மின்சாரத்தை பாய்ச்சி மகனை கொன்ற கொடூர தந்தை ! அதிர்ச்சி செய்தி

0

மாத்தளை, வெல்கம சிரிஜய மாவத்தை பகுதியில் வசித்து வரும் தந்தை ஒருவர் தனது மகனை மின்சாரத்தை பாய்ச்சி கொலை செய்துள்ளதாக மாத்தறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த கொலை சம்பவம் நேற்றிரவு 9.30க்கும் 10 மணிக்கும் இடையில் நடந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

குடும்ப தகராறு காரணமாக தந்தை இந்த கொலையை செய்திருக்கலாம், குறித்த நபர் தனது மனைவி மற்றும் பிள்ளைகளை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.

கொலை செய்யப்பட்ட மகன், தனது தந்தை வசிக்கும் வீட்டுக்கு நேற்றிரவு சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதுடன் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

பின்னர் மீண்டும் தந்தை வசித்து வந்த வீட்டுக்கு சென்ற போது, வீட்டுக்கு முன்னால் மின்சார இணைப்பு வழங்கப்பட்டிருந்த கம்பியில் சிக்க வைத்து, சந்தேகநபர் தனது மகனை கொலை செய்துள்ளார்.

30 வயதான உதார மதுசங்க என்ற திருமணமாகாத இளைஞனே இச் சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளார்.

அதேவேளை எட்டு வருடங்களுக்கு முன்னர் சந்தேகநபர் தனது மூத்த மகனை கத்தியால் குத்தி கொலை செய்த குற்றத்திற்காக சிறைக்கு சென்று கடந்த 2017 ஆம் ஆண்டு ஒக்டோபர் 10 ஆம் திகதி விடுதலையாகி வந்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த தந்தை அப்பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றிருந்ததுடன் மாத்தறை பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.

மரணம் தொடர்பான நீதவான் விசாரணைகள் நடத்தப்பட்ட பின்னர், சடலம் பிரேத பரிசோதனைக்காக மாத்தறை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மாத்தறை பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.