அனைத்துலக விசாரணையிலிருந்து மகிந்தவைக் காப்பாற்றியது இவர் தான் ! மங்களம் பாடிய அமைச்சர் மங்கள

0

அனைத்துலக குற்றவாளியாவதிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே காப்பாற்றினார் என நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

மாத்தறையில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் தற்போது அனைத்துலகச் சமூகத்தின் முன் சென்று தற்போதைய அரசாங்கத்தை விமர்சிக்கும் வாய்ப்புக் கிடைத்துள்ளது என்றால் அதற்காகத் தற்போதைய அரசாங்கத்துக்கே அவர் நன்றி கூறக் கடமைப்பட்டவர்.

கடந்த-2014 டிசம்பரில் எமது நாடு எப்படி இருந்தது? உலகப் படத்தில் எமது நாடு இரத்தக் கறையினால் அடையாளப்படுத்தப்பட்டிருந்தது.

போரில் மனித உரிமைகளை மீறியதாக எம் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது. எமது தலையீடு இல்லாமலேயே அனைத்துலக விசாரணை நடத்தப்படவிருந்தது.

2015 இல் பதவிக்கு வந்த புதிய அரசாங்கம் எந்தவொரு மனித உரிமை மீறல்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுப்பதாகவும், குற்றவாளிகளைத் தண்டிப்பதற்குத் தயாராகவிருப்பதாகவும் நியூயோர்க்கிலும், ஜெனிவாவிலும் உள்ள ஐ.நாவுக்கு கூறியது.

அரசாங்கத்தின் அந்த வாக்குறுதியை ஏற்றுக் கொண்டே ஐ.நா தனது அனைத்துலக விசாரணையை நிறுத்தியது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று வெளிநாடுகளுக்குச் செல்லக் கூடிய நிலையை ஏற்படுத்தியது தற்போதைய அரசாங்கம் தான். இல்லாவிடில் அவர் அனைத்துலக நீதிமன்றினால் தண்டிக்கப்பட்டிருப்பார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் படத்துக்கு முன்பாக அவர் விளக்கேற்ற வேண்டும். ஏனெனில், அனைத்துலக குற்றவாளியாவதிலிருந்து நாங்கள் தான் அவரைக் காப்பாற்றினோம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

 

Leave A Reply

Your email address will not be published.