காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்த விசாரணைகளில் தலையிடுகிறார் ஜனாதிபதி -ஐ.நா மற்றும் மேற்குலக நாடுகளிடம் முறையீடு

0

கொழும்பில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக நடத்தப்படும் நீதித்துறை விசாரணைகளில் ஜனாதிபதி தலையீடு செய்வதாகவும், அதனைத் தடுத்து நிறுத்துமாறு கோரியும், ஐ.நா மற்றும் மேற்குலக நாடுகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

2008ஆம் அண்டு கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக கொழும்பு நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

அந்த விசாரணைகளில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலையிடுவதாக, குற்றம்சாட்டி, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் நேற்று கொழும்பில் உள்ள ஐ.நா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, சுவிஸ் உள்ளிட்ட மேற்கு நாடுகளின் தூதரகங்களில் முறையீடு செய்தனர்.

11 பேர் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில், பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியான அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தனவை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை செய்ய முயன்ற போது, அவர் வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

அவரை ஜனாதிபதி பாதுகாக்க முற்படுகிறார் என்றும், காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் குறித்த நீதித்துறை விசாரணைகளில் அவர் தலையீடு செய்வதாகவும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் தலைவர் பிரிட்டோ பெர்னான்டோ குற்றம்சாட்டினார்.

“பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நீதி கிடைப்பதை ஜனாதிபதி உறுதிப்படுத்த வேண்டும்.

சந்தேக நபர்களைப் பாதுகாக்கும் வகையிலான ஜனாதிபதியின் செயற்பாடுகள், நீதியைக் கோரும் மக்களை நம்பிக்கையிழக்கச் செய்துள்ளது.

காவல்துறையும், நீதிமன்றமும் தமது கடமையைச் செய்வதற்கு ஜனாதிபதி அனுமதிக்க வேண்டும்.

ஜனாதிபதியின் தலையீட்டினால், விசாரணைகளை முன்னெடுக்க இப்போது காவல்துறை அஞ்சுகிறது.

காணாமல் போனோர் பணியகம் உண்மையைக் கண்டுபிடிக்க முனையும் போது, ஜனாதிபதி ஐ.நாவிடம் போய், போர்க்குற்றச்சாட்டுகளில் இருந்து படையினரை விடுவிக்குமாறு கோருவது முரணான செயலாக உள்ளது.

உண்மையைக் கண்டுபிடிப்பதற்கு நீதித்துறை செயல்முறை முக்கியமானது, ஜனாதிபதியின் தலையீடுகள் இருந்தால், காணாமல் போனோர் பணியகத்துக்கு சட்ட அதிகாரம் இல்லை. அதனால் ஒன்றும் செய்ய முடியாது.

இன்னொரு மகிந்த ராஜபக்ச எமக்குத் தேவையில்லை. அவர் எதையும் செய்யவில்லை.

எமது முயற்சி போர் வீரர்களை விமர்சிப்பதல்ல. ஆனால் கொலையாளிகள், தண்டிக்கப்பட வேண்டும். அவர்கள் குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்பட்டால் தண்டிக்கப்பட வேண்டும்.

அனைத்துலக சமூகம் அதிகமாக செய்ய வேண்டும். இந்தப் பிரச்சினை உள்ளூரில் தீர்க்கப்பட வேண்டும்.

ஜனாதிபதி எமக்கு துரோகம் செய்து விடக் கூடாது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, கனேடிய தூதுவர் டேவிட் மக்கினனிடம் மனுவைக் கையளித்த நிகழ்வில் உரையாற்றிய காணாமல் ஆக்கப்பட்ட மாணவன் ரஜீவின் தாயார் சரோஜினி நாகநாதன்,

“எனது மகன் ரஜீவ் கடத்தப்பட்ட போது 18 வயது. அப்போது அவர் பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தார். பிரிட்டிஷ் கவுன்சிலில் படித்துக் கொண்டிருந்தார். அவர் எப்படி விடுதலைப் புலி போராளியாக இருக்க முடியும்?

சந்தேக நபர்களை பாதுகாக்க வேண்டாம் என்று ஜனாதிபதியிடம் கூறுங்கள் என உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.” என்று கூறினார்.

தனது ஒரே மகன் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டதாக அவர் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.