அதிரடிகளுக்காக காத்திருக்கும் அடுத்த சில தினங்கள்!

0

=====================================

மைத்திரியால் தொடங்கிவைக்கப்பட்டுள்ள அரசியல் உற்சவத்தின் அதி உச்ச வேடிக்கைகள் இன்னும் இரண்டொரு நாட்களுக்குள் மேலும் மேலும் பல “புனித நிலைகளை” அடையப்போவதாக விடயமறிந்த வட்டாரங்களிலிருந்து அறியக்கிடைக்கிறது.

ஜனநாயக மரபுகளைப்பேணி அரசமைப்பு மீதான ஒழுக்கத்தைக்கடைப்பிடிக்குமாறு உள்நாட்டிலும் சரி வெளிநாடுகளிலிருந்தும் சரி கிலோ கிலோவாக மைத்திரி மீது அழுத்தங்கள் கொடுக்கப்பட்டுவரும் இந்நிலையில், தனக்கான ஆதரவைப்பெறும் நோக்குடன் இரவு பகலாக கட்சிகளுக்கும் வலை வீசியபடியுள்ளார் மகிந்த. தனது பலத்தை காண்பிப்பதற்கு ஏதுவாக மைத்திரி ஒத்திவைத்து தந்துள்ள நாடாளுமன்றம் மீண்டும் கூடுவதற்கு முதல் எப்படியாவது தனக்குரிய ஆதரவை உருவியெடுத்துவிடவேண்டும் என்று பல்வேறு வகையிலான குத்துக்கரணங்களையும் அடித்துக்கொண்டிருக்கிறார் மகிந்த.

மறுபுறத்தில், அமெரிக்கா உட்பட ஒட்டுமொத்த மேற்குலகமும் ஐரோப்பிய நாடுகளும் மைத்திரி – மகிந்த தரப்பின் மீதான “அடுத்த கட்ட” அழுத்தங்களுக்கு தயாராகிவருவதாக தெரியவருகிறது. தங்களது இரகசிய தூதுவர்களின் மூலம் மைத்திரி தரப்பினை சந்தித்த வெளிநாடுகள், மைத்திரி மற்றும் மகிந்தவுக்கு பக்கத்தில் நின்றுகொண்டு “சட்ட விரிவுரையாற்றும்” ஜீ.எல்.பீரிஸினால் கடும் சீற்றத்துக்குள்ளாகியிருக்கிறார்களாம். “நீங்கள் செய்திருக்கும் அட்டூழியங்களை நியாயப்படுத்துவதற்காக எங்களுக்கு ஞானஸ்தானம் வழங்கும் வேலைகளை விடுத்து, நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுவதற்கு முடியுமா, இல்லையா” – என்று பல்லை நெரும்பியிருக்கிறார்களாம் அந்த கோட்டு சூட்டுப்போட்டவர்கள். அதற்கு, உதட்டை பிதுக்கிக்காட்டிய பீரிஸை பார்த்து உறுமிப்போட்டு போயிருக்கிறார்களாம் தூதரகக்காரர்கள்.

தமிழ் தேசியக்கூட்டமைப்பினை தொடர்ச்சியாக தொடர்பில் வைத்திருக்கும் மேற்குலகத்தவர்களும் இந்தியாவும் தங்களது முடிவுகளை அவர்களுடன் மனந்திறந்து பேசிவருவது மட்டுமல்லாமல், சிறிலங்கா தரப்பிலுள்ள நம்பிக்கைக்குரிய ஒரே தரப்பாக தற்போது தமிழ் கூட்டமைப்பினை மாத்திரமே இந்த தரப்புக்கள் கையாண்டுவருவதாகவும் அறியமுடிகிறது.

இதேவேளை, கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர் அவர்கள் அண்மையில் மகிந்தருடன் நடத்திய பேச்சுக்கள் மிகவும் இறுக்கமாக அமைந்தது மாத்திரமல்லமால், மகிந்த தரப்பினர் எதிர்பாராதளவுக்கு முறிந்துப்போயுள்ளதாக நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன. மகிந்தருடன் மேற்கொண்ட பேச்சுக்களில் சம்பந்தர் தடாலடியாக சில விடயங்களை முன்வைத்தமை அவரை நிலைகுலையச்செய்திருக்கிறது. சந்திப்பில், தமிழர் தரப்பின் தற்போதைய நிலைகுறித்து மிகச்சுருக்கமாக கூறிய சம்பந்தர் “இது குறித்து உங்களுக்கு இனியும் விரிவாக விளக்கத்தேவையில்லை. ஒரே முடிவாக கேட்கிறேன், நாடாளுமன்றம் கூடினால் பிரதமருக்கான நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, அடுத்த காரியமாக, சந்திரிக்கா கொண்டுவந்த தீர்வுத்திட்டத்தை அமுல்படுத்துவதாக அறிவிக்க முடியுமா? அதனை இப்போது எழுத்தில் தரமுடியுமா” – என்று ஒரே அடியாக போட்டியிருக்கிறார்.

உடனடியாகவே கதிரையின் நுனிக்கு வந்த மகிந்தர் பேச்சுக்களை முடிப்பதாக கூறிவிட்டு எழுந்திருக்கிறார்.

சந்திரிக்கா அம்மையார் ஆட்சியிலிருந்தபோது கதிர்காமருடன் சேர்ந்து வரைந்த இணைந்த ஒன்றியங்களின் (Confederation) அடிப்படையிலான தீர்வுத்திட்டமானது சமஷ்டியிலும் பார்க்க அதிகாரம் கூடியதும் ஒருமித்த இலங்கையினுள் இதுவரைகாலமும் சிங்கள தரப்புக்கள் முன்வைத்த தீர்வுத்திட்டங்களிலேயே அதிகூடிய அதிகாரங்கள் உடையதும் ஆகும். மட்டுமல்லாமல், அதனை அப்போது சந்திரிக்கா தரப்பிலிருந்த மகிந்தரும் ஜீ.எல்.பீரிஸம்கூட ஏற்றுக்கொண்டிருந்தமை குறிப்பிட்டத்தக்கது.

ஆனால், நேற்று அந்த சொல்லைக்கேட்டவுடனேயே மூத்திரம் குடித்த ஆடு மாதிரி திமிறிக்கொண்டு எழுந்த மகிந்த, கூட்டமைப்பினரோடான சகவாசம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாகவே கணக்குப்போட்டியிருக்கிறாராம்.

இவை ஒருபுறம் இடம்பெற்றவாறிருக்க –

தற்போது அனைத்து தரப்பினதும் ஒரே குறிக்கோள் நாடாளுமன்றத்தைக்கூட்டுவதும் அதற்கான உச்ச அழுத்தத்தை மைத்திரிக்கு கொடுப்பதும்தான்.

ஆக, இந்த மாதிரியானதொரு சூழ்நிலையில், மைத்திரியும் மகிந்தவும் திணறிக்கொண்டு சிங்கள மக்கள் மத்தியில் சென்று ஒப்பாரிவைத்து வீண் கலவரங்களை உண்டுபண்ணவிடாமல், நாடாளுமன்றத்தைக்கூட்டுவதற்குத்தான் அனைத்து தரப்புக்களும் மிகநிதானமாக தங்களது காய்களை நகர்த்தி வருகின்றன. மைத்திரி – மகிந்த தரப்புக்கு இப்போது எஞ்சியிருக்கும் ஒரே வழியும் மக்களிடம் போய் நின்று குழறுவதுதான் என்று மேற்குலகமும் இந்தியாவும் நன்றாகவே தெரிந்துவைத்திருக்கின்றன. ஆக, இவர்களின் சகல திட்டங்களையும் ஈரச்சாக்கு போட்டு அடிப்பது போல, சிங்கள மக்களுக்கு முன்பாக போகவிடாமல், அடித்து முடிப்பதற்குத்தான் மேற்குலகம் தருணம் பார்த்துக்கொண்டிருக்கிறது என்கிறார்கள் சம்பந்தப்பட்ட பேச்சுக்காரர்கள்.

அவ்வாறு, நாடாளுமன்றத்தைக்கூட்டுவதற்கு மைத்திரி ஒத்துவராவிட்டால் என்ன செய்வது?

ஆசிய வரலாற்றிலேயே முதன் முறையாக, மாற்று நாடாளுமன்றம் (make-shift parliament in an alternative place) ஒன்றை அமைத்து அங்கு கூடுவது தொடர்பாக ரணில் தரப்பு ஆலோசித்திருப்பதாக தெரியவருகிறது. அதாவது, வெள்ளிக்கிழமைக்கு முதல் நிலமை சரிவராவிட்டால், மாற்று இடத்தை தெரிவு செய்து, அங்கு பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்கள்கூடி, மைத்திரி – மகிந்த தரப்பினர் மேற்கொண்டுவரும் சகல நடவடிக்கைகளையும் சட்டவிரோதம் என்று அறிவித்து, நாட்டின் ஜனநாயகத்துக்கு ஏற்பட்டுள்ள நிலைவரத்தை வெளிநாட்டு தூதுவர்களை அழைத்து எடுத்துக்கூறுவதற்கு முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. ஆனால், நிலமை அவ்வளவுதூரம் மோசமாக போகுமா என்பது குறித்து இந்தப்பத்தியை எழுதும் இக்கணம் வரைக்கும் தெரியவரவில்லை.

ஆனால், எந்த முடிவெடுத்தாலும் தற்போதைய குழப்பமான சூழ்நிலையை பயன்படுத்தி தமிழர்கள் சிங்கள தேசத்தை நுள்ளி விளையாடப்பார்க்கிறார்கள் என்ற கிலேசத்தை சிங்கள மக்கள் மத்தியில் ஏற்படுத்திவிடக்கூடாது என்பதில் சம்பந்தர் மிகத்தெளிவாக – பொறுப்போடு – செயற்படுவதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நீதி மறுக்கப்பட்ட தரப்பொன்று எந்த வழியும் இல்லாமல் நடுத்தெருவில் நிற்கின்றபோது, அதற்கு சர்வதேசத்தை நாடுவதைத்தவிர வேறு வழியெதுவுமில்லை என்பதை சிங்கள மக்கள் தற்போது கண்கூடாக பார்க்கிறார்கள். தங்களது அரசியல் தலைமைகள் அல்லாடுகின்ற தற்போதைய நிலைவரத்தை நேரடியாக உணர்கிறார்கள். ஆக, இதைத்தான் தமிழினம் முப்பது வருடங்களுக்கு மேல் அனுபவித்துவருகிறது என்பதை மிகவும் சூசகமாக தனது நிதானமாக முடிவுகளின் மூலம் சம்பந்தர் எடுத்துப்போகிறார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

இதன் ஒரு அங்கமாக, தமிழ் தேசியக்கூட்டமைப்பு கொழும்பிலொரு ஊடக சந்திப்பை நடத்துவதற்கு நேற்று திட்டமிட்டு, தற்போதைய குழப்பநிலையில் தங்களது கொள்கையில் உறுதியாக உள்ள இன்னொரு தரப்பான ஜே.வி.பியுடன் இணைந்து அந்த ஊடகவியலாளர் மாநாட்டை நடத்துவதற்கு முடிவெடுத்துவிட்டு, ஜே.வி.பி. அதற்கு பின்னடித்ததை அடுத்து, அந்த முயற்சி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்ததில் சிங்கள மக்களுடன் இணைந்து, இந்த ஆட்சிஅதிகாரத்திடம் தமிழர்களுக்கான தீர்வினை வலியுறுத்துவதற்கும் தீர்வினை நோக்கி நகர்வதற்கும் சம்பந்தர் முழுமையாக முயற்சி செய்கிறார் என்கின்றன சம்பந்தப்பட்ட தரப்புக்கள்.

ப.தெய்வீகன்

Leave A Reply

Your email address will not be published.