இந்த போர்க்குணத்தையும் புத்தி சாதுரியத்தையும் சிங்கள அரசிடம் காட்டியிருந்தால் தமிழீழம் மலர்ந்திருக்கும்

0

தமிழ் ஈழம் பெரும் அரசியல் சிக்கல்களுக்கும் போருக்கும் முகம் கொடுத்துக் கொண்டிருக்கிறது. அந்தப் போர் ஒன்றும் எதிரியுடனான போரல்ல. எதிரியை நன்றாக அணைத்துக் கொண்டு, ஒன்றாக நிற்க வேண்டியவர்களுடன் தான் இந்தப் போர் நடக்கிறது. நாளும் பொழுதும் ஆட்லறி செல் வீச்சுக்களும், பல்குழல் பீரங்கித் தாக்குதல்களும் சராமாரியாக முன்னெடுக்கப்படுகின்றன.

குறிப்பாக, நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கடும் போர் வீரன்தான். தமிழ் தலைமைகளை துண்டாடுவதில் இன்று அவரை விஞ்சி ஒரு ஆள் இல்லை. ஓய்வு பெற்றவர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்று சுமந்திரன் அண்மையில் கூறினார். அப்படிப் பார்த்தால் தமிழ் தேசிய அரசியல் உள்ள பல தலைவர்கள் இப்போது வீட்டுக்கு செல்ல வேண்டும். அய்யா சம்பந்தன், மாவை எல்லாம் இளைஞர்களா என்ன?

அவர்களும் ஓய்வு பெற்ற வயதினர்தானே? முதல்வர் விக்கினேஸ்வரனை தாக்க வேண்டும் என்ற குறிக்கோளுக்காக வாயில் வந்ததை எல்லாம் பேசக்கூடாது. முதல்வர் விக்கி, அரசியலுக்கு வரும்போது ஏனைய தலைவர்களைப் போலவே இருந்தார். ஆனால் மக்கள் எதை எதிர்பார்க்கிறார்கள்? மக்கள் எப்படி குரல் கொடுக்க வேண்டும் என நினைக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டு தன்னை மாற்றிக் கொண்டார்.

அண்மையில் முதல்வர் விக்கி கொழும்பு நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி ஒன்றை வழங்கினார். அதில் பல்வேறு விடயங்களை அவர் மனந்திறந்து கூறியுள்ளார். தன்னால் இயலுமான காரியங்களை செய்திருப்பதையும் வெளிப்படையாக நடப்பதனால் தன்னை அரசியல் அரங்கிலிருந்து அகற்றுவதை இன்றைய தலைவர்கள் செய்ய முயல்வதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

அத்துடன் தமிழ் தலைவர்கள் சிங்கள அரசின் புகழ்ச்சிக்கும் மாய்மாலங்களுக்கும் வீழ்ந்து மயங்கிவிடுவார்கள் என்ற வரலாற்று உண்மையையும்கூட விக்கி கூறியுள்ளார். இதுவே சேர் பொன் இராமநாதன் காலத்திலிருந்து அமிர்தலிங்கம் காலம் மற்றும் 2000ஆம் ஆண்டு வரை தமிழர் விடுதலைக் கூட்டணி காலம் வரை நடந்தது என்ற உண்மையையும் அவர் கூறியுள்ளார்.

முதல்வர் விக்கியை அரசியல் அரங்கிலிருந்து அகற்றுவது என்பது சிங்கள தேசத்தின் விருப்பம் ஆகும். அதனையே சுமந்திரன் முதலானவர்கள் முன்னெடுக்கின்றனர். இப்போது மாவை சேனாதிராஜா என்பவரும் திருவாய் மலர்ந்துள்ளார். விக்கினேஸ்வரன் என்ற பெயரை கொண்டு வந்தது தான் செய்த பாவம் என்றும் அதனை ஐந்தாண்டுகளாய் அனுபவிப்பதாகவும் கூறுகிறார்.

விக்கினேஸ்வரனை கொண்டு வந்தது பாவம் இல்லையே. வரம். ஆனால் நீங்கள் தொடர்ந்து பல பத்து ஆண்டுகளாக தமிழர்களின் பிரதிநிதிகளாக பாராளுமன்றத்தில் இருந்தது பெரிய பாவம். அதற்கு வாக்களித்தது தமிழினம் செய்த பாவம். நீங்கள் செய்த ஒரே ஒரு புண்ணியம் விக்கினேஸ்வரனை கொண்டு வந்தததே. ஏனையவை எல்லாமே பாவச் செயல்கள்தான்.

உங்களைப்போல விக்கினேஸ்வரன் போர் அறிக்கைகள் விடவில்லை. நேற்று ஒரு அறிக்கையும் இன்று ஒரு அறிக்கையும் விடவில்லை. 2017இல் தீர்வு வரும் 2018இல் தீர்வு வரும் என்றெல்லாம் எந்த பொய் வாக்குறுதிகளும் சொன்னதில்லை. எம்மால் எதனை செய்ய முடியாதிருக்கிறது என்பதை சொல்கிறார். எமக்கு என்ன தீர்வு? எமது அபிலாசை என்ன என்பதை சொல்கிறார்.

இது நேர்மையான விடயம்தானே. உண்மைகளை மறைக்கவும் சிங்கள அரசுக்கு துணைபோகவும் அவர் உங்களுக்கு உதவில்லை என்பதால்தான் அவரை நீங்கள் அகற்றப் போகிறீர்கள் என்றால், உங்களையே நாம் அகற்ற வேண்டும். விக்கினேஸ்வரனுக்கு எதிராக செய்த துரோகங்களை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். யாவரும் ஓரணியில் நில்லுங்கள். எங்கள் தலைவர்கள் டக்ளஸ் சந்திரகுமார் ஆவதை நாங்கள் விரும்பவில்லை.

ஆனந்த சங்கரிகள் ஆவதை விரும்பவில்லை. அமிர்தலிங்ககங்களாக இருப்பதிலிருந்து மீளுங்கள். எதிர்வரும் 24ஆம் திகதி முதல்வர் விக்கி, தன்னுடைய அரசியல் அறிவிப்பை வெளியிட இருக்கிறார். அந்த இடத்தில் தமிழீழ மக்கள் திரள வேண்டும். இளைஞர்கள் திரள வேண்டும். விக்கியுடன் எத்தனை பேர் உள்ளனர் என்பதை காட்ட வேண்டும். கூட்மைப்பு அஞ்ச வேண்டும். மீண்டும் விக்கிளே கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக களம் இறங்க வேண்டும்.

எமது வாக்குகளை சிதைப்பது எமது குரலை சிதைப்பதற்கு சமன். இத்தனையாண்டு கட்டிக் காத்த போராட்டத்தை கொச்சைப்படுத்தும் செயல்.தமிழர்கள் தமது இலட்சியமான தமிழீழத்தில் இருந்து விலகக்கூடாது. அதற்கான உழைப்பையும் பங்களிப்பையும் ஆற்ற வேண்டும். சுமந்திரன் போன்ற கோடாரிக் காம்புகள் எமது விடுதலையை, தனிநாட்டுக் கனவைதான் தறிக்க பார்க்கின்றன.

வீரத்திற்கும் தியாகத்திற்கும் பெயர்போன போர்தான் எங்கள் மண்ணில் நடந்தது. ஆனால் இன்று அற்ப நலன்களுக்காக தனிப்பட்ட பிடிவாதங்களுக்காக எங்கள் மண்ணில் அரசியல் தலைவர்கள் போர் செய்கிறார்கள். கடுமையாக மோதுகிறார்கள். கடுமையாக தாக்குகிறார்கள். பெரும் புத்தி சாதுரியங்களை பின் பற்றுகிறார்கள். ஆனால், சிங்கள அரசுடன் இந்த போர்க்குணத்தையும் புத்தி சாதுரியத்தையும் காட்டியிருந்தால் தமிழீழம் மலர்ந்திருக்கும்.

நாம் ஈழப் போராட்டத்தின் முன் ஒற்றுமையாகவும் முன்மாதிாியாகவும் இருக்க வேண்டும். சுமந்திரனுக்கு எங்கள் போராட்டம் பற்றித் தெரியாது. ஆனால் விக்கினேஸ்வரன் அதை உணர்கிறார். அந்த மாற்றங்களே எமக்கு தேவை. அனைவரும் ஓரணியில் நின்று தலைவரின் நோக்கத்தை நிறை வேற்ற வேண்டும். தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

ஆசிரியர்,
ஈழம்நியூஸ்.
21.10.2018.

Leave A Reply

Your email address will not be published.