நண்பர்கள் மெல்ல மெல்ல விலகிச் செல்ல ஒரு நாள் தலைவர் பிரபாகரன் தாயைச் சந்தித்தார்….அப்போது நடந்தது என்ன?

0

“மாற்றானிடம் மண்டியிட்டு கிடந்த தமிழர்களை வரிப் புலிகளாக அவதாரம் கொடுத்தவர் தலைவர் பிரபாகரன்!.”

உலகத் தமிழர் வரலாற்றில் தமிழர்களுக்கென விடுதலை நோக்கிய பயணத்தை மேற்கொள்ளுவதற்காக தனித்தமிழர் மரபு வழி இராணுவத்தை தரை, கடல் என கடந்து வான் படையை நிறுவுவதற்கு பற்றுறுதியோடு செயற்பட்ட தலைவர் பிரபாகரன், கடந்த 9 ஆண்டுகளாக மர்ம முடிச்சாக, புரியாத புதிராக விளங்குகின்றார். இவரின் பெயரை கேட்டாலே பலர் குலை நடுங்கி போவார்கள்.

தலைவர் பிரபாகரன் அவர்களின் வரலாறானது தமிழ் மக்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றோடு பின்னிப் பிணைந்ததாக இருப்பதால், விடுதலைப் போராட்ட பரிணாம வளர்ச்சியை நோக்குவது பொருத்தமானது. தலைவர் பிரபாகரன் அவர்கள் நான்கு வயது சிறுவனாக இருந்த போது நிகழ்ந்த 1958 இனக் கலவரங்களின் கோர அழிவுகளைக் கேள்விப்பட்டார். அவருக்கு தமிழ் மக்கள் மீது ஆழ்ந்த பரிவும் அனுதாபமும் ஏற்பட்டது. நிராயுதபாணிகளான அப்பாவி தமிழ் மக்களுக்கு எதிராக ஆயுத வலிமையை பிரயோகிக்கும் பேரினவாத இயந்திரத்தை ஆயுதப் போராட்டம் மூலமே எதிர்கொள்ள முடியுமென்பதை உணர்ந்தார். எழுபதுகளின் பின்னர் தரப்படுத்தல் தலைவர் பிரபாகரனை பெரிதும் பாதித்தது.
அத்தோடு அவர் வாழ்ந்த வல்வெட்டித்துறை பிரதேசம் அந்தக் காலத்திலேயே இராணுவ அடக்கு முறைகளை எதிர்கொண்டதை சிறுவனாக இருந்த காலத்தில் தலைவர் பிரபாகரன் நேரில் கண்டதால் அவருக்கு வெறுப்புணர்ச்சி மேலோங்கியது. இது பற்றித் தெரிவித்த தலைவர் பிரபாகரன், நான் சிறுவயதில் சண்டித்தனமான ஆளும் அல்ல, யாருடனும் சண்டைக்கு போவதுமில்லை. ஆனால் எனது ஊரில் இராணுவத்தின் அடக்குமுறை தன்னில் பாதிப்பை ஏற்படுத்தியது என தெரிவித்திருக்கின்றார்.

அத்தோடு தனக்கு விடுதலை உணர்வை ஏற்படுத்தியவர்களில் வேணுகோபால் மாஸ்டரை தலைவர் பிரபாகரன் குறிப்பிடத் தவறுவதில்லை. தமிழரசுக் கட்சி வாலிபர் முன்னணி உறுப்பினராக இருந்து பின்னர் அக்கட்சியின் தீவிரம் போதாது என்பதால் சுயாட்சிக் கழகத்தில் இணைந்த வேணுகோபால் மாஸ்ரர் விடுதலைப் போராட்டத்தின் தேவைகள் குறித்து வகுப்புக்கள் எடுத்தார்.
இவரே ஆயுதப்போராட்டத்தின் தேவையையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியதாகக் குறிப்பிடுகின்றார். தனது பதினாறாவது வயதில் ஏழு நண்பர்களுடன் சேர்ந்து பெயரில்லாத இயக்கத்தை ஆரம்பித்தார். தலைமறைவாக தீவிரவாத நடவடிக்கைகளை மேற்கொண்ட போது இவரும் நண்பர்களும் தேடப்படும் நபர்களானார்கள்.

நண்பர்கள் மெல்ல மெல்ல விலகிச் செல்ல ஒரு நாள் தலைவர் பிரபாகரன் தாயைச் சந்தித்தார். பெரியசோதி, நடேசதாசன், உனது அண்ணன் கூட வெளிநாடு போய்விட்டார்கள். நீயும் போயேன் என்று அம்மா கேட்டார். அதற்கு நான் போகமாட்டேன், போறதுக்காக நான் வரவில்லை என்று கூற, அவங்களை நம்பித்தானே நீ போராட வெளிக்கிட்டாய் என்று சொன்னார்.
இதற்கு பதிலளித்த தலைவர் பிரபாகரன் “நான் அவர்களை நம்பி வரவில்லை”, என்று கூற அவரது தாயாரோ ஒரு மொட்டையனுடன் சேர்ந்து என்ன செய்யப்போகின்றாய் என்று கடிந்தார். அதற்கு சீற்றமாக, “ஒரு மொட்டை 9 மொட்டைகளாகும், 9 மொட்டை 90 மொட்டைகளாகும், 90 மொட்டைகள் 900 மொட்டைகளாகும்” என்று தாயாருக்குப் பதிலளித்தார்.
இவ்வாறு தலைவர் பிரபாகரனின் சிறுவயதுக்காலம் இனத்துக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்ற பேரவாவுடனும் தீர்க்கமான சிந்தனையுடனும் வளர்ந்தது.

1971 இலிருந்து வீட்டை விட்டு முற்றாக விலகிய தலைவர் பிரபாகரன் தமிழ் மாணவர் பேரவை சத்தியசீலனோடு இணைந்தார், தாக்குதல் பிரிவில் தளபதியாக விளங்கினார்.
ஆனால் தமிழ் மாணவர் பேரவையை நிறுவனமயப்படுத்தி கொள்கை வழியில் வழிநடத்த நடவடிக்கை எடுக்கப்படாததால் அதிருப்தியுற்றார். இந்த நிலையில் சத்தியசீலன் தலைமறைவாகி பின்னர் கைது செய்யப்பட்டார்.

பொலிசாரின் பார்வையிலிருந்து தப்பி 1973 இல் தமிழகம் சென்ற தலைவர் பிரபாகரனுக்கு ஈழத்துப் பெரியார் (இராசரத்தினம்) அவர்களுடனான சந்திப்பு மிகுந்த உற்சாகத்தைக் கொடுத்தது. புதிய தமிழ்ப்புலிகள் இயக்கத்தை ஆரம்பித்தார்.
கடந்த காலங்களில் உருவான அமைப்புக்களின் அழிவுக்காக காரணங்களை அறிந்து அதற்கேற்ப உறுதி ஒழுக்கம், கட்டுப்பாடு என்பவற்றை கடுமையாக அமுல்படுத்தினார். 1974 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் திகதி தமிழாராட்சி மாநாட்டுப் படுகொலை தமிழ் இளைஞர்கள் மத்தியில் விடுதலைப் போராட்டத் தீவிரத்தை வளர்த்தது. 1976 ஆம் ஆண்டு மே மாதம் 5ம் திகதி வவுனியா பூந்தோட்டத்திலுள்ள முகாமில் வைத்து புதிய தமிழ்ப்புலிகள் தமிழீழ விடுதலைப்புலிகளாக பெயர் மாற்றம் பெற்றது.

அத்தோடு இழந்த இறைமையை மீட்பதில் மட்டுமல்ல தமிழர்களுக்கென தனிக்கொடியை உருவாக்க முனைந்தார். 1977 ஆம் ஆண்டு புலிகள் இயக்கக் கொடியாக இருந்த புலிக்கொடியிலிருந்த எழுத்துக்கள் நீக்கப்பட்டு 1990 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21 ஆம் திகதி மாவீரர் ஆரம்ப நாளன்று தமிழீழ தேசியக் கொடியை தலைவர் பிரபாகரன் ஏற்றினார்.
புலனாய்வில் ஈடுபட்ட தமிழ் பொலிசார் மீது தாக்குதலை நடத்திய விடுதலைப்புலிகள் 1981 ஆம் ஆண்டு அக்டோபர் 13 ஆம் திகதி இராணுவத்தினர் மீது முதலாவது தாக்குதலை தொடுத்தனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளை ஒடுக்குவதற்கு முளையிலே கிள்ளி எறிய 1979 ஆம் ஆண்டு மே மாதம் புலிகள் தடைச்சட்டமும் செப்டெம்பரில் பயங்கரவாத தடைச்சட்டமும் கொண்டு வரப்பட்டது. 1979 ஆம் ஆண்டு யாழ்- குடாவில் அவசரகால சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டு இராணுவ அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. விட்டில் பூச்சியாக அழிய முனையாது தனது தோழர்களுடன் வன்னி அம்பகாமம் வந்து படிப்படியாக விரிவாக்கம் செய்வதில் தலைவர் பிரபாகரன் தீவிரமாக செயற்பட்டார்.
1983 ஆம் ஆண்டு கறுப்பு ஜுலையைத் தொடர்ந்து தீவிரவாதத்தின் பால் இளைஞர்கள் குழாம் ஈர்க்கப்பட்ட போதிலும் தலைவர் பிரபாகரன் ஆளணியை பெருக்குவதில் ஆர்வம் காட்டாது, இறுக்கமான கட்டுக்கோப்பான இயக்கமாக தமது அமைப்பை வழிநடத்தினார்.

1984 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதலாம் திகதி தமிழ் நாடு திருப்போரூர் முருகன் ஆலயத்தில் மதிவதனி அம்மையாரை திருமணம் புரிந்த பிரபாகரன் தம்பதிகளுக்கு இல்லற வாழ்வில் மூன்று குழந்தைகள்.
மூத்த மகனுக்கு போராளி சாள்ஸ் அன்ரனியின் பெயரைச் சூட்டினார். இரண்டாவது பெண்குழந்தைக்கு துவாரகா என பெயரிட்ட பிரபாகரன் தம்பதிகள் மூன்றாவது மகனுக்கு பாலச்சந்திரன் என்ற பெயரைச் சூட்டி போராளிகள் மீதான பற்றை வெளிப்படுத்தினார்கள்.
1983 ஆம் ஆண்டைத் தொடர்ந்து பொலிஸ் நிலையங்கள் யாழ் குடாவில் படிப்படியாக முடக்கப்பட்டதுடன் இராணுவத்தினரும் முகாம்களை விட்டு வெளியேற முடியாது தடுக்கப்பட்டனர்.

வடமராட்சி ஒப்பரேசன் லிபரேசன் புலிகளுக்கு சவாலாக அமைந்தாலும் சுதாகரித்துக் கொண்டார்கள்.
இந்திய அமைதிகாக்கும் படையினராலும் பின்னர் பிறேமதாச அரசாங்கம், சந்திரிக்கா அரசாங்கம் என்பவற்றினால் கொடுக்ப்பட்ட நெருக்கடிகளிலிருந்து இயக்கத்தை வழிநடத்தி இன்றும் தமிழீழ மக்களை (விடுதலைப் புலிகளை) தலைவர் பிரபாகரன் வழிநடத்தி தமிழர் சமபலத்தை பேணி இப்போது புரியாத புதிராக சிங்கள தேசத்துக்கு வாய்ப்பளித்திருக்கிறார்.

ஆகாய கடல் வெளிச்சமர், மணலாறு சமர், தவளை நடவடிக்கை, கொக்குத் தொடுவாய் சமர், இடிமுழக்கம், ஓயாத அலைகள் -1, சத் ஜெய -2,3 முறியடிப்பு சமர், பரந்தன் ஆனையிறவுச் சமர், வவுணத்தீவு சமர், கிளிநொச்சி பரந்தன் முகாம்கள் மீதான ஊடுருவல் தாக்குதல் ஓயாத அலைகள் -2, ஜெயசிக்குறு முறியடிப்பு சமர், ஓயாத அலை-3 , ஓயாத அலை -4, தீச்சுவாலை முறியடிப்பு சமர் எனப் பல சமர்கள் தலைவர் வே.பிரபாகரனின் இராணுவ வழிநடத்தலுக்கு சான்று பகரும்.
விடுதலைப்புலிகள் பல்வேறு நெருக்கடிகள், அடக்குமுறைகள், அழுத்தங்கள், சவால்களுக்கு முகம் கொடுத்தும் மரபு வழி சமரணியாக தமிழ் மக்களுக்கு பலம் சேர்க்கும் அணியாக விரிவாக்கம் பெறுவதற்கு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் கொள்கைப் பற்று, விடுதலை வேட்கை, தன்னம்பிக்கை, துணிச்சல், புலனாய்வுத்திறன், எதிரிகளையும் நண்பர்களையும் பிரித்தறியும் ஆற்றல், போராளிகளை அரவணைத்துச் செல்லும் பரிவு போன்றன முக்கிய காரணங்களாகும்.

சாதாரண புலி உறுப்பினர் ஒருவர் கூட தலைவரைப் பற்றி உரையாற்றும் போது மெய் சிலிர்ப்பதை தனிமனித வழிபாடாக சிலர் விமர்சித்தாலும் பிரபாகரன் என்ற ஆளுமையே வடக்கு கிழக்கு என்று விரிந்து பரந்து இளைஞர் அணியாக தமிழர் தேசம் ஒருமைப்பட காரணம் என்பதை எவரும் மறுக்க முடியாது.
பல உள்நாட்டு வெளிநாட்டு சக்திகள் தலைவர் பிரபாகரனை திசைதிருப்ப, விலைக்கு வாங்க அல்லது விடுதலைப் புலிகளை பிளவுபடுத்த பலவீனப்படுத்த, மக்களிடமிருந்து அன்னியப்படுத்த மேற்கொண்ட பகீரதபிரயத்தனங்களைக் கடந்து விடுதலைப் புலிகளை வழிநடத்தி வருகின்றார்.

தமிழ் மக்களின் பலமாக, மக்களிடமிருந்து பிரிக்க முடியாதபடி விடுதலைப் புலிகள் வியாபித்து வேரூன்றி விருட்சமாகியதற்கு தலைவரின் பற்றுறுதியான அர்ப்பணிப்பு முக்கிய காரணமாகும். கால் நூற்றாண்டு கால படைத்துறை அனுபவம், பல நெருக்கடிகள், சவால்களை முறியடித்த ஆற்றல் கொண்ட தமிழ் மக்களின் விலை மதிக்க முடியாத சொத்தான தலைவர் என்றும் தமிழரின் வழிகாட்டியாக திகழ்வார்.

அவரின் அனுபவ ஆற்றல் இன்று அவரின் குரல் கேட்காத நிலையிலும் தமிழ் மக்களையும் தான்டி இந்த பூவுலகையே பிரகாசிக்கின்றது. சீண்டல்களால் சீற்ற மடையாது சர்வதேசமே மூக்கில் விரலை வைக்கும் அளவிற்கு இன்று தலைவர் விளங்குகின்றார். சிறிலங்கா அரசாங்கம் தலைவரையும் தமிழீழ விடுதலைப் புலிகளையும் பயங்கரவாத அமைப்பாக சித்தரித்து உலக நாடுகளோடு அழிக்க முற்பட்டனர் ஆனால் தலைவரின் கொள்கைக்கு ஏற்ப ஆயுதங்கள்தான் மௌனிக்கப்பட்டது என்பதை முழு உலகமே அறியும்.

இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி என்று கூறும் புலிகள் தலைவரைப் பற்றி சுதந்திர வேட்கை நூலில் திருமதி அடேல் பாலசிங்கம் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். ‘அவரது அரசியல் இலட்சியத்தினை ஆழமாகப் பார்த்தால் அவரை ஒரு நாட்டுப்பற்றுடைய தேசிய வாதியாகவே கருத முடியும். சில சிங்கள விமர்சகர்கள் வாதிடுவது போல பிரபாகரனின் தேசியவாதம் இன வெறியை பிரதிபலிக்கவில்லை.
தமிழ் மக்களை இன ரீதியாக அழித்தொழிக்க வேண்டுமென்ற சிங்கள இனவாத ஒடுக்கு முறையை முறியடிக்க வேண்டுமென்பதில் பிரபாகரன் திடசங்கற்பம் பூண்டு நிற்கின்றார். அந்த திடசங்கற்பத்திலிருந்து பிறந்தது தான் பிரபாகரனின் ‘தமிழ்த் தேசியப்பற்று.’ என்று குறிப்பிட்டிருக்கின்றார். ஈழத்தமிழர் வரலாற்றில் முக்கிய திருப்புமுனைச் சக்தியான தமிழர்களின் பெருந்தலைவர் பிரபாகரன் அவர்கள் போடும் கணக்கும், எடுக்கும் முடிவுகளும் என்றும் பிழைத்ததில்லை இதனை இந்த பிரபஞ்மே நன்கு அறியும். எனவேமண்டியிட்ட தமிழர்களை வரிப் புலியாக அவதாரம் கொடுத் தானைத் தலைவன் பிரபாகரன் வரும் வரை எமது கடமைகளை சரிவரச்செய்து அவரின் கரங்களை பலப்படுத்தி விடுதலையை வென்றெடுப்போம்.

Leave A Reply

Your email address will not be published.