இந்தோனேசியாவில் ஏற்பட்ட சுனாமியினால் சிறைக்கைதிகளுக்கு அடித்த அதிஷ்டம் ! 1,200க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பி ஓட்டம்

0

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நில நடுக்கம் மற்றும் சுனாமியால் இடிந்த சிறைகளிலிலிருந்து ஆயிரக்கணக்கான கைதிகள் தப்பியுள்ளதாக என அந்நாட்டு நீதித்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

நாம் வாழும் பூமியில் நிலநடுக்கம், சுனாமி, எரிமலை வெடிப்பு என இயற்கை பேரிடர்கள் அதிகம் நடக்கிற நாடாக இந்தோனேசியா விளங்குகிறது. இந்த நாடு பசிபிக் நெருப்பு வளையத்தில் புவித்தட்டுகள் மோதிக்கொள்கிற இடத்தில் அமைந்துள்ளதால், எரிமலை வெடிப்புகள், நிலநடுக்கம் அடிக்கடி ஏற்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் அந்த நாட்டின் சுலாவெசி மாகாணத்தில் உள்ளூர் நேரப்படி மாலை 6.02 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

அங்கு 3 லட்சம் மக்கள் வசிக்கக்கூடிய டோங்கலா நகரை மையமாக கொண்டு பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7.5 புள்ளிகளாக பதிவானது.

இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், ஓட்டல்கள், வணிக வளாகங்கள் என கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாகின. பீதியில், வீடுகளுக்குள்ளும், பிற கட்டிடங்களுக்குள்ளும் இருந்த மக்கள் அலறியடித்துக்கொண்டு, சாலைகளுக்கும், திறந்தவெளி மைதானங்களுக்கும் ஓடினர்.

சுனாமியில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை சமீபத்திய தகவலின்படி 844 ஆக அதிகரித்துள்ளது என அந்நாட்டின் தேசிய பேரிடர் அமைப்பின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் சுனாமியால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சுனாமியில் அகப்பட்ட ஏராளமானவர்களை இன்னும் காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று கருதப்படுகிறது.

இந்தநிலையில், சுலாவேசியில் உள்ள பலு மற்றும் டோங்கலா ஆகிய இடங்களில் இருக்கும் சிறைகள் நிலநடுக்கத்தால் தரைமட்டமாயின. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஆயிரக்கணக்கான கைதிகள் தப்பிச்சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

சுமார் 1200 கைதிகள் சிறைகளிலிருந்து தப்பி காணாமல் போயிருக்கிறார்கள் என்று அந்நாட்டு நீதித்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

டோங்கலாவில் நில நடுக்கத்தினால் தீ விபத்தும் ஏற்பட்டதால் அங்கிருந்த அனைத்து கைதிகளையும் காணவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெருபாலான கைதிகள் ஊழல் குற்றச்சாட்டுகளில் தண்டனை பெற்றவர்கள் ஆவர். 5 பேர் நில நடுக்கம் ஏற்படுவதற்கு சில நாட்கள் முன்பு பயங்கரவாதக் புகாரின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.