நல்லூர் திருவிழா ஆரம்பிக்கவுள்ள நிலையில் தியாகி திலீபனின் நினைவிடத்தைப் புனிதமாகப் பேணுவதற்கு ஏதுவாக சுற்றுக் கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் நல்லூர் ஆலயத் திருவிழா முடிந்ததும் நினைவுத் தூபி அமைக்கும் பணி தொடங்கும் என்றும் யாழ் மாநகர சபையின் முதல்வர் இ.ஆனோல்ட் தெரிவித்தார்.
கடந்த உள்ளுராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்ட்டமைப்பு சார்பில் போட்டியிட்டபோது வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாக்கும் வாக்குறுதியை வழங்கியிருந்ததாகவும் சபை நடவடிக்கையை தொடங்கப்பட்டதும் எமது முதல் பணியாக திலீபனின் நினைவு தூபியைச் சீரமைக்க தீர்மானிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
அதன்படி தற்போது நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நல்லூர் ஆலயத் திருவிழாவின்போது நினைவிடத்தின் புனிதத் தன்மையைப் பேணச் சுற்றுவேலி அமைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
அத்துடன் தூபியைச் சீரமைப்பதற்கு மாநகர சபையின் நிதி பயன்படுத்தப்படாது என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் நினைவுத் தூபி அமைப்பதற்காக 2 லட்சம் ரூபா ஒதுக்கியுள்ளதாகவும் அந்த நிதியில் சீரமைப்புப் பணிகள் நடைபெறும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.