`இது விஜய் சேதுபதியா? வைரல் போட்டோ!

0

விஜய் சேதுபதி நடித்து வரும் `சீதக்காதி’ படத்தில் அவரது விவசாயி கெட்டப் என்று கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சமூக ஊடகங்களில் வைரலாகி லைக், ஷேர்களை அள்ளி ரசிகர்கள் இடையே வரவேற்பைப் பெற்றுள்ள அந்தப் புகைப்படத்தில் இருப்பது விஜய் சேதுபதி இல்லை என்பதுதான் அதிர்ச்சி தரும் விஷயம். அப்படி என்றால் அப்படத்தில் இருப்பது யார் என்ற கேள்வியோடு நாம் விசாரிக்கத் தொடங்கியபோதுதான் விவரம் தெரிய வந்தது.

அந்தப் படத்தில் இருப்பவர் நெல்லை மாவட்டம் சிந்துபூத்துறையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற இலக்கிய விமர்சகர் ஆசிரியர் கிருஷி. இவரின் புகைப்படம்தான் விஜய் சேதுபதியின் நியூ லுக் என சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. இதுகுறித்து ஆசிரியர் கிருஷியைத் தொடர்பு கொண்டு பேசினோம். `சார் அந்த போட்டோ’ என்றதும் கலகல என்று சிரித்துக்கொண்டே, “அது நான்தான்; விஜய் சேதுபதி இல்லை’ என்கிறார் ஆசிரியர் கிருஷி. மேலும், அந்தப் புகைப்படம் குறித்து பேசிய அவர், “சில வாரங்களுக்கு முன் சென்னையில் நடந்த சித்த மருத்துவ மாநாட்டில் எடுத்தது அந்தப் புகைப்படம். பின்புறத்தில் கண்ணாடி அணிந்து என்னுடன் இருப்பவர் என் நண்பரும் ஓய்வு பெற்ற வங்கி நிர்வாகியுமான சந்திரபாபு. நெல்லையைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் மதன் சுந்தர்தான் அந்தப் புகைப்படத்தை எடுத்தார்’’ என்கிறார்.

உங்கள் புகைப்படம் விஜய் சேதுபதியின் `நியூ லுக்’ என்ற பெயரில் பரவியது குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு,`மிகவும் மகிழ்ச்சியாகவும் பரபரப்பாகவும் உணருகிறேன். ஒரு வதந்தியால் என் புகைப்படத்துக்கு மில்லியன் கணக்கில் லைக்குகளும் ஷேர்களும் குவிந்து வருவதைக் கண்டு சந்தோஷம் அடைகிறேன்’’ என சிரித்துக்கொண்டே விடைபெறுகிறார் ஆசிரியர் கிருஷி.

Leave A Reply

Your email address will not be published.