புலிகள் திரும்ப வரவேண்டும் என்று சொல்வதில் தவறில்லை! சிறிதரன்

0

2009 ஆம் ஆண்டின் பின்வந்த எந்தவொரு அரசாங்கமும் தமிழ் மக்களை பொருளாதார ரீதியாக முன்னேற்றவில்லை எனக்கூறும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், தமிழ் மக்களின் அபிவிருத்தி பற்றிப் பேசும் அரசாங்கங்களால் ஏன் ஒரு தொழிற்சாலையைக் தமிழர் பகுதிகளில் நிறுவமுடியவில்லை என்று கேள்வியெழுப்புகின்றார்.

Qவடக்கின் அரசியல்வாதிகள் தங்கள் மக்களுக்கு எதுவும் செய்யாததாலேயே தான் அவர்களுக்கு சேவை செய்வதாக அண்மையில் வடக்கு மாகாண ஆளுனர் கூறியிருந்தார். அவர் வடக்கின் அரசியல்வாதிகள் மீது இவ்வாறான குற்றச்சாட்டுக்களை தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்றார். முல்லைத்தீவில் இராணுவ அதிகாரியொருவர் தமிழர்களுக்கு செய்த சேவைகள் விதந்து பாராட்டப்பட்டன. இவை எதனை உணர்த்துகின்றன? தமிழர் தலைமைகள் மக்களின் அபிவிருத்தி தொடர்பில் ஏன் அக்கறை கொள்கின்றார்கள் இல்லை?

யுத்தத்துக்கு பிறகு தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளுக்கு உரியமுறையில் தீர்வினை வழங்க வேண்டும் அல்லது அவர்களது உரிமைப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்பதில் அரசு தீவிரம் காட்டவும் இல்லை அதற்கான சரியான பாதையில் செல்ல ஆரம்பிக்கவும் இல்லை.

அவர்களைப் பொறுத்தவரையில் ஆளுனரை வைத்துக்கொண்டு ஒரு அரசியலை செய்கின்றது. குறிப்பாக, வடக்கில் ஓடுவது தமிழர்களின் இரத்தமல்ல, இராணுவத்தின் இரத்தமே என்று இரத்தக் கதைகளையும் கதைத்துக்கொண்டு, தன்னையொரு அரசியல்வாதியாக அடையாளப்படுத்திக் கொண்டிருக்கின்றார் வடக்கு மாகாண அளுனர். ஆனால் அவர் ஆளுனராகப் பொறுப்பேற்பதை கண்டியிலுள்ள அவருடைய இரத்தங்கள் அனுமதிக்கவில்லை. அங்கேயே அவருக்கு அவ்வளவு எதிர்ப்புள்ளபோது, அவர் தமிழ் மக்களுக்கு இரத்தம் பற்றிப்போதிக்கின்றார்.

தமிழ் மக்கள் அபிவிருத்தியை விரும்பவில்லை, அல்லது முதலமைச்சர் விரும்பவில்லை என்று சொல்வதெல்லாம் மக்களிடையே ஒரு குழப்பத்தை உண்டுபண்ணுவதற்காக அவரால் கதைக்கப்பட்ட வார்த்தைகள்.

வடக்கு மாகாண சபையில் சம்பளம் வழங்குவதற்கே ஏறத்தாழ 4000 மில்லியன் ஒரு வருடத்துக்குத் தேவைப்படுகின்றது. ஆனால் அரசினால் வடக்கு மாகாணத்துக்கென 6000 முதல் 7000 மில்லியன் வரையே நிதி ஒதுக்கப்படுகின்றது. இந்த நிதியில் அவர்கள் சம்பளமும் வழங்கி, அமைச்சுகளினூடான அபிவிருத்தி பற்றி ஓரளவுக்ேக அவர்களால் பேச முடியும்.

ஆனால் யுத்தத்தின் பின்னரான மக்களின் தேவைகளோ மிகவும் அதிகமானவையாக உள்ளன. எதிர்பார்ப்புகள் பாரியவையாக உள்ளன. இந்நிலையில் அவற்றைப் பூர்த்தி செய்யக்கூடிய வகையில் அரசின் நிதியொதுக்கீடுகள் இல்லை. ஆனால், காசை ஒதுக்காமல் மக்களை பகடைக்காய்களாக வைத்துக்கொண்டு மக்களின் பிரச்சினைகளையும் தீர்க்காமல், தாங்கள் அபிவிருத்தி செய்வதாகக்கூறிக் கொண்டு ஒரு மாற்று வழிய அவர்கள் கையாள்கின்றார்கள.

இதனைத்தான் இராணுவத் தளபதியும் சொல்கின்றார். தாங்கள் மக்கள் பணி செய்வதாக, இராணுவம் அதனது இராணுவப் பணியை அல்லவா செய்யவேண்டும்?

வடக்கில் வீதி நிர்மாணப் பணிகளுக்கான ஒப்பந்தம் இராணுவத்திடம் வழங்கப்படுகின்றது. இங்குள்ள அரச மற்றும் தனியார் பண்ணைகளை அடாத்தாகப் பிடித்துக்கொண்டு இராணுவப் பிரிவொன்று இயங்குகின்றது. முழுக்க முழுக்க அரசின் நிகழச்சி நிரலுக்கமைய தமிழர்களை ஒரு திறந்தவெளிச் சிறைச்சாலைக்குள் வைத்திருப்பதற்காக இராணுவம் ஒரு கருவியாகச் செயற்படுகின்றது.

மக்களை தனது வலைப்பின்னலுக்குள்ளேயே வைத்துக் கொண்டு தமிழர்களை தொடர்ந்தும் கையேந்தும் மனிதர்களாக வைத்திருப்பதையே இராணுவம் விரும்புகின்றது. அபிவிருத்தி என்ற சொல்லை வைத்துக்கொண்டு, அவர்களை அடிமைகளாக வைத்திருப்பதையே இராணுவம் விரும்புகின்றது.

இதனையே தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வென்பது அவர்களது பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதன் மூலமே என்று அண்மையில் கோட்டாபய ராஜபக்ஷ கூறியிருந்தார். இதிலிருந்து சிங்களத் தலைவர்கள் எவரும் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கத் தயாராக இல்லை என்பது புலனாகின்றது. சிங்களத் தலைவர்கள் எல்லோரும் சிங்கள பேரினவாத சிந்தனைகளோடுதான் இருக்கின்றார்கள் என்பதை இது மிகத் துலாம்பரமாகக் காட்டுகின்றது.

Qயுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட இந்த 09 ஆண்டுகளில் இலங்கையை தொடர்ச்சியாக ஆண்ட அரசாங்கங்கள் தமிழர் பகுதிகளில் என்னென்ன அபிவிருத்தியை மேற்கொண்டன?

அவர்கள் மேற்கொண்ட அபிவிருத்திகள் தமிழர்களின் பொருளாதார நிலைமைகளை மேம்படுத்தியுள்ளனவா? என்று பாரப்பது மிகவும் முக்கியமானது.

தமிழர் பகுதிகளில் 1983 க்கு முன்னர் காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலை, நீர்வேலியில் கண்ணாடித்தொழிற்சாலை, நாவற்குழயில் இறால் பதனிடும் தொழிற்சாலை, ஸ்கந்தர்புரத்தில் சீனித்தொழிற்சாலை, வட்டக்கச்சியில், விவசாயப் பண்ணை, ஒட்டிசுட்டான் ஓட்டுத்தொழிற்சாலை, பரந்தன் இரசாயத் தொழிற்சாலை, ஆனையிறவு உப்பளம் என்று, வடக்குக் கிழக்குப் பகுதிகளில் தொழில் தரக்கூடிய தொழிற்சாலைகள், தொழில் மையங்கள் இருந்தன. இங்கே இளைஞர்கள் யுவதிகள் வேலைக்குச் சென்று வரக்கூடிய காலச்சூழல் இருந்தது.

ஆனால் 2009 இன் பின்னர் வந்த அரசாங்கங்களால் ஒரு தொழிற்சாலையைக்கூட உருவாக்க முடியவில்லை. ஆனையிறவு உப்பளம் மட்டும் ஒரு அமைச்சுக்குள் ஒரு குறுகிய மட்டத்தில் கொண்டுசெல்லப்படு கின்றதே தவிர, தொழிற்சாலை மயப்படுத்தப்பட்ட வேலைத்திட்ட மெதுவும் தமிழர் பிரதேசங்களில் இதுவரை இல்லை.

அரசைப் பொறுத்தவரை தமிழர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குதல், அவர்களை பொருளாதார ரீதியில் மேம்படுத்துதல், அவர்களை கல்வி ரீதியாக உயர்த்துதல் என்பன கிஞ்சித்தும் அது ஆர்வம் கொண்டிருக்க வில்லை.

பொருளாதார ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் தமிழர்கள் வளரும் சாத்தியங்கள் அதிகமானவை. அவர்கள் அவ்வாறு வளர்ந்தால், அது சிங்கள அரசுக்கும் சிங்கள ஏகாதிபத்தியத்துக்கும் ஆபத்தாக அமையலாம் என்கின்ற பயம் தொடர்ந்து வரும் அரசாங்கங்களிடத்தில் இருக்கின்றது. இதற்கொரு உதாரணம் சொல்கின்றேன்.

வடக்கு மாகாணத்தின் முன்னாள் கல்வியமைச்சர், வலய வாரியம் என்கின்ற விடயத்தைக்கொண்டு வந்தார். கல்வி பற்றிய பாரிய ஆய்வைச்செய்து மாற்றங்களைக் கொண்டுவர விளைந்தபோது மத்திய அரசு அதனை தாங்களும் நடைமுறைப்படுத்த அதிக கரிசனை காட்டியதை என்னால் அவதானிக்க முடிந்தது.

தமிழர்களன் கல்வி ரீதியாக முன்னேறுவது அரசைப்பொறுத்தவரை பிடிக்காத விடயமே, ஆனால் தமிழ் இளைஞர்கள் வாள்வெட்டில் ஈடுபடுவது, போதை, மதுவுக்கு அடிமையாதல் போன்றவற்றை அது மகிழ்ச்சியோடு பார்த்து நிற்கின்றது. தமிழர்களின் பொருளாதார அபிவிருத்தியில் அரசு எந்த முனைப்பும் காட்டவில்லையென்றே நான் சொல்வேன்.

Qஅதற்காக தமிழ் மக்களுக்கு அபிவிருத்தி தேவையில்லையென ஒதுக்கிவிடவும் இயலாதல்லவா?

நீங்கள் பார்த்திருப்பீர்கள். கடந்த 2015 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தல்களில் எங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் மிகத் தெளிவாக நாங்கள் ஏறத்தாழ 50 வீதம் எங்கள் மக்களின் அபிவிருத்தி பற்றியே குறிப்பிட்டிருக்கின்றோம். அரசியல் தீர்வு எங்கள் பிரதான இலக்காக இருக்கின்றது.

எங்கள் இரண்டு கண்களின் மிகப்பிரதான பார்வை அரசியல் உரிமை பற்றியதாக இருக்கும்போது, மற்றைய கண் பொருளாதார அபிவிருத்தி, மக்களுடைய வாழ்வாதாரம், வேலைவாய்ப்புப் பற்றிய விடயங்களை மையப்படுத்தி விஞ்ஞாபனத்தை முன்வைத்தோம். ஆகவே இந்த விடயங்கள் தொடர்பில் நாங்கள் மிகத் தெளிவாக இருக்கின்றோம்.

தற்போது நாங்கள் கைப்பற்றிய உள்ளூராட்சி மன்றங்களின் ஊடாகக்கூட, அபிவிருத்தி நடவடிக்கைகளைத்தான் நாங்கள் மேற்கொள்கின்றோம். மாகாண சபைக்கூடாக, மாகாணசபையின் அதிகாரத்தைப் பயன்படுத்தி, தொழிற்சாலையை உருவாக்கவோ, அல்லது வேலைவாய்ப்ைப வழங்கவோ, அல்லது மக்களுக்கான தொழில் மையங்களை உருவாக்கவோ தேவையான எந்த அதிகாரமும், வடக்கு மாகாண சபைக்கோ அல்லது எந்த மாகாண சபைக்குமோ இல்லை. இந்த நிலையில் மாகாண சபையால் என்ன செய்ய இயலும்? எதுவும் செய்ய இயலாது.

உண்மையில் அதுவொரு பஞ்சாயத்து சபையைப்போலத்தான் இருக்கின்றது. அதிகாரமில்லாத சபையை வைத்துக் கொண்டு தமிழர்கள் அபிவிருத்தி விரும்புகின்றார்கள், அரசியல் தீர்வை விரும்பவில்லை என்றால் இத்தனை வருடங்களாக நாங்கள் எதிர்பார்த்ததும் போராடியதும், செத்ததும் கூட இந்த அரசியல் உரிமைகளுக்காகத்தானே, அரசியல் உரிமை என்பதற்காக நாங்கள் பொருளாதார அபிவிருத்தியை நிராகரிக்கவில்லை.

இரண்டையும் இரண்டு கண்களாக வைத்தே நாங்கள் பயணிக்கின்றோம்.

Qபலாலி விமான நிலையத்தைப் பிராந்திய விமான நிலையமாக மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதுதொடர்பிலான பேச்சுவார்த்தைகளில் கூட்டமைப்பும் கலந்து கொண்டது. கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன?

அது ஒரு பிராந்திய விமான நிலையமாக அமைவதை விட சர்வதேச விமான நிலையமாக அமைவதையே நாங்கள் விரும்புகின்றோம். இலங்கைக்குள்ளேயே உள்ளூர் விமான சேவைகளை மாத்திரமே நடத்துவதற்கான ஒரு விமான நிலையமாக அது அமைவதில் எந்த அர்த்தமும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, முன்னர் பலாலியில் இருந்து திருச்சிக்கோ சென்னைக்கோ போய்வரக்கூடியதாக இருந்தது. அது தூரம் குறைந்ததும் செலவு குறைந்ததுமான விமான சேவையாக இருந்தது. ஆனால் அவ்வாறில்லாமல் உள்நாட்டு விமான நிலையமாக அதனை அமைப்பதிலேயே தற்போது கவனம் செலுத்தப்படுகின்றது. சர்வதேச விமான நிலையமாக அது அமையுமானால் அதனை வரவேற்க நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

இங்கிருந்து லண்டனுக்குக்கூட எங்களது நச்சுத்தன்மையற்ற விவசாய உற்பத்திகளை நாங்கள் ஏற்றுமதி செய்யக்கூடியதாக இருக்கும்.

எங்கள் ஏற்றுமதிகளை ஊக்குவிக்ககூடியதாக இருக்கும்.

Qமாகாண சபைத்தேர்தல்கள் விரைவில் இடம்பெறலாம் என்று பேச்சடிபடுகின்ற நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் யார் என்பது பற்றிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளனவா?

கூட்டமைப்பின் வேட்பாளர் யார் என்பது இன்னமும் முடிவுசெய்யப்படவில்லை. ஆனால் இலங்கை தமிழரசுக்கட்சியில், மாவை சேனாதிராஜா வேட்பாளராக இருக்கவேண்டும் என்பதில் கட்சி உறுப்பினர்கள் பலரும் எதிர்பார்ப்பைக் கொண்டுள்ளனர். இதுபற்றி கூட்டமைப்பின் ஏனைய பங்காளிக் கட்சிகளுடன் இனிமேல்தான் பேசவேண்டும். ஆனால் தேர்தல் உரிய காலத்தில் நடக்குமா? எந்த முறையில் நடக்கும்? என்பது தெரியவில்லை. தேர்தலே நடைபெறுமா என்பது கேள்விக்குறியாக இருக்கும் நிலையில் வேட்பாளரைப் பற்றி பெரியளவில் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை.

Qபுதிய முறையில் தேர்தல் நடக்குமாயின் தமிழர்களுக்குப் பாதகமாய் அமையுமா?

அவ்வாறாயின் ஐம்பதுக்கு ஐம்பது எனும் முறையிலேயே மாகாண சபைத்தேர்தல்கள் நடைபெறும். மாகண சபைகளில் எவராலும் பெரும்பான்மையை எட்டமுடியாது. அது நிச்சயம் தமிழர்களுக்குப் பாதகமானதாகவே அமையும். நடந்துமுடிந்த தேர்தல் எமக்குப் பாதகமான பல விளைவுகளைத் தந்திருக்கின்றது. விகிதாசார முறைமைைய நாங்கள் முதலில் எதிர்த்தாலும் மக்கள் இப்போது அதனையே விரும்புகின்றார்கள். அல்லது 70க்கு 30 என்ற அடிப்படையில் தேர்தல் முறை மாற்றப்படுமானால் அதனை நாங்கள் நிச்சயம் வரவேற்போம். இதில் இன்னொரு விடயம் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். நாங்கள் 70க்கு 30 ஆக தேர்தல் முறையை மாற்றும் போது மலையகத்திலும் மற்றும் ஏனைய இடங்களிலும் உள்ள தமிழ் மக்களின் உரிமைகள் நசுக்கப்படும். எனவே எங்கள் நலனை மாத்திரம் கருத்தில் கொள்வதால் தென்னிலங்கையிலும் மலையகத்திலும் உள்ள தமிழர்களின் உரிமைகள் பறிக்கும் நிலைக்குத் தள்ளப்படுவதை நாம் விரும்பவில்லை. விகிதாசார தேர்தல் முறைமையே என்னைப்பொறுத்தவரை பொருத்தமானதாய் இருக்கும்.

Qஅண்மையில் முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் விடுதலைப் புலிகளைப் பற்றித் தெரிவித்த கருத்து பலத்த எதிர்ப்பலைகளைச் சம்பாதித்திருந்தது. 2009 இல் தமிழர்களின் ஆயுதப்போராட்டம் மெளனிக்ககப்பட்ட பின்னர் தமிழ் அரசியல் தலைவர்கள் பலர் தங்கள் அரசியல் நலனுக்காக விடுதலைப்புலிகளின் நாமத்தை உபயோகிக்கின்றார்கள் என்ற குற்றட்டச்சாட்டு பரவலாக இருக்கின்றதே?

விஜயகலா மகேஸ்வரனுக்கு விடுதலைப் புலிகளை வைத்து அரசியல் செய்ய வேண்டிய தேவை எதுவும் இருப்பதாக நான் நினைக்கவில்லை அவருக்கென்றொரு அரசியல் பின்புலம் இருக்கின்றது. விடுதலைப்புலிகளின் காலத்திலேயே அரசியல் பலத்துடன் இருந்தவர் அவரது கணவர். அந்த பலமான அரசியல் பின்புலத்தினாலேயே விஜயகலா மகேஸ்வரன் 2010 ஆம் ஆண்டு வெற்றி பெற்றார். 2015 ஆம் ஆண்டு தான் கற்றுக் கொண்ட அரசியல் பாடங்களாலும், தனது பணபலத்தாலும் அவர் வென்றார். எனவே அவரோ வேறெந்த தமிழ் தலைவரோ எவராக இருந்தாலும் தமது கண்முன்னால் விடுதலைப் புலிகளின் ஆட்சியைப் பார்த்தவர்கள் அவ்வாறே கூறுவார்கள்.

முப்படைகளையும் வைத்து ஒரு பெரிய நாட்டை நிர்வகிப்பதுபோல பொருண்மியத்துறை, கல்வித்துறை, நீதி, நிர்வாகத்துறை, என உலகமே பார்த்து வியந்த ஒரு அரசியல் ஆட்சியை செய்து காட்டியவர்கள் விடுதலைப்புலிகள். அவர்களுடைய காலத்தில் சிறுமிகள் கொல்லப்படவில்லை, பாலியல் பலாத்காரம் நடைபெறவில்லை. குள்ள மனிதர்கள் வரவில்லை, கிறீஸ் மனிதர்கள் வரவில்லை. கஞ்சா என்ற சொல்லைக் கூட நாங்கள் கேள்விப்பட்டதில்லை. இப்போது அவையனைத்துமே தாராளமாக எங்கள் பகுதிகளில் நடக்கின்றன.

இப்போது கஞ்சா தாராளமாக வருகின்றது. வாள்வெட்டு தாராளமாக நடக்கின்றன. அதனை தூண்டுவதில் இராணுவம் பின்னணியில் நிற்கின்றது. சிறுமிகள் பலாத்காரப்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்படுகின்றார்கள். இந்த நிலையிலே, ஒரு பெண்ணாக ஒரு தாயின் வடிவத்திலே அவர் அதனைச்சொல்லியிருந்தால் அதில் தவறேதும் இருப்பதாக எனக்குப்படவில்லை. அதன்மூலம் விடுதலைப்புலிகைள வைத்து அரசியல் செய்வதாக யாரும் கருதினால் அது தவறானது. அவரது ஆள்மன வெளிப்பாடாக. விடுதலைப் புலிகளின் காலத்தில் இவ்வாறெல்லாம் நடக்கவில்லை, அவர்கள் மீள வரவேண்டும் என சொல்ல வேண்டிய சூழலை ஏற்படுத்தியது யார்?

இன்னொரு விதமாகச் சொல்வதானால், விடுதலைப்புலிக்ள இருக்கும்போது சமஷ்டி பற்றி ரணில் விக்கிரமசிங்க பேசியிருந்தார். தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வழங்க வேண்டுமென்பதில் சிங்களத் தலைவர்கள் அனைவருமே ஒரே விதமாகக் கதைத்தார்கள். இப்போது அரசியல் தீர்வு பற்றியே பேசுகின்றார்கள் இல்லை. விடுதலைப்புலிகள் இருந்தால்த்தான் தெற்கில் உள்ளவர்கள் அரசியல் தீர்வு பற்றிப் பேசுவார்களானால், அவர்கள் திரும்பி வரவேண்டும் என விஜயகலா மகேஸ்வரன் போன்றோர் சொல்வதில் தவறேதும் இல்லை.

Leave A Reply

Your email address will not be published.