பெற்றோர் பிள்ளைகளுடன் சிநேகபூர்வமாக பேசுவது குறையும் போது அப்பிள்ளைகள் தீய வழிகளில் செல்லவும் தவறான சினேகிதர்களுடன் பழகுவதும் இளவயது காதல் வயப்படுவதும் ஏற்படுகின்றது.அதனை தடுக்க பெற்றோர் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் எவ்வளவு பணிச்சுமையில் இருந்தாலும் பிள்ளைகளிடம் அன்பாக பேசி சிநேகபூர்வமாக பழக நேரம் ஒதுக்க வேண்டும் என சமுதாய மருத்துவ நிபுணர் முரளி வல்லிபுரம் தெரிவித்தார்.
நேற்று 17ம் திகதி மாலை திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கிடையே அதிகரித்து வரும் உடல் பருமன் அதிகரிப்பால் ஏற்படப்போகும் பாதிப்புக்கள் தொடர்பாக நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இவ்வாறு தெரிவித்தார்.
எதிர்கால சமூகத்தின் நலனில் அக்கறை கொண்டு பட்டணமும் சூழலும் பிரதேசசபை தலைவர் வைத்திய கலாநிதி ஜி. ஞானகுணாளன் தலைமையில் பிரதேச சபை மண்டபத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது.
தொடர்ந்து உரையாற்றிய வைத்திய கலாநிதி முரளி வல்லிபுரம் அவர்கள்,
இன்றைய காலகட்டத்தில் குடியிருப்பு காணியில் அளவு மிகக் குறைவாக உள்ளமையினாலும் தேவையற்ற உணவுப் பழக்கம் நவீன தொழினுட்ப யுகம் காரணமாக உடலுக்கு தேவையான பயிற்சிகள் எம் மத்தியில் மிகவும் குறைவடைந்து செல்கிறது.அதன் காரணமாக உடல் பருமன் ஏற்பட்டு இறுதியாக பெண் பிள்ளைகள் தாய்மையடையாமல் போகும் சந்தர்ப்பம் அதிகரிக்கிறது.இதனால் தமிழ் மக்கள் மத்தியில் சனத்தொகை குறைவடைகிறது.அந்த நிலையில் நாம் விழிப்படைந்து எமது ஆரோக்கியத்தை பாதுகாப்பதுடன் எதிர்கால இருப்பு தொடர்பாகவும் சிந்திக்க வேண்டும் என தெரிவித்தார்.
மற்றும் பிள்ளைகளை பொது விளையாட்டு மைதானங்களுக்கு விளையாட விடுவதன் மூலம் அவர்கள் தவறான நண்பர்களுடன் சேர்ந்து தீய பழக்கங்களில் ஈடுபடுவார்கள் என்று எண்ணினால் அது தவறு. வீட்டுக்குள் பாதுகாப்பாக வைத்து வளர்க்கும் பிள்ளைகளே இலகுவில் இவ்வாறான தீய போதைப் பொருள் பாவனைகளுக்கு அடிமையாகின்றனர்.எனவே பொது இடங்களில் பிள்ளைகளை விளையாட விட்டு அதனை பெற்றோர்கள் சரியான கண்காணிப்பு செய்தால் அவ்வாறான பிரச்சினைகளை தவிர்க்க முடியும் எனவும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பட்ணமும் சூழலும் பிரதேச சபையின் உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள், பொதுமக்கள், ஊடகவியலாளர் போன்றோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.