அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ளும் முன்னாள் பிரதமரின் முயற்சி தோல்வி!

0

தனது அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவே 19ஆவது திருத்தச்சட்டத்தை ரணில் விக்ரமசிங்க நிறைவேற்றினார் என்றும் அது இறுதியில் பிழைத்துவிட்டது என்றும் பேராசிரியர் நிம்சிறி ஜயதிலக தெரிவித்தார்.கொழும்பு, இலங்கை மன்றக்கல்லூரியில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”ரணில் விக்ரமசிங்கவுக்கு இவ்வாறான நிலைமை ஏற்படுவது இது இரண்டாவது முறையாகும். ஏற்கனவே, 2002ஆம் அண்டும் இதேநிலைமை அவருக்கு ஏற்பட்டது. அவர் நாட்டுக்கெதிராக மேற்கொண்ட காட்டிக்கொடுப்புக்களே அவரை இந்த நிலைமைக்குத் தள்ளியுள்ளது.

ரணில் விக்ரமசிங்கவுக்கு தனது பதவியை எவ்வாறு தக்கவைத்தக்கொள்ளவேண்டும் என்று நன்றாகத் தெரியும். இல்லாவிட்டால் 25 வருடங்களாக தேர்தலில் தோல்வியடையும் ஒரு கட்சியின் தலைவராக அவரால் இருக்கமுடியுமா?

இந்த அதிகார மோகத்தின் காரணத்தினால்தான் 19ஆவது திருத்தச்சட்டத்தையும் அவர் கொண்டுவந்தார். அதாவது, தனது பதவியைத் தக்கவைத்துக்கொள்வதற்காக ஜனாதிபதி பிரதமரை பதவி நீக்கம் செய்யமுடியாத வகையிலேயே அவர் 19ஆவது திருத்தத்தை மிகவும் சூட்சுமமாக நிறைவேற்றியுள்ளார்.

இவை அனைத்தும் சட்டவிரோதமானவை. இதற்காகத் தான் புதிய பிரதமர் நியமனம் இடம்பெற்றுள்ளது. இது தவறு எனினும், அந்த தரப்பினர் உச்சநீதிமன்றத்தின் ஊடாக தாராளமாக விளக்கத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.

இல்லாவிட்டால், புதிய பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவரமுடியும். எவ்வாறாயினும், சுதந்திரத்துக்குப் பிறகு நாட்டில் ஏற்பட்டுள்ள சிறப்பான ஒரு அரசியல் சூழலாகவே நாம் இதனைப் பார்க்கிறோம்” எனத் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.