அரசியல் கைதிகளின் விடயம் காளிகோவில் திருவிழா அல்ல! சம்பந்தரை சாடும் சங்கரி

0

அரசியல் கைதிகளின் விடயம் தொடர்பில் கொழும்பில் பிரதமர், சம்பந்தன், நீதி அமைச்சர், சுமந்திரன் என தீர்மானம் எடுக்க கூடியவர்கள் பலர் கூடி பேசிய போது அங்கு எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் பிறிதொரு தினத்தில் கூடி பேசுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பிறிதொரு தினத்தில் பேசுவதற்கு இதுவொன்றும் காளி கோவில் திருவிழா அல்ல,மாறாக உயிர்களோடு சம்மந்தப்பட்ட விடயம் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி இன்று கிளிநொச்சியில் ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தார். குறித்த ஊடக சந்திப்பு இன்று ( 29-09-2018) பகல் கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழர் விடுதலை கூட்டணி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன் போது கருத்து தெரிவித்த அவர்,

கொழும்பில் சுமந்திரன் கொலை முயற்சி சந்தேகநபர்கள் தொடர்பில் உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகள் மற்றும் அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளை நேரில் நான் சந்தித்தேன். குறித்த கைதிகள் மிக நீண்ட காலமாக சிறையில் வாழ்கின்றனர்.

சிறையில் உள்ள அரசியல் கைதிகள் சட்டம் தொடர்பில் அதிகம் அறிந்துள்ளார்கள். கைதிகளாக உள்ளவர்கள் நீண்ட காலமாக இருந்தால் அவர்கள் ஒருவாரம் வீடு சென்று திரும்புவதற்கு சட்டத்தில் இடம் உள்ளதாக கூறுகின்றனர்.

அவ்வாறு சட்டத்தில் இடம் உண்டு என்றால் அதை ஏன் இவர்கள் அனுபவிக்க முடியாதுள்ளது. பயங்கரவாத தடை சட்டத்தை தூக்கி வைத்துக்கொண்டு இவர்களை ஏன் துன்பப்படுத்துகின்றீர்கள். நீண்ட காலமாக அரசியல் கைதிகளாக இவர்கள் சிறைவாசம் அனுபவித்துவிட்டார்கள்.

இந்த நிலையில் சுமந்திரன், சம்பந்தன், பிரதம அமைச்சர், நீதி அமைச்சர் என பலர் கூடி பேசினர். ஆனால் அங்கு தீர்மானம் எடுக்க முடியாது போயுள்ளதாகவும், பிறிதொரு தினம் தீர்மானிக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. அந்த கலந்துரையாடலில் தீர்மானம் எடுக்கக் கூடிய முக்கியஸ்தர்கள் இருந்தனர். ஏன் அவர்களால் தீர்மானம் எடுக்க முடியவில்லை.

பிறிதொரு திகதியிடப்பட்டு நாள் குறித்து செய்வதற்கு இது ஒன்றும் காளிகோவில் விழா அல்ல. திருமண சடங்குகளோ அல்ல. அப்பாவிகளின் உயிரோடு சம்மந்தப்பட்டது. இவ்வாறு தீர்மானம் எடுக்க முடியாத கலந்துரையாடல்களில் ஏன் ஈடுபடுகின்றீர்கள் எனவும் கேள்வியெழுப்பினார்.

சுமந்திரன் கொலை முயற்சி சந்தேக நபர்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த ஆனந்தசங்கரி,

சிலரது சுய நோக்கத்திற்காக சுமந்திரனை கொலை செய்ய வந்ததாக கூறி அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. சுமந்திரனின் மனச்சாட்சிக்கு தெரியும் அவர்கள் சுமந்திரனை கொலை செய்ய வந்தார்களா என்பது.

அவருக்கு அச்சுறுத்தல் இருந்ததா என்பதும் அவருக்கு தெரியும். இந்நிலையில் கொழும்புக்கு சென்றவர்களை இவ்வாறு கைது செய்து சிறையில் வைத்துள்ளனர். அவர்கள் பிணையினை மீறியிருக்கவும் இல்லை.

இவ்வாறு கொலை முயற்சி என்ற பெயரில் கைது செய்யப்பட்டுள்ளவர்களை பார்ப்பதற்கு அங்கு சட்டத்தரணிகளோ, உறவினர்களோ இல்லை. அவர்களை பிணை விடுவிக்கப்பட்ட பிரதேசத்திற்கு முதலில் மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.