வடக்கு – கிழக்கு மற்றும் மலையகத்தில் வாழும் பெண்களே தரகர்களால் ஏமாற்றப்பட்டு, வெளிநாடுகளுக்கு வேலைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றனர் என வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “வடக்கு – கிழக்கு மற்றும் மலையத்தில் உள்ள பெண்களே வேலை வாய்ப்புகளுக்காக அதிகமாக வெளிநாடுகளுக்குச் செல்கிறார்கள். தரகர்களினால் இந்தப் பெண்கள் அனுப்பப்படுகிறார்கள் என்று தெரியவந்துள்ளது.
இங்குள்ள பெண்களுக்கு மொழி மற்றும் தொழில்நுட்ப அறிவு போதியளவு இல்லாத காரணத்தினால் பாரிய பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதை நாம் அவதானித்துள்ளோம்.
இவ்வாறு பெண்களை ஏமாற்றி அனுப்பும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகங்களை தடைசெய்வற்கான நடவடிக்கைகளையும் நாம் மேற்கொண்டுள்ளளோம். இதுதொடர்பில் நாம் கடுமையான நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் நான் ஓமானுக்குச் சென்றபோது, 16 வயது சிறுமியொருவரை சட்டவிரோதமாக அங்கு அனுப்பியுள்ள விவகாரம் தெரியவந்தது.
தற்போது அந்தச் சிறுமியை மீட்டு இலங்கைத் தூதரகத்தின் பாதுகாப்பில் வைத்துள்ளோம். இவரை அடுத்தவாரம் இலங்கைக்குக் கொண்டுவரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், இந்தச் சிறுமி இரண்டு தடவைகள், தூதரகத்தில் வைத்து தற்கொலைக்கும் முயற்சி செய்துள்ளார். இவ்வாறான அசம்பாவிதங்கள் இடம்பெற்றால், இறுதியில் இதற்கான பலியும் எம்மீதே சுமத்தப்படும்.
இந்தச் சிறுமி, விசிடிங் விசா மூலம் டுபாய் சென்று, வாகனம் ஒன்றின் ஊடாகவே சட்டவிரோதமாக ஓமான் சென்றுள்ளார். இதற்கு உதவியதும் டுபாயில் வசிக்கும் இரண்டு பெண்கள் தான். இதுதொடர்பில் நாம் குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கும் முறைப்பாடு அளிக்கவுள்ளோம்.
இவ்வாறு மத்தியக்கிழக்கில் மனித வியாபாரமே இடம்பெறுகின்றது. இதுதொடர்பில் மக்களுக்கு போதிய தெளிவில்லாத காரணத்தினாலேயே இவ்வாறன குற்றங்கள் இடம்பெறுகின்றன.
ஓமான், ஜோர்தான், குவைத், டுபாய், சவுதி போன்ற நாடுகளிலும் இந்தப் பிரச்சினைகள் இருக்கின்றன. எனவே, இலங்கையில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தொடர்பில் சர்வதேச நிறுவனம் ஒன்றின் ஊடாக தரவரிசை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம்“ என தெரிவித்துள்ளார்.