கணவன், மனைவியின் கை, கால்களை கட்டிவைத்துவிட்டு கொள்ளை!

0

கணவன், மனைவி ஆகியோரின் கை, கால்களை கட்டி வைத்துவிட்டு இனந்தெரியாத கும்பலொன்று தங்க ஆபரணங்கள் மற்றும் பணங்களை கொள்ளையடித்து விட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டவளை மாணிக்கவத்தை எனும் தனியார் தோட்டத்தின் உரிமையாளர் மற்றும் அவரின் மனைவி ஆகியோரின் கை மற்றும் கால்களை கட்டி வைத்து விட்டே இனந்தெரியாத குழுவினர் கொள்ளையிலீடுபட்டுள்ளனர்.

குறித்த உரிமையாளரின் விடுதிக்குள் புகுந்த கொள்ளையர்கள் விடுதியில் இருந்த தங்க ஆபரணங்கள் மற்றும் பணம் என்பவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளதாக வட்டவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று அதிகாலை வேளையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மாணிக்கவத்தை தோட்டத்தின் உரிமையாளரும், அவரின் மனைவியும் நித்திரையில் இருந்த சமயம் இனந்தெரியாத கொள்ளைக் குழுவினர்கள் தமது முகங்களை மூடியவாறு உள் நுழைந்து இருவரின் கை மற்றும் கால்களை கட்டி வைத்து விட்டு மேற்படி தங்க ஆபரணங்களையும், பணத்தையும் கொள்ளையடித்து தப்பித்து சென்றுள்ளதாக வட்டவளை பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் அளிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது வரையிலும் கொள்ளையடிக்கபட்ட தங்க ஆபரணங்கள் மற்றும் பணம் தொடர்பான பெருமதி தொடர்பில் பொலிஸார் அறிவிக்கவில்லை.

இதேவேளை சம்பவ இடத்திற்கு சென்ற வட்டவளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதோடு, கைரேகை பிரிவினரை அழைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் இதுவரையிலும் எவரும் கைதுசெய்யப்படவில்லையென தெரிவித்த வட்டவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.