நாங்கள் இதில் தான் தவறு செய்துவிட்டோம்: விராட் கோஹ்லி!

0

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில், வீரர்களை தெரிவு செய்வதில் தவறு செய்துவிட்டதாக இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி படுதோல்வியடைந்தது. இதனால் இந்திய அணி கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

இந்நிலையில் தோல்வி குறித்து அணித்தலைவர் விராட் கோஹ்லி கூறுகையில், ‘நாங்கள் விளையாடிய ஆட்டத்தை நினைத்து எந்த வகையிலும் பெருமை கொள்ள முடியாது. கடைசியாக விளையாடிய 5 டெஸ்ட் போட்டிகளில் இந்த ஆட்டத்தில் நாங்கள் முழுமையாக வீழ்த்தப்பட்டு விட்டோம்.

நாங்கள் விளையாடிய விதத்தை பார்க்கும்போது, தோல்விக்கு நாங்கள் தகுதியான அணி தான். நாம் விளையாடி கொண்டிருக்கும்போது வானிலை பற்றி சிந்தித்துக் கொண்டிருக்க முடியாது.

வானிலையை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் ஆடுகளத்தையும், வானிலையையும் நன்கு பயன்படுத்திக் கொண்டனர். அவர்கள் எங்களை ஓட்டங்கள் எடுக்க விடாமல் சிறப்பாக செயல்பட்டனர்.

அணியில் வீரர்கள் தெரிவில் தவறு செய்துவிட்டோம் என்று நினைக்கிறேன். எனது முதுகுவலி பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. அடுத்த டெஸ்ட் போட்டிக்கு 5 நாட்கள் இடைவெளி உள்ளது. அதற்குள் குணமடைந்து விடுவேன்’ என தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.