கொலை செய்யப்பட்ட கர்ப்பிணியான 15 வயது சிறுமி! நீதிபதி இளஞ்செழியனின் அதிரடி தீர்ப்பு

0

கர்ப்பிணியான 15 வயது சிறுமியை திட்டமிட்டு கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிக்கு திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

இது தொடர்பான வழக்கு இன்று எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வழக்கில் மேலும் ஒருவர் சந்தேகநபராக அடையாளப்படுத்தப்பட்டிருந்த நிலையில் அவர் வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஹேரத் முதியன்சேலாகே டில்ஹானி குமாரி குணதிலக்க எனும் சிறுமியை குற்றவாளி திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்து உறவு கொண்டுள்ளார்.

இந்த நிலையில் குறித்த சிறுமி மூன்று மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் அவரை திருகோணமலை – மொறவெவ, தம்பகஹவுல்பொத்த காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு வைத்து சிறுமியை குளத்து நீரில் மூழ்கடித்து கொலை செய்து உடலை புதைத்துள்ளார். இதன்பின்னர் கொலைக்குற்றச்சாட்டிலிருந்து தப்பிப்பதற்காக உடலை தோண்டி எடுத்து எரித்துள்ளதாக தெரியவருகிறது.

குறித்த சம்பவம் கடந்த 2010ஆம் ஆண்டு 06ஆம் மாதம் 27ஆம் திகதியன்று நடைபெற்றுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் முதலாவது எதிரியான மொறவெவ, இரண்டாம் வட்டாரத்தை சேர்ந்த நயிது ஹென்னதிகே நிஷாந்த ஜெயலத் என்பவருக்கே மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், முதலாவது எதிரியின் உறவினரான இரண்டாவது எதிரி பின்னதுவகே இஸுரு சமிந்த சில்வா என்பவர் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிக்கு நாளைய தினம் 28 வயது பிறந்த தினம் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.