என் பிள்ளை சாவதற்கு முன்னர் எனக்கு வேண்டும்! கதறி அழும் தாயார்

0

தங்கள் விடுதலைக்காக உணவு அருந்தாமல் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் எங்கள் பிள்ளைகளை சாவதற்குள் மீட்டு கொடுப்பதற்கு எல்லோரும் ஒத்துழைப்பு தாருங்கள் அவர்கள் எங்களுக்கு உயிரோடு வேண்டும் என அனுராதபுரம் சிறைச்சாலையில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியான உணவு தவிர்ப்பு போராட்டத்தினை நடத்திவரும் தமிழ் அரசியல் கைதிகளான சுலக்சனின் சகோதரி, மற்றும் ஜெயச்சந்திரனின் தாய் ஆகியோர் கண்ணீர்மல்க கேட்டுள்ளனர்.

யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போது அரசியல் கைதியான சுலக்ஷனின் சகோதரி மோகனா தெரிவிக்கையில்,

எனது அண்ணா தற்போது ஐந்தாவது முறையாகவும் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றார். ஒவ்வொரு முறையும் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுக்கும் போதும் வாக்குறுதிகள் வழங்கப்பட்டு அவை இடை நிறுத்தப்பட்டுள்ளன.

இவ்வாறு ஐந்து முறை கடந்த நிலையிலேயே தற்போது இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்கள். அவர்களது உடல் நிலை மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளது எனவே அவர்களுக்கு விடுதலை அல்லது குறுகிய கால புணர்வாழ்வளித்து விடுதலை செய்யவேண்டும். இதற்கு அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைக்கவேண்டும் என்றார்.

தொடர்ந்து அரசியல் கைதியான ஜெயச்சந்திரனின் தாயார் மாரிமுத்து தெரிவிக்கையில்,

2009ம் ஆண்டு எனது மகன் கைது செய்யப்பட்டு 2010ம் ஆண்டு 5ம் மாதம் 4ம் திகதி விடுதலை செய்யப்பட்டார். இதன் பின்னர் 2010ம் ஆண்டு 9ம் மாதம் 25ம் திகதி மீளவும் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்படும்போது விசாரணை நடத்திவிட்டு 3 மாதங்களில் விடுவிப்போம் என கூறினார்கள். பின்னர் 6 மாதம் என்றார்கள் ஆனால் 8 வருடங்களாகியும் விடுதலை செய்யப்படவில்லை.

எனது மகனுக்கு கொடுக்கும் உணவையும் பறிக்கிறார்கள். யானை மாதிரி இருந்த என்னுடைய பிள்ளை சாப்பிடாமல் பூனை மாதிரி ஆகியிருக்கின்றான். என்னுடைய பிள்ளை சாவதற்கு முன்னர் எனக்கு வேண்டும்.

என்னுடைய வீட்டுக்கு, மகன் விடுதலை செய்யப்பட்டபோதும், கைது செய்யப்பட்டதன் பின்னரும் புலனாய்வாளர்கள் வருகிறார்கள். எங்களை அச்சுறுத்துகிறார்கள். மகனை விடுதலை செய்துவிட்டார்களா? என கேட்கிறார்கள். இவ்வாறு நாம் அச்சத்துக்கு மத்தியிலேயே வாழ்ந்து வருகின்றோம். தயவு செய்து எனது மகனை விடுதலை செய்யுங்கள் என கதறி அழுதார்.

இதேவேளை இச் செய்தியாளர் சந்திப் பில் கலந்துகொண்ட விடுதலை செய்யப்பட்ட அரசியல் கைதியான கோமகன் தெரிவிக்கையில்,

தமிழ் அரசியல் கைதிகளுடைய வழக்குகளானது தொடர்ச்சியாக இழுத்தடிக்கப்பட்டுவருவதுடன் அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு எதுவித ஆதாரங்களும் இல்லை.

வெறுமனே குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தினை அடிப்படையாகக் கொண்டே வழக்குகளை தாக்குதல் செய்துள்ளார்கள். இக் குற்ற ஒப்புதல் வாக்குமூலமும் அவர்களால் சுயமாக வழங்கப்படவில்லை. மாறாக பயங்கரவாத தடுப்புப் பிரிவினுடைய வற்புறுத்தலின் அடிப்படையிலேயே அச்சத்தின் காரணமாக வழங்கப்பட்டதாகும்.

இவ்வாறான நிலையில் எமது வழக்குகளை விசாரணை செய்வதற்காக விசேட நீதிமன்றம் ஒன்று அமைக்கப்பட்டபோதும் அங்கு தற்போது அரசியல் கைதிகளின் வழக்குகள் விசாரிப்பதற்கு பதிலாக வேறு வழக்குகளே விசாரணை செய்யப்பட்டு வருவதுடன் மீண்டும் அரசியல் கைதிகளின் வழக்குகள் அநுராதபுரம் மேல் நீதிமன்றுக்கு மாற்றப்பட்டுள்ளன. அத்துடன் எமது வழக்கு விசாரணைகளின் போது சட்டத்தரணிகளும் எம் சார்பாக முன்னிலையாவதில்லை.

நீண்ட காலத் தவணைகளும் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டு வழக்கு விசாரணைகள் இழுத்தடிப்புச் செய்யப்படுகின்றன. இந்நிலையிலேயே அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி அவ் அரசியல் கைதிகளே கடந்த ஐந்து தடவைகள் உண்ணாவிரதப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.

இருந்தபோதிலும் அவ் ஐந்து தடவைகளும் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எவையும் நிறைவேற்றப்படாத நிலையில் தற்போது அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள எட்டு தமிழ் அரசியல் கைதிகளும் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்கள்.

இவ்வாறான நிலையில் அவ் அரசியல் கைதிகளின் விடுதலையை முதன்மைப்படுத்தி அதற்கான ஆக்கபூர்வமான தீர்வு ஒன்றைப் பெற்றுக் கொடுப்பதற்கு யாழ். பல்கலைக்கழக சமூகம் தமிழ் அரசியல் தலைமைகள் மற்றும் பொது அ மைப்புக்கள் ஆகியோர் முன்வரவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.