ஆசியக்கிண்ணம் ! இந்தியாவின் கொண்டையை பிடித்து ஆட்டிய ஹொங்கொங் ! போராடி வெற்றி பெற்றது இந்தியா

0
14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 6 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங் அணிகளும், ‘பி’ பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பிடித்துள்ளன.
இந்நிலையில் துபாயில் இன்று நடைபெறும் 4வது லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஹாங்காங் அணிகள் மோதின.  இதில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி பந்துவீச்சைத்  தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியின் சார்பில் ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இதில் கேப்டன் ரோகித் சர்மா 23(22) ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, அடுத்து தவான் உடன் அம்பதி ராயுடு ஜோடி சேர்ந்தார். இருவரும் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். பின்னர் இருவரும் அடுத்தடுத்து அரைசதம் அடித்து அசத்தினர். அதில் அம்பதி ராயுடு 60(70) ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார்.
3-வது விக்கெட்டுக்கு தவான் உடன் தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்தார். பின்னர் தனது அபாரமான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வந்த தவான், தனது 14-வது சதத்தினை பதிவு செய்தார். தொடர்ந்து விளையாடிய தவான் 127(120) ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய தோனி (0) ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறி அதிர்ச்சி அளித்தார். பின்னர் தினேஷ் கார்த்திக் 33(38) ரன்களும், புவனேஷ்வர் குமார் 9(18) ரன்னிலும், தாகூர் (0) ரன் ஏதும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இறுதியில் கேதர் ஜாதவ் ஆட்டமிழக்காமல் 28(27) ரன்கள் சேர்த்த நிலையில், இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 285 ரன்கள் சேர்த்தது.  ஹாங்காங் அணியின் சார்பில் அதிகபட்சமாக கின்சிட் ஷா 3 விக்கெட்டுகளும், கான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் ஹாங்காங் அணிக்கு 286 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
286 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன், ஹாங்காங் அணியின் சார்பில் நிஷாகட் கான், கேப்டன் அன்சுமான் ராத் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். சிறப்பான தொடக்கத்தை தந்த இந்த ஜோடியில், நிஷாகட் கான் தனது அரை சதத்தினை பதிவு செய்தார். அவரைத் தொடர்ந்து அன்சுமான் ராத்தும் தனது அரை சதத்தினை பதிவு செய்தார். இந்த ஜோடியின் விக்கெட்டை கைப்பற்ற முடியாமல் இந்திய பந்துவீச்சாளர்கள் போராடினர். ஒரு கட்டத்தில் 34 ஒவருக்கு 174 ரன்கள் என்ற வலுவான நிலையில் ஹாங்காங் அணி இருந்தது. அப்போது சிறப்பாக விளையாடிய கேப்டன் அன்சுமான் ராத் 73(97) ரன்களில் குல்தீப் யாதவ் பந்துவீச்சில் கேட்ச் ஆகி வெளியேறினார். அவரைத் தொடர்ந்து சதம் அடிக்க காத்திருந்த நிஷாகட் கான் 92 (115) ரன்களில் கலீல் அகமது பந்தில் வெளியேறினார். அடுத்ததாக களமிறங்கிய கார்டர் 3(11) ரன்னிலும், பாபர் ஹயத் 18(20) ரன்னிலும், கின்சிட் ஷா 17(15) ரன்னிலும், ஏஸஸ் கான் (0) ரன் ஏதும் எடுக்காமலும், மெக்கென்னி 7(6) ரன்னிலும், எஷான் கான் 22(24) ரன்னிலும் வெளியேறினர்.
முடிவில் அப்சல் 12(10) ரன்களும், நவாஸ் 2(3) ரன்களும் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இறுதியில் ஹாங்காங் அணி 50 ஒவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 259 ரன்கள் சேர்த்தது. இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக சாஹல், கலீல் அஹமது ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதன்மூலம் ஹாங்காங்கிற்கு எதிரான ஆட்டத்தில் 26 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது.

 

Leave A Reply

Your email address will not be published.