யாழ். பருத்தித்துறையில் தியாகி பொன் சிவகுமாரனின் 68 அவது பிறந்த தினம் அனுஷ்டிக்கப்பட்டது. வலி-கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியகராசா நிரோஸ் தலைமையில், உரும்பிராயில் அமைக்கப்பட்ட சிவகுமாரனின் நினைவுத் தூபியில் இந் நிகழ்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.
இதன் போது சிவகுமாரனின் சகோதரிகள் உறவினர்கள், மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு, சிவகுமாரனின் உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலியும் செலுத்தியிருந்தனர்.
இந் நிகழ்வில் மாகாண சபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஐலிங்கம், விந்தன் கனகரட்னம், சபா.குகதாஸ் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டிருந்தனர். தமிழீழ விடுதலைப் போராட்ட ஆரம்ப காலகட்ட களச் செயற்பாட்டில் பொன். சிவகுமாரன் ஈடுபட்டிருந்த வேளை, இலங்கை பொலிஸாரினால் சுற்றி வளைக்கப்பட்ட தருணத்தில் சயனைட் அருந்தி 1974 ஆம் ஆண்டுஜூன் 5 ஆம் திகதி அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.
தமிழின ஒடுக்கு முறைக்கு சிங்களம் வித்திட்டு கல்வி தரப்படுத்தலை வீசியபொழுது அதை எதிர்த்து தமிழினப் புரட்சிக்கு பொன். சிவகுமாரன் வித்திட்டவராவார். மேலும் ஆனி 6 ஆம் திகதி தமிழீழ மாணவர் எழுச்சி நாளாக பிரகடனப்படுத்தி கொண்டாடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.