கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக இரத்தினபுரி கொழுஆவில பாம்காடன் தோட்டத்தில் இடம்பெற்று வரும் போதைப் பொருள் பாவனை உட்பட சமூகத் தீமைகளுக்கு எதிராக போராடி வந்த குட்டித் தாரா என அனைவராலும் அழைக்கப்பட்டு வரும் தமிழ் தோட்டப் போராளி தனபால விஜேரத்னம் (வயது 36) காடையர் குழுவொன்றினால் நேற்று (19) மாலை சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த தமிழ் இளைஞன் மிகப்பலமான முறையில் தாக்கப்பட்டுள்ளதால் இறந்துள்ளதாக எழுத்து மூலம் குடும்ப உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ள இரத்தினபுரி மஜிஸ்ரேட் நீதிமன்றம் மிக அமைதியான முறையில் இளைஞனின் இறுதிக் கிரிகையை மேற்கொள்ளுமாறும் குடும்பத்தினருக்கு அறிவித்துள்ளது.
இரத்தினபுரி பாம்காடன் தோட்டத்தில் 150-200 இடைப்பட்ட தமிழ் குடும்பங்கள் பாரிய வறுமைக்கும் சமூகப் பிரச்சினைகளுக்கும் மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.
எனினும் இதே தோட்டத்தில் வசித்து வரும் பெரும்பான்மையின சமூகத்தைச் சேர்ந்த ஒரு முக்கிய நபர் ஒருவர் இரத்தினபுரி பொலிஸாரின் ஒத்துழைப்புடன் மிக நீண்ட காலமாக போதைப் பொருள் விற்பனையிலும் அதனை பலவந்தமாக தோட்டத்தில் உள்ள தமிழ் மக்களுக்கும் விநியோகம் செய்து வருவதால் இதற்கு எதிரான போராட்டத்தையே குட்டித் தாரா மேற்கொண்டு வந்ததாக இங்குள்ள தமிழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தப் பின்னனியில்தான் மேற்படி போதைப் பொருள் வியாபாரியின் பிள்ளைகள் மற்றும் அடியாட்கள் மூலம் விஜேரத்னம் என்பவர் நேற்று (19) மாலை 5;40 மணி அளவில் 4இற்கு மேற்பட்ட முச்சக்கர வண்டிகளில் வந்துள்ள காடையர்களின் உதவியுடன் பாம்காடன் சந்தியில் முச்சக்கர வண்டி ஓட்டுநராக தொழில் செய்து வந்துள்ள மேற்படி விஜேரத்னம் கடத்திச் செல்லப்பட்டு பலமாக தாக்கப்பட்டு பலராலும் மிருகத் தனமாக சித்திரவதை செய்யபப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அவரின் உறவினர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
படுகொலை செய்யப்பட்டுள்ள விஜேரத்னத்தின் சகோதரியொருவர் கருத்துத் தெரிவிக்கையில் ” எமது குடும்பத்தில் விஜேரத்னம் இரண்டாவது உறுப்பினர்.இவருக்கு 1 அக்காவும் 2 தங்கைகளும் உள்ளனர்.எமது அம்மா 9 வருடங்களுக்கு முன் இறந்தார்.எமது குடும்பத்தில் ஒரே ஆண் மகனாக இருந்த விஜே இன்று எங்களை விட்டுப் பிரிந்து சென்றுள்ளார்.எமது குடும்பத்தின் மீது மிகுந்த அக்கறையுடன் செயற்பட்டு வந்த விஜே இன்று எங்கள் குழந்தைகளுக்காக போராடி தனது உயிரிமையும் விட்டுக் கொடுத்துள்ளார்.
அநியாயமாக கொலை செய்யப்பட்டுள்ள எமது விஜேக்கு நீதியை பெற்றுக் கொடுக்குமாறு பொலிஸ்மா அதிபரையும் ஜனாதிபதியையும் கேட்டுக்கொள்கிறேன்”,என அவர் தனது கவலையை முன்வைத்தார்.
விஜேரத்னத்தின் மற்றுமொரு சகோதரி கருத்துத் தெரிவிக்கையில் ” எமது சகோதரன் விஜே திருமணமானவர்.ஆனால் அவருக்கு பிள்ளைகள் எவருமில்லை.அவர் மேற்படி காடையர்களால் 3 தடவைகள் கடுமையாக தாக்கப்பட்டவர்.
போதை ஒழிப்பிற்காக 15 வருடங்களுக்கும் மேலாக போராடிய அவர் இன்று அதற்காக தனது உயிரையும் இழந்துள்ளார்.இவருடைய மரணத்தின் பின்னனில் பாதுகாப்பு தரப்பினர் சிலரின் ஒத்துழைப்புக்கள் இருக்கிறது என நான் நினைக்கிறேன்.
ஏனெனில் இறுதி வரைக்கும் இரத்தினபுரி பொலிசார் எமது வாக்குமூலத்தை பதிவு செய்ய மறுத்தனர்.நாம் பொய் சொல்வதாகவும் எனக்கு பைத்தியம் எனக்கூறியும் எங்களை திருப்பி அனுப்பினார்கள்.
இறுதியில் விஜே இறந்த செய்தி உறுதிப்படுத்தப்பட்ட பிறகுதான் எமது முறைப்பாட்டை இரத்தினபுரி பொலிசார் பதிவு செய்து கொண்டனர்.
இதுவரை இரத்தினபுரி பொலிசார் எமது சகோதரனின் போராட்டத்திற்கு எந்தவொரு உதவியையும் வழங்கவில்லை.
மாறாக போதைப் பொருள் வியாபாரியையே எப்போதும் பாதுகாக்க முன்வந்தனர்.
விஜே போதைப் பொருள் பாவனைக்கு எதிரான 4 வழக்குகளை இரத்தினபுரி நீதி மன்றத்தில் சந்தித்துக் கொண்டிருந்தார்.நாளைய (21)தினமும் அவர் மற்றொரு வழக்கை எதிர்கொள்ள வேண்டியிருந்தார்.
சில சந்தர்ப்பங்களில் அவர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, ஜனாதிபதி செயலகம் மற்றும் பொலிஸ் ஆணைக்குழுக்களிடமும் போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பாக பல முறைப்பாடுகளை முன்வைத்து வந்தார்.
இன்று அவர் எங்கள் மத்தியில் இல்லை. எமது இந்த ஏழை மக்களின் நல்வாழ்விற்காக தனது உயிரை துறந்து சென்றிருக்கும் எமது சகோதரனின் எதிர்பார்ப்புக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதுதான் எங்கள் அனைவருடைய ஒரே பிராத்தனையாகவும் இருக்கிறது”,என அச்சகோதரி மிகுந்த மன வேதனையுடன் குறிப்பிட்டார்.
மேற்படி கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் மாத்திரம் இரத்தினபுரி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவத்துடன் நேரடித் தொடர்புள்ள பலர் தலைமறைவாகியுள்ளனர் எனவும் இரத்தினபுரி பாம்காடன் தோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.