கொடுங்கோலன் மகிந்த வந்தால் தமிழீழம் மலரும்! தலைவரின் கணிப்பே வெல்லும்!

0

ஸ்ரீலங்காவின் ஆட்சி எவரும் நினைத்திராத வகையில் மாற்றத்திற்கு உள்ளாகியுள்ளது. இதுவரை காலமும் பிரதமராக இருந்த ரணிலை நீக்கிவிட்டு, புதிய பிரதமராக கொடுங்கோலன் மஹிந்த ராஜபக்சவை மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார். இதனால் ரணில் அரங்கிலிருந்து அகற்றப்படுவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன. ஆனால் தொடர்ந்தும் பதவியை தக்க வைக்க ரணில் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். எவ்வாறெனிலும், மகிந்தவின் வருகை தமிழீழ மக்களுக்கு எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதே எமக்கு முக்கியமானது.

ஸ்ரீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு உலக அளவிலேயே அறிமுகம் தேவையில்லை. ராஜபக்சவின் பாசையில் சொல்வதனால், கொடுங்கோலர்களான கடாபி, சதாம்குசைன், இடியாமீன் போன்ற சர்வாதிகாரி. அவர்களுக்கு நடந்த முடிவுகளை தனக்கு ஏற்படுத்த உலகம் முயற்சிப்பதாக ராஜபக்ச தான் கூறுகிறார். அத்தகைய மகிந்த ராஜபக்ச, முள்ளிவாய்க்கால் என்ற மாபெரும் இனப்படுகொலையை நிகழ்த்தினார். கிட்லர் உலகப் போரில் விசவாயுவை செலுத்தி யூதர்களை கொன்றான்.

ராஜபக்ச ஈழப் போரில் விசவாயு அடித்து அப்பாவி மக்களை கொன்றான். அந்த விசவாயுவை போராளிகள் உறிஞ்சி தமது உயிரை விட்டனர். விசவாயுவில் கருகிய போராளிகளின் உடல்களை, மக்களின் உடல்களை எவரும் மறக்க முடியாது. கிட்லரின் யுத்த முறைகளை மாத்திரமல்ல, உலகின் கொடூரமான சர்வாதிகள் பயன்படுத்திய அனைத்து முறைகளையும் ராஜகபக்ச பயன்படுத்தினார்.

ஈழத் தமிழர்கள் மாத்திரமல்ல, உலகத் தமிழர்கள் மாத்திரமல்ல, உலகில் மனசாட்சி உள்ள அத்தனை மனிதர்களும் வெறுக்கும் ராஜபக்ச சிங்கள மக்களுக்கு போர் வீரன். புனித தலைவன். எமக்கோ இனப்படுகொலையாளி. கொடூரமான சர்வாதிகாரி. எம்முடைய உறவுகள் ஒன்றரை லட்சம் பேருக்கும் அதிகமானவர்களை கொன்று குவித்தவன் ராஜபக்ச. ஈழத் தமிழினம் ராஜபக்சவை மின்சாரக் கதிரையில் இருத்தி தண்டணை வாங்க தவிக்கிறது.

2015 ஆம் ஆண்டில் சிங்கள தேசிய கட்சிகளான சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிகளின் கடும் போட்டி மிகுந்த ஜனாதிபதித் தேர்தலில் ஈழத் தமிழ் மக்களால் மகிந்த ராஜபக்ச தோற்கடிக்கப்பட்டு, வீட்டுக்கு அனுப்பப்பட்டார். வீடு சென்ற ராஜபக்ச தமிழீழ மக்கள் தன்னை தோற்கடித்து விட்டனர் என்று பழிவாங்கும் உணர்ச்சியுடன் பேசியதை எவரும் மறந்திருக்க மாட்டார்கள். தோல்வியுடன் மூலையில் சில நாட்கள் முடங்கிய மகிந்த மீண்டும் அதே வருடம் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டார்.

கடந்த மூன்று வருடங்களாக, மைத்திரி ரணில் அரசிடம் பிரதமர் பதவிக்காக சண்டை போட்டது மகிந்த கும்பல். இதற்கிடையில் புதிய அரசியலமைப்பை உருவாக்கி தமிழர்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வை காணப்போவதாகவும் உள்ளக விசாரணையை நடாத்தி போர்க்குற்றப் பிரச்சினைக்கு தீர்வை காணப்போவதாகவும் ஸ்ரீலங்கா அரசாங்கம் வாக்குறுதி அளித்தது. இதற்கு எதிராக ராஜபக்ச நெருக்கடிகளை கொடுத்து வந்தார்.

ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கும் ராஜபக்சவின் நெருக்கடிகள் நல்ல சாட்டுக்களாய் இருந்தன. அத்துடன் சர்வதேச அரங்கில் மின்சாரக் கதிரையிலிருந்து ராஜபக்சவை காப்பாற்றும் முயற்சியில் ரணிலும் மைத்திரியும் ஈடுபட்டனர். இவ்வாறான நிலையிலேயே ஸ்ரீலங்காவின் இன்றைய அதிபர் மைத்திரிபால சிறிசேன, தன் கூட்டாளி ரணிலை பதவியை நீக்கிவிட்டு, தன் முன்னைய போர்க் கூட்டாளி ராஜபக்சவை பிரதமராக நியமித்துள்ளார்.

இந்த செய்தி இலங்கை அரசியலில் மாத்திரமல்ல, உலக அரசியலிலேயே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்படியொரு திடீர் மாற்றமா? அத்துடன் பதவியிலிருந்து துரப்பட்ட ராஜபக்ச மீண்டும் அதிகாரமுள்ள பதவியை கைப்பற்றுவது ஆச்சரியம்தான். இப்போது, மகிந்தவை பிரதமராக்கியுள்ள மைத்திரிபால சிறிசேன, அதனை உறுதிப்படுத்தும் செயல்களில் ஈடுபட்டுள்ளார்.

தன்னை ஜனாதிபதியாக்கிய ரணிலுக்கு மைத்திரி ஆப்பை சொருகியுள்ளார். ரணில் பலருக்கு ஆப்பு சொருகியவர். கருணாவை பிரித்து புலிகளை பலவீனமாக்க முயன்றவர். தற்போதும் கூட்டமைப்பை உடைக்கும் செயற்பாடுகளை செய்தவர். இப்போது மைத்திரி ரணிலுக்கு ஆப்பு வைத்துள்ளார். ரணில் செய்வதறியாது திகைக்கிறார். உலக நாடுகளின் ஆதரவுடன் மீண்டும் பிரதமர் பதவியில் உட்கார கடுமையாக முயன்று வருகிறார்.

இப்படி சிங்கள அரசியல் சூழ்நிலை காணப்பட இதனால் ஈழத் தமிழர்களுக்கு என்ன விளைவு என்பதை பார்ப்போம். எமக்கு மகிந்த ராஜபக்வுடன் கணக்கு ஒன்றுள்ளது. அதனை அவரிடமே தீர்க்க வேண்டும். முள்ளிவாய்க்கால் படுகொலை நடந்து பத்து வருடம் ஆகின்ற சூழலில் அவர் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளார். அவருடன் எமது கணக்கை தீர்க்க வேண்டியுள்ளது.

தவிரவும் மகிந்தவின் அணுகுமுறைகள் தமிழீழத்தை மலரச் செய்யும். மகிந்த செய்யும் அநியாயங்கள் தமிழீழ நாட்டை தோற்றுவிக்கும். சர்வதேச சமூகமே இந்த முடிவுக்கு வரும். மகிந்த தமிழர்களை எதிரி இனமாக, தமிழ் ஈழத்தை அந்நிய நாடாக பார்ப்பார். இராணுவத்தை தமிழ் நிலத்தில் ஏவுவார். தமிழீழ மக்கள் தனித் தமிழீழத்திலேயே சுதந்திரமாக வாழ முடிவும் என்ற முடிவுக்கு வருவார்கள்.

ரணில் எங்களை துண்டாடி அழித்துவிடுவார். மகிந்தவுடன் தமிழர்கள் நேரடியாக மோதலாம். அது வெற்றியை தோல்வியையோ தெளிவாக ஏற்படுத்தும். இதன் காரணமாகவே தலைவர் பிரபாகரன் ரணிலை 2005 இல் ஜனாதிபதியாக வர அனுமதிக்கவில்லை. ரணில் வந்திருந்தாலும் நாம் முள்ளிவாய்க்காலை சந்திருப்போம். ஆனால் அது வேறு வகையான முள்ளிவாய்க்காலாக இருக்கும். இன்று தமிழ் இன விடுதலையும் தமிழீழ தேசத்திற்கான நீதியும் அவசியம் என்ற நிலைக்கு எமை தள்ளியது மகிந்தவே.

அதிலிருந்து எவரும் விலக முடியாது. அதற்காகவே மீண்டும் மகிந்த வந்துள்ளார் போலும். மகிந்தவின் காலத்தில் தமிழீழம் மலர்வதே சிறந்த பதிலடியாக இருக்கும். இதற்கான அர்ப்பணிப்பையும் உழைப்பையும் நாம் வழங்க வேண்டும். எமது தலைவர்களை திருத்தி அதற்கு ஏற்ற பயணத்தில் ஈடுபடுத்த செய்ய வேண்டும். இல்லையேல் மகிந்த எமை அழித்து முடிக்கக்கூடும். எனவே இப்போதும் எமது விடுதலையும் தலைவிதியும் எமது கைகளிலேயே உள்ளது.

ஆசிரியர்.
ஈழம்நியூஸ்.
2710.2018.

Leave A Reply

Your email address will not be published.