம் வரை இந்த வாதைகள் நீளும். உண்மையில் இந்தப் படுகொலைகளுக்கான நீதி கிடைக்கும் வரையில் இந்த வாதைகள் நீளும். இந்தக் குற்றங்களிலிருந்து அரசு ஒருபோதும் தப்பிக்கொள்ள முடியாது. ஒரு போராட்டமாக நீதிக்கான தவிப்பாகவே இந்த எலும்புக்கூடுகள் எம் மண்ணிலிருந்து மேல் எழுகின்றன.

தீபச்செல்வன்

நன்றி -குளோபல் தமிழ் செய்திகள்

Leave A Reply

Your email address will not be published.