யுவதி ஒருவரின் உடலில் ஒரு வகை எண்ணெயை பூசி, அந்த யுவதியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பேய் விரட்டும் தொழிலை செய்து வந்த இளம் பூசாரிக்கு அனுராதபுரம் மேல் நீதிமன்ற நீதிபதி நேற்று 9 ஆண்டு கடூழியச் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
ஆடை தொழிற்சாலையில் பணிப்புரிந்து வந்த யுவதிக்கு பிடித்துள்ள பேயை விரட்ட சந்தேக நபர் பூசை நடத்த வேண்டும் எனக் கூறி, யுவதியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்.
புத்தளம் தப்போவ பிரதேசத்தை சேர்ந்த 32 வயதான ரன்ஹாமீகே சுரேஷ் ஷெல்டன் என்ற நபருக்கே இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட யுவதிக்கு ஒரு லட்சம் ரூபா இழப்பீட்டை வழங்குமாறு உத்தரவிட்ட நீதிபதி, இழப்பீட்டை வழங்க தவறினால், மேலும் 12 மாதங்கள் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
அனுராதபுரம் நீதிமன்ற அதிகாரத்திற்கு உட்பட்ட ராஜாங்கன பொலிஸ் பிரிவில் கலாஓயா பிரதேசத்தில் கடந்த 2012ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30 ஆம் திகதி இந்த சம்பவம் நடந்துள்ளது.
27 வயதான யுவதியே பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். சந்தேக நபருக்கு எதிராக சட்டமா அதிபர் அனுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.