சர்க்கார் சர்ச்சை: காப்பியும் தழுவலும் ஒன்றா? ஆர். அபிலாஷ்

0

புதிய தலைமுறை இணையதளக் கட்டுரை ஒன்று – “கதைத் திருட்டில் தமிழ் சினிமா” – இதுவரை வெளிவந்த பல முக்கிய தமிழ்ப் படங்களின் கதைகள் தழுவல் என்கிறது. சமூக வலைதளங்களில் மேலும் பல தழுவல் படங்களின் பெயர்கள் தரப்படுகின்றன. ஒரு நண்பர் கமலின் அத்தனை நல்ல படங்களும் தழுவல் தானே எனச் சொல்லி ஒரு பட்டியல் அளித்திருந்தார்.

இதையே பாலு மகேந்திராவுக்கும் சொல்கிறவர்கள் உண்டு. மணிரத்னமும் விடுபடுவதில்லை. “இருவர்” படத்தில் சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு வெகுவாய் கொண்டாடப்பட்ட ஒன்று. ஆனால் இப்படத்திலும் மோகன் லால் தன் மனைவியின் இறுதிச் சடங்கில் பங்கு பெறும் காட்சியின் ஒளிப்பதிவு செவன் சாமுராய் படத்தின் இறுக்காட்சியை வெகுவாய் ஒத்திருக்கும். தமிழின் மகத்தான படங்களில் ஒன்றான “நந்தலாலா” “கிக்குஜீரோ” எனும் படத்தின் தழுவல் என சர்ச்சை அப்படம் வெளியிடப்பட்ட காலத்தில் எழுந்தது. இப்படியே, நுண்ணோக்கியை இப்படி அருகில் கொண்டு போய்ப் பார்த்தால் தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட எந்த சாதனையாளர்களும் எஞ்ச மாட்டார்கள்.

ஆனால் இவ்வாறு காப்பியடிப்பவர்கள் எனும் முத்திரையை ஒரு படைப்பாளி மீது குத்துவதும் முழுக்க நியாயம் அல்ல. காப்பிக்கும் தழுவலுக்கும் வித்தியாசம் உண்டு. தழுவலில் ஒரு இயக்குநர், கதாசிரியர் மற்றும் நடிகர்களின் ஒரிஜினலான பங்களிப்பு இருக்கும்; இது முக்கியம். தழுவலின் போது ஒரு படம் அதன் ஒரினினலை விட பல மடங்கு மேலானதாக வர வாய்ப்புண்டு.

சினிமாக்காரர்கள் மட்டுமல்ல, இலக்கியவாதிகளும் தழுவல் பணியில் ஈடுபட்டதுண்டு. ஆங்கிலத்தில் ஷேக்ஸ்பியர் மீதே இக்குற்றச்சாட்டுகள் உள்ளன. தமிழில், புதுமைப்பித்தன், கா.ந.சு போன்றோரின் தழுவல்கள் பேசப்பட்டுள்ளன. தொண்ணூறுகளுக்குப் பிறகு லத்தீன் அமெரிக்க கதைகள் தமிழில் அழகாய் சாமர்த்தியமாய் தழுவி எழுதப்பட்டு பெயர் பெற்றுள்ளன. சில சினிமா பாத்திரங்கள், காட்சிகளின் தாக்கம் கொண்ட தமிழ் நாவல்களை அறிவேன். இதனால் இந்த படைப்பாளிகளின் மாற்று எந்த விதத்திலும் குறைந்து போவதில்லை.

சொல்லப் போனால் எழுத்தாளன் என்பவனை (எந்திரமயமாக்கலுக்குப் பின்பு) ஒரு உற்பத்தியாளனாய் காணும் நிலை ஏற்படுவதற்கு முன்பு இந்த காப்புரிமை அவசியத்தை யாரும் உணர்ந்திருக்கவே இல்லை. ஒரு கதை பலவாறாக திரிந்து பல வடிவங்களெடுத்து அதைக் கூறுபவரே அதன் உரிமையாளன் என ஆனதே நம் பண்டைய கதைகூறல் மரபு. ஆசியா முழுக்க பாரதக் கதைகள் நூறு நூறு திரிபுகளுடன் உலவுகின்றன. அவை ஒரிஜினலாய் யாரோ ஒருவரின் மூளையில் உதித்தது தானே? அதை திருட்டு என யாரும் அன்றும் இன்றும் கவலைப்பட்டதில்லை. ஆனால் இன்று நிலைமை மாறி விட்டது. இன்று ஒரு படைப்பை படைப்பாளனுக்கு மட்டுமே சொந்தமான பண்டமெனப் பார்க்கிறோம். ஆனால் படைப்பின் இயல்பே சங்கிலித் தொடர் போல மற்றொரு படைப்பை நினைவுபடுத்துவதும், அதனால் பாதிப்படைவதுமே. இந்தியாவில் வெளியான எந்த கேங்ஸ்டர் படத்திலாவது “காட்ஃபாதர்” தாக்கம் இல்லாமல் உண்டா? நாம் “காட்ஃபாபதரின்” மூலத்தை துலக்கினால் மற்றொரு ஒரிஜினல் தட்டுப்படும். இப்படியே தான் போகும்.

இதில் எந்த அளவிற்கு தழுவப்பட்டது, உருவப்பட்டது போன்ற வாதங்களில் எந்த அர்த்தமும் இல்லை. ரெண்டு சீன்கள் உருவப்பட்டால் தப்பில்லை, ஆனால் பத்து சீன்கள் என்றால் தப்பா?

சர்க்கார் விவகாரத்தில், 1) வருணின் கதைக் கருவை அறிந்தே முருகதாஸ் பயன்படுத்தி இருக்கலாம், அல்லது 2) எதேச்சையாய் அமைந்திருக்கலாம். நடைமுறை சார்ந்து யோசிக்கையில் 1 தான் சரியாக இருக்கும் என நினைக்கிறேன். சிவாஜியின் ஓட்டையே ஒருவர் கள்ள ஓட்டாய் போட்டார் என்கிற ஒற்றை வரியைக் கொண்டு தான் கதையமைப்பை உருவாக்கினோம் என ஜெயமோகன் குறிப்பிடுகிறார். இது சரி எனில், அச்சம்பவம் நடந்து சுமார் இரு பத்தாண்டுகள் வருடங்கள் ஆகின்றன. முருகதாஸ் போன்ற ஒரு வெற்றிப்பட இயக்குநர் அந்த ஒற்றை வரியைக் கொண்டு படமெடுக்க இத்தனை வருடங்கள் ஏன் காத்திருந்திருக்க வேண்டும் எனும் கேள்வி எழுகிறது. ஆனால் வருண் 2004இல் இக்கதை வரியை அப்போதே உருவாக்கி வாய்ப்புக்காக காத்திருந்தார் என்பது நம்பத்தகுந்ததாய் உள்ளது.

சரி எப்படியோ முருகதாஸ் இவ்வரியை எடுத்துக் கொண்டு திரைக்கதையை உருவாக்குகிறார். இப்போது சர்ச்சை ஏற்பட நாம் ஒட்டுமொத்தமாய் இது ஒரு காப்பியடித்த கதை என்கிறோம். இது மிகைப்படுத்தல் இல்லையா? கதையின் மூல ஐடியா இன்னொருவருடையது எனினும், திரைக்கதை உருவாக்கியவர்கள் முருகதாஸ் உள்ளிட்ட கதை இலாகா அல்லவா?
முருகதாஸ் தான் கதை வரியை மட்டுமே வரித்துக் கொண்டதை ஒப்புக் கொண்டால் தனக்கு கெட்ட பெயர் ஏற்படும் என அஞ்சியதாய் பாக்யராஜ் கூறுகிறார். தழுவல் கதைகளை அவற்றுக்குரிய மரியாதை அளித்து ஏற்க நாம் தயாராக வேண்டும். அப்போதே கதை தழுவல்காரர்கள் அதை பொதுவில் ஒப்புக்க தயங்க மாட்டார்கள். MeTooவினர் குறுஞ்செய்தி அனுப்புவதையும் பலாத்காரம் செய்வதையும் ஒன்றாய் பாவித்து “அவன் தலையை கொய்” என கூச்சலிடுவதைப் போன்றே நாம் இந்த மாதிரி தழுவல் விவகாரங்களில் நடந்து கொள்கிறோம். சம்மந்தப்பட்டவர்கள் அஞ்சி பின்வாங்கி உண்மையை ஒப்புக்காமல் மறுக்கிறார்கள்.

ஒரு படத்தின் கதை, வசனம், திரைக்கதை அனைத்தும் தனதே என கோரும் ஒரு தேவையற்ற பிம்பத்தை இயக்குநர்கள் நீண்ட காலமாய் சுமக்கிறார்கள். அவசியமற்ற ஒரு கிளுகிளுப்புக்காக இதை செய்கிறார்கள். விளைவாக திரைக்கதை எழுத்தாளர் எனும் இடத்துக்கான மரியாதையை தர மறுக்கிறார்கள். திரைக்கதையை எழுதி வாங்கிக் கொண்டு அதில் சில பல மாற்றங்களை செய்து தம் திரைக்கதை என போட்டுக் கொள்கிறார்கள். டைட்டில் போடும் போது “கதை திரைக்கதை இயக்கம்” என தம் பெயருக்கு மேல் போட்டுக் கொண்டு “வசனம்” எனும் தகுதியை மட்டும் திரைக்கதையாளருக்கு அளிக்கிறார்கள்.

இந்த அகந்தையை ஒழித்து விட்டால், தழுவலை ஒப்புக் கொள்ளும் கௌரவ சூழல் ஏற்பட்டால் “சர்க்கார்” போன்ற அநீதிகள் நடக்காது. தாம் தழுவி உருவாக்கிய கதையை ஒட்டுமொத்தமாய் காப்பி எனக் கூறி மீடியாவில் மக்களிடம் தர்ம அடிவாங்கும் அவல நிலையும் முருகதாஸ் போன்றோருக்கு ஏற்படாது.

Leave A Reply

Your email address will not be published.