முல்லைத்தீவு – நாயாற்றுப் பகுதியில் கடற்றொழிலாளர்களின் வாடிகள் எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
இவர்கள் இன்று மாலை கைது செய்யப்பட்டிருந்ததாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெளிமாவட்டத்தைச் சேர்ந்த மூவரே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, கைது செய்யப்பட்டிருந்த குறித்த சந்தேக நபர்களை விடுவிக்கும் வகையில் ஆரம்பத்தில் பொலிஸார் செயற்பட்டதாகவும், எனினும் மக்களின் கடும் எதிர்ப்பினை தொடர்ந்து அவர்களை பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்றிருந்ததாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொலிஸார் இவ்வாறு பக்சசார்பான முறையில் நடந்து கொள்ள முயற்சித்த சம்பவமானது அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றத்தினை ஏற்படுத்தியிருந்ததாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
நேற்றிரவு 10 மணியளவில் உள்ளூர் மீனவர்களுக்கு சொந்தமான 8 வாடிகள் தீயிட்டு எரிக்கப்பட்டிருந்தன. கடும் பிரயத்தனத்திற்கு பின்னர் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
எனினும், 3 படகு இயந்திரங்கள், 2 இயந்திரங்கள், 27 வலைகள் உள்ளிட்ட பல இலட்சம் ரூபாய் பெறுமதியான கடற்றொழில் உபகரணங்கள் எரிந்து சாம்பலாகியுள்ளதாக உள்ளூர் மீனவர்கள் தெரிவித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.