குழந்தைகளை கொன்று காதலனுடன் ஓடும் முடிவை அபிராமி ஏன் எடுத்தார்?

0

ஆர்.அபிலாஷ்
தன் இரு குழந்தைகளைக் கொடூரமாய் கொன்றுவிட்டுத் தன் காதலனுடன் ஓடிப்போன அபிராமியைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஒரு தோழியிடம் இதைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கையில் “ஏன் குழந்தைகளைக் கொன்றாள்? அவற்றைக் கொல்லாமல் விட்டிருந்தால் வேறு யாராவது வளர்த்திருப்பார்கள் அல்லவா? ஏன் கொல்ல வேண்டும்? அதனால் அவளுக்கு என்ன லாபம்?” என்றெல்லாம் கேள்விகள் எழுந்தன.

எப்படி யோசித்தும் விடை தெரியாத கேள்விகள். சிக்குண்ட நூல்கண்டைப் பிரிப்பது போல நாங்கள் நீண்ட நேரம் இதையே சுற்றி சுற்றி வந்துகொண்டிருந்தோம்.

அடுத்து, நான் இணையத்தில் இது சம்பந்தமான சேதிகளை நிறைய படித்தேன். அவற்றைக் கொண்டு கீழ்வருமாறு ஒரு சித்திரத்தைத் தொகுத்துக்கொண்டேன்:

என்ன நடந்தது?

அபிராமி சுமார் 17 வயதில் விஜய்யைத் திருமணம் செய்துகொள்கிறார். காதல் திருமணம். இரு குழந்தைகள் பிறக்கின்றன. திருமண உறவுகள் பலவற்றில் நிகழ்வதுபோல அலுப்பும் மனஸ்தாபங்களும் ஏமாற்றமும் மிகுந்திட, வாழ்க்கை கசக்கிறது.

மண உறவுக்கு வெளியே பொழுதுபோக்காக ஒரு “காதல்” தோன்றுகிறது. காதலன் சுந்தரம் பிரியாணிக் கடையில் பில் போடுகிறவர்.

இதுவரையில் பெரிய விநோதம் இல்லை. பல இடங்களிலும் நடப்பதுதான். மண உறவுக்கு வெளியே முகிழ்க்கும் காதல்களே பல தாம்பத்ய உறவுகள் நிலைக்க உதவுகின்றன என ஓர் ஆய்வில் படித்திருக்கிறேன். வெளியே கசியாதவரை. அதாவது, கணவன் / மனைவி கோபித்துப் பிரச்சினை பண்ணாதவரையில், இத்தகைய காதல் திருமண வாழ்வின் அழுத்தத்தைக் குறைக்க உதவும் என்கிறது அந்த ஆய்வு (இதற்காக, எல்லாரும் பிறழ வேண்டுமென்றில்லை. பிறழ்ச்சி மட்டுமே குடும்பத்தைக் காப்பாற்றுகிறது என்பதும் இல்லை).

அபிராமியின் திருமணத்துக்கு வெளியிலான இந்தக் காதல் ஊருக்குத் தெரியவர, கணவன் இதனால் கோபமுற்று அது அடிதடியில் போய் முடிகிறது. இதுதான் இந்த வழக்கமான பிரச்சினையைக் கொலையை நோக்கிக் கொண்டுசெல்வதற்கான முதல் திருப்பம்.

கணவனிடம் கோபித்து அபிராமி சுந்தரத்தின் வீட்டில் சென்று சில மாதங்கள் வாழ்கிறார். சுந்தரமும் திருமணமானவரே. அவர் மனைவியின் எதிர்வினை என்னவெனத் தெரியவில்லை.

கணவர் செய்த தவறு

இந்தக் கட்டத்தில், கணவர் விஜய் விவாகரத்துக்கு விண்ணப்பித்திருக்கலாம். ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை. குழந்தைகளை யார் கவனிப்பது? ஆக, மனைவியை மீட்பதே தீர்வாக அவர் தரப்புக்குத் தோன்றுகிறது. இதுதான் அவர் செய்த தவறு.

பெண்கள் ஒரு முடிவை எடுத்த பின் அவர்களை வற்புறுத்தாமல் இருப்பது நல்லது. ஏனெனில், அவர்கள் ஏற்கெனவே பல முரணான சிந்தனைகளில் வயப்பட்டிருப்பார்கள். ஒருபக்கம் விடுதலை பெறும் ஆவேசம் இன்னொருபுறம் குடும்பத்தை விட்டு வந்துவிட்டோமே எனும் குற்றவுணர்வு எனக் கொந்தளித்துக்கொண்டிருப்பார்கள். இவர்களை மேலும் வற்புறுத்தினால் அவர்களின் வேதனையும் கோபமும் பல மடங்கு ஆகும். அது ஏதாவது ஒரு கட்டத்தில் யார் மீதாவது பாயும்.

கணவர் தரப்பின் மீட்புப் போராட்டம் அபிராமியின் அப்பாவின் நுழைவுடன் மோசமாகிறது. அபிராமியின் அப்பா பிரச்சினையை இன்னும் பெரிதாக்குகிறார். அவர் சுந்தரத்தை அடித்து மிரட்டுகிறார். அபிராமியை வீட்டுக்கு அழைத்து வந்து சில நாட்கள் காவலில் வைத்திருக்கிறார்கள்.

இயல்பாகவே, அபிராமி மீண்டும் தன் காதலன் சுந்தரத்தை நாடுகிறார். எப்படியாவது குடும்பச் சிறையிலிருந்து தப்ப வேண்டுமென ஏங்குகிறார்.

அப்போது சுந்தரம் கொடுக்கும் ஆலோசனையே விஷம் கொடுத்து குடும்பத்தை மொத்தமாய் அழிப்பது.

அபிராமியின் மனநிலை

கணவனை மட்டும் கொன்றாலும் அபிராமி விடுதலை பெறப்போவதில்லை. கணவன் தூக்க மாத்திரை உண்டு தற்கொலை செய்துகொண்டார் எனச் சித்திரித்து போலீஸிடமிருந்து தப்பித்துவிட்டாலும் அபிராமி தன் உறவுகளிடமிருந்து தப்பிக்க மாட்டார். மீண்டும் அவரைப் பிடித்து வந்து குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளுமாறு அவர் அப்பாவின் தரப்பு வற்புறுத்தும்.

மீண்டும் தன் வாழ்வைப் புத்தம் புதிதாய்த் தொடங்கும் விருப்பமும் அபிராமிக்கு இருந்திருக்கலாம். ஆகவே, குழந்தைகளையும் கணவரையும் கொல்லும் திட்டத்தைத் தீட்டுகிறார்கள்.

யோசித்துப் பார்த்தால், இது தர்க்கரீதியாய் கச்சிதமான முடிவாகவே தெரிகிறது. ஆனால், குரூரமானது (பெரும்பாலான தர்க்க முடிவுகளைப் போலவே).

இந்தக் குரூரத்தை, கொடூரத்தை அபிராமி உணராமலா இருந்திருப்பார்? நிச்சயம் உணர்ந்திருப்பார். ஆனால், கணவர் மீதும் அப்பா மீதும் இருக்கும் கோபம், தன் சுதந்திரத்தை அனுமதிக்காத குடும்பம், உறவினர் மற்றும் சமூகம் மீதான கோபம், தன்னை அவமதிப்போர் மீதான கோபம், சீக்கிரமே தப்பிக்க வேண்டும் எனும் ஆவேசம் ஆகிய எல்லாம் சேர்ந்து அவர் கண்ணை மறைத்துவிட்டன.

குழந்தைகளைக் கொன்று தப்பிச் சென்ற பின் அவர் தன் கணவன், உறவினர் எண்களுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்புகிறார்: “குழந்தைகளே போய்விட்ட பின் நான் மட்டும் ஏன் உயிர்வாழ வேண்டும்?”

இதைப் பசப்பு என நான் கூற மாட்டேன். அவருக்குள் தோன்றும் முரணான உணர்வுகளை இது காட்டுகிறது. கோப வெறியில் அவர் செய்தவற்றை நிதான நிலையில் நிச்சயம் செய்திருக்க மாட்டார்.

தாய்மையற்ற குணமா?

சமூக வலைதளங்களில் இதை விவாதிக்கும் பலரும் இந்தக் குற்றத்துக்கு அபிராமியின் காம வெறியும் ஒழுக்கமின்மையும் தாய்மையற்ற குணமுமே காரணம் எனச் சாடுகிறார்கள். ஆனால், நான் இதை ஏற்கவில்லை. தாய்மை உணர்வு மிக்கவர்களும் செய்ய வாய்ப்புள்ள ஒரு குற்றமே இது. கடன் தொல்லை காரணமாகக் குழந்தைகளைக் கிணற்றில் எறிந்து கொன்றுவிட்டு, தான் சாக முடியாமல் ஜெயிலுக்குப் போன பெண்களைப் பற்றிக் கேள்விப்பட்டதில்லையா? சில வருடங்களுக்கு முன் என் குடியிருப்பிலேயே இது நடந்தது. கணவன் மனைவி இருவரும் விஷம் அருந்தி குழந்தைகளுக்கும் கொடுத்தார்கள். ஒரு குழந்தைக்கு மட்டும் (இரண்டு வயது) குறைவாய் விஷம் அளித்ததால் அது பிழைத்துக்கொண்டது.

ஏன் இவர்கள் எல்லாம் குழந்தைகளைக் கொல்கிறார்கள்? யாருக்காவது தத்துக் கொடுத்துவிட்டுத் தான் மட்டும் சாக வேண்டியதுதானே? தெரியவில்லை. நம் மனம் இப்படித்தான் சிந்திக்கிறது.

அபிராமிக்குத் தாய்மை உணர்வே இல்லை என நான் சொல்ல மாட்டேன். அவருக்குத் தாய்மை உணர்வு சற்றுக் குறைவாய் இருந்திருக்கலாம். ஆனால், தன் பிள்ளைகளையே தற்காலிகமாய் வெறுக்கும் அளவு அவரது நிலைமை இருந்திருக்கிறது. அப்படி வெறுத்துக் கொல்லும் நிலைக்குப் போன பின்னரும் அவர் அக்குழந்தைகளை நேசித்திருக்கிறார் என இப்போது தெரிகிறது. அது எப்படிச் சாத்தியம்?

முரண்பாட்டு முடிச்சுகள்

நாம் அனைவரும் முரண்பாட்டு முடிச்சுகள். நம் மனம் ஒரே சமயம் எதிரெதிர் திசைகளில் பயணிக்கத்தக்கது. ஒரு மூர்க்கமான, உக்கிரமான மனநிலைக்கு, கண்மண் தெரியாத உணர்வு நிலைக்குத் தள்ளப்பட்டால், நம்மில் யாரும் இது போன்ற குற்றங்களைச் செய்யலாம். அப்படிச் செய்வதாலேயே ஒருவரைக் கொடூரர் என்று சொல்லிவிட முடியாது.

பெற்ற பிள்ளையைக் கொல்லலாமா? சமநிலை கொண்ட ஓர் இயல்பான பெண் அப்படி செய்வாரா? செய்ய மாட்டார். ஆனால், நம்மில் யாருமே சமநிலை இழக்க ரொம்ப நேரம் ஆகாது. நாம் பாதுகாப்பாக இருக்கிறோம். தொடர்ந்து எதிர்மறை சூழல்களில், விடையே இல்லாத நெருக்கடி நிலைமைகளில் மாட்டிக்கொள்ளாமல், ஏதோ ஒருவித ஆதரவுடன் இருக்கிறோம். அவை இல்லாமல் நிராதரவாகும் போகும் நாமும் பிறழ்வோம். எந்த எல்லைக்கும் செல்வோம்.

இதை நாம் உள்ளூர அறிவோம். நம் கண்ணெட்டும் எல்லைக்குள்ளாகவே அபிராமிகள் இருக்கலாம் எனும் எண்ணம் நம்மைப் பதற்றமாக்குகிறது. ஆகையால், அபிராமி காம வெறி கொண்டு குற்றம் செய்தவள், அவள் ஓர் அரக்கி என அவருக்கு மிகையான அடையாளத்தை அளிக்கிறோம். அதன் வழி நம் குடும்பம் பாதுகாப்பாய் இருப்பதாய் ஆறுதல் கொள்கிறோம். நம்மை சமாதானப்படுத்திக்கொள்ள அபிராமியைத் தூற்றுகிறோம். அபிராமியை நாம் பாராட்டுவது எப்படி அபத்தமோ அதைப் போன்றே அவரைத் தூற்றுவதும் அபத்தமே. புரிந்துகொள்வதே சரியான பாதை,

கல்வியறிவும் குற்றமும்

அபிராமியின் கல்வித் தகுதியைப் பற்றி என் தோழி விசாரித்தார். 17 வயதில் மணம் புரிந்தவர் என்றால் அவர் பள்ளி / கல்லூரி படிப்பை முடித்திருக்க மாட்டார். ஆக, சுயபுத்தியோ, பகுத்தறிவோ இல்லாத விடலை மனம் கொண்டவராக இருந்திருப்பார் என்றார். நான் தோழியிடம் திரும்பக் கேட்டேன், “எழுத்தாளர் சௌபா தன் மகனைத் திட்டமிட்டுக் கொன்று, பிணத்தை எரித்துத் தன் தோட்டத்தில் புதைக்கவில்லையா? அவர் அறியாத சமூகச் சிந்தனையா? அவர் வாசிக்காத நூல்களா? அவருக்கு இல்லாத பகுத்தறிவா? மகனைக் கொல்லும் அளவு என்ன பிரச்சினை? மகனைக் கொல்லாமல் தன்னால் உயிரே பிழைக்க முடியாது என்னும் அளவுக்கு அவருக்கு நெருக்கடி இருந்ததா? தாள முடியாத கோபம், பழிவாங்கும் எண்ணம் அவரை விசையாகச் செலுத்தியிருக்கலாம். கொன்ற பின் ஒருபக்கம் அதை மறைக்கும் முனைப்பும் மகனுக்காய் இரங்கி அழும் கொந்தளிப்பும் அவருக்குள் இருந்திருக்கும். அவர் அரக்கனா என்று கேட்டால் இல்லை என்பேன். தற்காலிகமாகத் தன் சுய கட்டுப்பாட்டை இழந்த, வன்மத்தால் வழிநடத்தப்பட்ட ஒருவர் என்றே அவரைக் குறிப்பிடுவேன். எங்கிருந்தோ இன்னும் கூடுதலாய் சற்று அன்பு, சற்று நம்பிக்கை, ஆறுதலாய் சில உறவுகள் அமைந்திருந்தால் அவர் தன் மகனைச் சுலபத்தில் மன்னித்திருப்பார். தன் கொலை எண்ணத்தைக் குழி தோண்டிப் புதைத்திருப்பார். ஆனால், காலம் அவரைக் கைவிட்டது.”

2006இல் சென்னையில் நடந்த இன்னொரு கொலைச் சம்பவம் எனக்கு நினைவு வந்தது. ஒரு போலீஸ்காரரின் பதினைந்து வயதுப் பெண்ணுக்கு காதல். இதை வைத்து வீட்டில் தினமும் சண்டை. ஒருநாள் வெறுப்பின் உச்சத்துக்குப் போன அந்தப் பெண் அம்மிக் குழவியால் அம்மாவின் தலையைச் சிதைத்தார். கொலையைக் கண்ட தன் தங்கையைத் தண்ணீர்த் தொட்டியில் மூழ்கடித்துக் கொன்றார். இதையடுத்து, செய்வதறியாமல் அப்பெண் ரயில் பாதையில் தனித்து நடந்து திரிந்தார். கொல்லும்போது அவரது நோக்கம் நிம்மதியைப் பெறுவதே; காதலுக்குத் தடையாய் நின்ற குடும்பத்தை அழித்து ஆறுதல் பெறுவதே (இதைக் கேட்க எவ்வளவுதான் விசித்திரமாய்ப்பட்டாலும் இதுவே நோக்கம்). ஆனால், கொலைக்குப் பின்னர் தனக்கு ஆறுதலோ, நிம்மதியோ இல்லை எனப் புரிந்துகொண்டார். காதலனையும் இனி அடைய இயலாது.

ஆனால், இந்த விழிப்புணர்வு குற்றம் புரியும்போது எழாது. பசியில் கிடைப்பதை ஆவேசமாய் அள்ளித் தின்பது போலவே, காமம் தீரப் படுக்கையில் கூடும்போது உலகையே மறந்து சொர்க்கத்தில் மிதப்பது போலவே, மனிதர்கள் கோபாவேசத்தில் குற்றம் செய்யும்போது தம்மை இழந்துவிடுகிறார்கள்.

நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்ன?


நம் குடும்ப அமைப்பு அன்பு, கருணை, தியாகம் ஆகிய விழுமியங்களின் லட்சிய வடிவாய்த் திகழ்வது. ஆனால், அதே அமைப்புக்குள்தான் கற்பனைக்கெட்டாத குற்றங்களும் கொடூரங்களும் நிகழ்கின்றன. இக்குற்றங்களைத் தவிர்ப்பது எப்படி என யோசிக்க வேண்டும். அபிராமிகள் அபிராமிகள் ஆகாமல் இருக்க என்ன செய்யலாம் என யோசிக்க வேண்டும்.

ஒரு தனிமனிதனை ஓர் எல்லைக்கு மேல் நெருக்கடிக்கு உள்ளாக்கக் கூடாது. அபிராமி விஷயத்தில் அவளது அப்பாவும் கணவனுமாய்ச் சேர்ந்து அவளைக் காதலனிடமிருந்து திரும்ப அழைத்து வந்ததே தவறு. “குடும்பம் வேண்டாம் என்றால் ஓடிப் போக வேண்டியதுதானே, ஏன் அவள் தன் குழந்தைகளை அதற்காகக் கொல்ல வேண்டும்?” எனக் கேட்பவர்கள் ஒரு பெண் தன் கணவனோ, குழந்தைகளோ வேண்டாம் என முடிவெடுக்கையில் அவளை அடித்து, வலியுறுத்தி, குடும்பத்துக்குள் விருப்பமற்ற கணவனுடன் இருக்கும்படி செய்த அவளது அப்பாவிடம் இதே கேள்வியைக் கேட்க வேண்டும். தனிமனித விருப்பத்தை – அது சரியோ, தவறோ – நாம் மதிக்க வேண்டும். மதிக்காதபோது இதே போன்ற, அல்லது இதைவிடக் கொடூரமான குற்றங்கள் நடக்கும்.

இப்படி எல்லாவற்றையும் விட்டுவிடலாமா என்றால், எல்லையை மீறிச் சென்றால் விட்டுவிட வேண்டியதுதான். இல்லையேல் மேலும் அனர்த்தங்கள் நிகழ வாய்ப்பிருக்கிறது.

இக்குற்றத்துக்கு அபிராமியின் அப்பாவும் கணவனும் மறைமுகமாய் பொறுப்பு என்றும் சொல்லலாம். நம் நாட்டில் பல பெண்கள் விருப்பமின்றிக் குழந்தை பெற்று வளர்க்க நேர்கிறது. குழந்தைகளைப் பிடித்திருந்தாலும் அவர்களுக்காகப் பெரும் தியாகங்கள் செய்ய சில பெண்கள் விரும்புவதில்லை. முந்தைய கூட்டுக் குடும்ப வீடுகளில் பிள்ளைகளைக் கவனிக்கவும் இத்தகைய அம்மாக்களுக்கு உதவவும் வேறு உறவுப் பெண்கள் இருந்தார்கள். ஆனால், இன்று அந்நிலை இல்லை. பல பெண்கள் குடும்ப நிலையால், குழந்தைகள் மீதான பொறுப்புகளால் தம் சிறகுகள் முறிக்கப்பட்டதாய் உணர்கிறார்கள். இந்த உணர்வை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இவர்களுக்கு உதவுவதற்கான சேவைகளை நாம் அறிமுகப்படுத்த வேண்டும்.

குழந்தை உள்ளது எனும் ஒரே காரணத்துக்காக மண முறிவை அனுமதிக்காமல் ஒரு பெண்ணைக் கணவனுடன் கட்டிப் போடுவதும் நியாயம் அல்ல.

நான் அபிராமியின் கொடுங்குற்றங்களை நியாயப்படுத்தவில்லை. ஆனால் அபிராமிகள் மேலும் பெருகாமல் இருக்க நாம் முயற்சி எடுக்க முடியும் என்கிறேன்.

குற்றம் என்பது எப்போதும் தீமை அல்ல. அது உதவிக்கான கோரலாக, செய்வதறியாத பரிதவிப்பின் வெளிப்பாடாக இருக்கலாம். அபிராமியை இரண்டாம் வகையாகவே நான் காண்கிறேன்.

(கட்டுரையாளர் அபிலாஷ் சந்திரன் எழுத்தாளர். யுவ புரஸ்கார் விருதைப் பெற்றவர். இலக்கியம், உளவியல், கிரிக்கெட் முதலான பல விஷயங்களைப் பற்றித் தொடர்ந்து கட்டுரைகள் எழுதிவருகிறார். இவரைத் தொடர்புகொள்ள: abilashchandran70@gmail.com)

Leave A Reply

Your email address will not be published.