இன்று இலங்கையை மையமாகக் கொண்டியங்கும் ஆங்கில இணைய செய்திச் சேவையான டெயிலி மிரரினைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. நாளாந்தச் செய்திகளோடு, செய்தியாளர் கருத்துக்கள் என்கிற பகுதியொன்றும் இருக்கிறது. அதில், கனடாவிலிருந்து எழுதிவரும் எஸ். பி. எஸ். ஜெயராஜ் அவர்களுக்கென்று ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டு, அவரும் அதில் தொடர்ச்சியாக அவ்வப்போது இடம்பெறும் முக்கிய அரசியல், பாதுகாப்பு நிகழ்வுகள் பற்றி எழுதிவருகிறார்.
அவ்வாறான ஒரு கட்டுரையில், அண்மையில் ஒட்டுசுட்டான் – புதுக்குடியிருப்பு வீதியில் முச்சக்கரவண்டியில் பயணித்தவர்களை பொலிசார் விசாரித்தபோது பிடிபட்ட ஆயுதங்கள், புலிகளின் சீருடைகள், கொடி ஆகியன பற்றிய ஆய்வுச் செய்தியொன்றினை அவர் எழுதியிருக்கிறார்.
முன்னால்ப் புலிகளான ஈச்சாம்பரம் மற்றும் அவருடனிருந்த இன்னும் நான்கு போராளிகள் பற்றி எழுதியிருக்கும் ஜெயராஜ், பலர் நினைத்ததற்கு மாறாக, அவர்கள் புலிகளின் மீளுருவாக்கத்திற்காகத்தான் வேலை செய்கிறார்கள் என்றும், முன்னரைப் போன்று ராணுவத்துடன் நேரடியாகவோ, கெரில்ல முறையிலோ அவர்களால் மீழெழும்புவதை நினைத்துக் கூடப் பார்க்கமுடியாது என்றும், ஆனால், கிளேமோர்களை வைத்து அரசியல்வாதிகளையும், ராணுவ அதிகாரிகளையும் கொல்ல எத்தனிக்கலாம் என்றும் எதிர்வு கூறியிருக்கிறார்.
ஏனென்றால் புலம்பெயர் தேசங்களில் இன்றும் புலிச் சார்புடன் வாழ்ந்துவரும் பல தமிழர்கள் மீண்டும் புலிகள் எழுவதை விரும்புவதால், பெருமளவு பணத்தினை மீண்டும் அனுப்புவதற்குத் தயாராக இருப்பதாகவும், அவ்வாறான பணம் பலமுறை ஈச்சாம்பரம் அவர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டு, வங்கிகளில் வைப்பிலிடப்பட்டதாகவும் கூறும் ஜெயராஜ், ரணில் – மைத்திரி அரசின் சுதந்திரமான நடமாட்டத்திகான கதவுகள் திறந்துவிடப்பட்டதையடுத்து பெருமளவு புலிச்சார்பு புலம்பெயர் தமிழர்கள் வடக்குக் கிழக்கிற்கு வந்துபோவதாகவும், அப்படியானவர்களை ஈச்சாம்பரம் அவர்கள் சிலநாள் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து சந்தித்து வந்ததாகவும் கூறியிருக்கிறார்.
மறைமுகமாக ரணில் – மைத்திரி அரசைக் குறை சொல்லும் ஜெயராஜ், புலிகளோ அல்லது அவர்களது எச்சங்களோ மீண்டும் ஒரு வன்முறைக் கலாசாரத்தை வடக்குக் கிழக்கில் உருவாக்க தமிழ் மக்கள் இடம்தரப்போவதில்லை என்றும், உடனுக்குடன் நடைபெறும் இவ்வாறான நடவடிக்கைகள் பற்றி ராணுவத்தினருக்கும் பொலிஸாருக்கும் அறிவித்துவருவதாகப் புலகாங்கிதப்படும் ஜெயராஜ், முச்சக்கரவண்டியிலிருந்து தப்பியோடிய ஈச்சாம்பரத்தை மீளக் கைதுசெய்வதற்கு மக்களின் உதவியே காரணமாக அமைந்தது என்றும் சொல்கிறார்.
ஈச்சாம்பரம் தப்பியோடிய பேரேறுச் சந்தியைப் பற்றிக் குறிப்பிடும்போது, 2001 ஆம் ஆண்டு இதேவீதியில் பிக்கப் வாகனம் ஒன்றில் பயணித்தபோது ராணுவத்தின் ஆள ஊடுருவும் படையணியின் கிளேமோர் தாக்குதலில் கொல்லப்பட்ட தளபதி சங்கர் பற்றிய செய்தியுடன் ஆரம்பிக்கும் ஜெயராஜின் கட்டுரை, முச்சக்கரவண்டியில் சென்றவர்கள் புலிகள்தான், அவர்கள் மீளுருவாக்கத்திற்காகத்தான் முனைப்புடன் செயற்படுகிறார்கள், அதற்குப் புலம்பெயர் தமிழர்கள் உதவுகிறர்கள், இவ்வாறு நடப்பதற்கு ரணில் – மைத்திரியின் அரசின் சுதந்திரமான நடமாட்டத்திற்கான அனுமதி உதவுகிறதென்று முடிக்கிறார்.
இந்தச் சம்பவம் இடம்பெற்றவேளை, தமிழர்கள் பலரின் மனதில் எழுந்த சந்தேகம் ஒன்றுதான். அதாவது, மகிந்தவும் கோத்தபாயவும் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்காக புலிகளை மீளுருவாக்கி, தற்போதைய அரசின்மீது சிங்களவரின் அதிருப்தியை ஏற்படுத்தி, மீண்டும் ஒரு கொலைக் கலாசாரத்தை ஆரம்பிக்கப்போகிறார்கள் என்பதுதான் அது.
ஆனால், புலிகள் இருந்த காலத்தில் அவர்களை விமர்சிப்பதன்மூலம் தன்னை வளர்த்துக்கொண்ட ஜெயராஜ், இன்று அவர்கள் இல்லாத நிலையில்க் கூட, தனது பத்திரிக்கை வியாபாரத்தை தொடர்ந்து நடத்த புலிகளை மீள உருவாக்க எத்தனிக்கிறார் என்பதுதான் உண்மை.