ஆசியக்கிண்ணம் ! ஆப்கானிஸ்தானுக்கு ஆப்படித்த பங்களாதேஷ் ! இறுதி போட்டியில் விளையாடும் கனவு தகர்ந்தது

0

அபுதாபியில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட்டின் சூப்பர் 4 சுற்றில் நடந்த மற்றொரு போட்டியில் வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற வங்காளதேசம் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக லித்தன் தாசும், நஜ்மல் உசைன் ஷண்டோவும் களமிறங்கினர்.

லித்தன் தாஸ் 41 ரன்களுடனும், முஷ்பிகுர் ரகுமான் 33 ரன்களுடனும் அவுட்டாகினர். மற்ற வீரர்கள் அடுத்தடுத்து அவுட்டாகினர். இதனால் 87 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

அடுத்து ஜோடி சேர்ந்த இம்ருல் கெய்சும், மகமதுல்லாவும் இணைந்து பொறுப்புடன் விளையாடினர். இதனால் வங்காளதேசம் அணி 200 ரன்களை கடந்தது.

இறுதியில், வங்காளதேசம் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 250 ரன்களை எடுத்தது. மகமதுல்லா 74 ரன்களில் ஆட்டமிழந்தார். இம்ருல் கெய்ஸ் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 72 ரன்களை எடுத்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் சார்பில் அல்தாப் ஆலம் 3 விக்கெட்டும், முஜிபுர் நயீப், குல்புதின் நயீப் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

இதையடுத்து, 250 ரன்களை இலக்காக கொண்டு ஆப்கானிஸ்தான் அணி சேசிங் செய்ய தொடங்கியது. அந்த அணியில் முகமது மற்றும் இன்சானுல்லா ஆகியோர் தொடக்க ஆட்டக்காரகளாக களமிறங்கினர். இன்சானுல்லா 8 ரன்கள் மற்றும் ரக்மத் ஷா ஒரு ரன் என அடுத்தடுத்து தொடக்கத்திலேயே ஆட்டமிழந்து வெளியேறினர்.

பின்னர் 3-வது விக்கெட்டுக்கு முகமதுவுடன் ஜோடி சேர்ந்த ஹஸ்மதுல்லா ஷகிதி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால், ஆப்கானிஸ்தான் அணியின் எண்ணிக்கை சீரான அளவில் உயர்ந்தது. சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்த முகமது 53 ரன்களில் மகமதுல்லா பந்தில் போல்டு ஆகி வெளியேறினார்.

அடுத்து களமிறங்கிய அஸ்கர் ஆப்கன் 39 ரன்கள் குவித்து ஆட்டமிழந்த நிலையில், ஷகிதி 71 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். எனினும் முகமது நபி மற்றும் சென்வாரி ஆகியோரின் பொருப்பான ஆட்டத்தால் ஆப்கானிஸ்தான் அணி வெற்றியை நோக்கி பயணித்தது. ஆனால் அணியின் எண்ணிக்கை 238 ஆக இருந்த நிலையில் 38 ரன்கள் எடுத்திருந்த முகமது நபி ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பியதால் போட்டியில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

கடைசி ஓவரில் வெற்றிக்கு 8 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் முஸ்தாபிசுர் ரகுமான் பந்து வீசினார். முதல் பந்தில் 2 ரன்கள் அடித்த ரஷித் கான் இரண்டாவது பந்தில் ஆட்டமிழந்தார். மூன்றாவது பந்தில் பைஸ் முறையில் சென்வாரி ஒரு ரன் எடுத்தார், நான்காவது பந்தில் ரன் அடிக்காமல் குல்புதின் நயீப் வீணடித்தார்.

பின்னர் 5-வது பந்தை மீண்டும் அடிக்காமல் விட்ட நயீப், பைஸ் முறையில் ஓரு ரன் ஓடினார். கடைசி பந்தில் வெற்றி பெற பவுண்டரி அடிக்க வேண்டும் என்ற இக்கட்டான நிலையில் விளையாடிய சென்வாரி, முஸ்தாபிசுர் ரகுமான் வீசிய நேர்த்தியாக அந்த பந்தை வீணடித்தார். இதனால் வங்காளதேசம் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

வங்காளதேசம் அணி தரப்பில் மோர்டாசா மற்றும் முஸ்தாபிசுர் ரகுமான் தலா 2 விக்கெட்டுகள் கைப்பறினர். மகமதுல்லா மற்றும் ஷகிப் அல் ஹசன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுக்கள் வீழ்த்தினர்.

இரண்டு விக்கெட் மற்றும் கடைசி ஓவரை சிறப்பாக வீசி வங்காளதேச அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய முஸ்தாபிசுர் ரகுமான் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Leave A Reply

Your email address will not be published.