நல்லூர்கந்தனும் நந்திக்கடலும்! ஒரு பார்வை!!

0

By Parani Krishnarajani

இன்று நல்லூர் கந்தன் தேர்.

கடவுள் என்பது ஒரு சிக்கலான Concept.

எந்த கடவுள் மறுப்பு கோட்பாடுகளையும் உள்வாங்காமல் இயல்பாகவே கடவுள் மறுப்புக்குள் வந்து சேர்ந்த ஒரு தலைமுறையை சேர்ந்த ஆள் நான்.

ஆனால் இன்று ‘கடவுளின் பெயரால்’ ( புத்தன் – மகாவம்சம்) அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு இனத்தின் பிரதிநிதியாக அதற்கு எதிர்வினையாற்ற ‘தமிழ்’ கடவுளை முன்னிறுத்தும் ஒரு கோட்பாட்டுக்குள் வந்து சேர்ந்திருக்கிறேன்.

அந்த வகையில் தமிழ்க் கடவுள் என்ற ஐதீகத்தை பேணும் முருகன் தமிழ்க் குறியீடாக – அடையாளமாக நிறுவப்படுவதை அரசியல் ரீதியாக வரவேற்கிறேன்.

தமிழர்களின் தொன்மம், மரபுகளை தொடர்ந்து பேணுவதும் அதை மீட்டெடுக்கும் அலகாகவும் தமிழ் அடையாளங்களில் ஒன்றாகவும் இருக்கும் நல்லூர் முருகனை வணங்குகிறேன்.

ஏனென்றால் எதிரி இப்போது ஆயுதங்களுடன் படையெடுக்கவில்லை. அவன் புத்தர் சிலைகளையே ஆயுதமாக்கியுள்ளான்.

எனவே நாம் பேசும் நாத்திகம் நமது இருப்புக்கு உதவப் போவதில்லை.
மாறாக, இன அழிப்புக்கே ஊக்கியாக தொழிற்படும்.

இந்தப் பின் புலத்திலிருந்துதான்
‘நந்திக்கடல்’ எல்லைகள் தாண்டி – தேசங்கள் தாண்டி இனக் குழுமங்களின் இந்த குல தெய்வ வழிபாட்டு முறைகளை இன அழிப்பிற்கு எதிரான ஒரு கோட்பாடாகவே முன்வைக்கிறது.

இன அழிப்புப் பின் புலத்தில், சம்பந்தப்பட்ட இனக் குழுமத்தைச் சேர்ந்த மக்கள் ஏதோ ஒரு காரணத்திற்காக ஒன்று கூடுதல், ஒருங்கிணைதல் என்பது மிக முக்கியமானது என்கிறது ‘நந்திக்கடல்’.

இதனூடாக இன அழிப்புக்கு எதிரான அரசியல், பண்பாடு, பொருண்மியம் மற்றும் உளவியல் காரணிகளின் கூட்டுப் பெறுமானத்தை அந்த இனக் குழுமம் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்கிறது ‘நந்திக்கடல்’.

இன அழிப்பு பின் புலத்தில் சம்பந்தப்பட்ட இனக் குழுமத்தின் ஐதீகங்கள் கூட இன அழிப்புக்கு எதிரான பெறுமானத்தை தக்க வைத்துக் கொள்ளும் என்கிறது ‘நந்திக்கடல்’.

கோயில் திருவிழாக்களை முன்னிட்டு ஒன்றினையும் எமது மக்கள் குழுமத்தின் திரட்சியை இந்த கூட்டுப் பெறுமானங்களின் பின்னணியில் வரையறுத்துக்கொள்ள முடியும்.
எனவே எமது ஒருங்கிணைவுதான் முக்கியம் – அங்கு பகுத்தறிவையும் மூட நம்பிக்கைகளையும் தேடாதீர்கள்.

அது இன அழிப்பு அரசிற்குத்தான் சாதகமான ஒரு கருத்தியலாக உருத் திரளுமேயொழிய பாதிக்கப்பட்ட இனக் குழுமத்தின் ஒன்றிணைதலுக்கு பாதகமான கருத்தோட்டமாக மாறி தொடர்ச்சியான இன அழிப்புக்குள் அந்த இனக் குழுமத்தை தள்ளும் என்று எச்சரிக்கிறது ‘நந்திக்கடல்’.

எனவே இது கடவுள் நம்பிக்கை அல்ல – நமது எதிர்ப்பு அரசியலின் ஒட்டுமொத்த உள்ளடக்கம் இது.

Leave A Reply

Your email address will not be published.