நேற்றைய தினம் புதிதாக பதவியேற்ற பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்ட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் சற்றுமுன்னர் முக்கிய சந்திப்பு இடம்பெற்றுள்ளது .
விஜேராம இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது .நாட்டில் நிலவும் தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளது என்று தெரிய வருகின்றது ..
இந்த சந்திப்பில் பிரதமர் மகிந்த சம்பந்தனிடம் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலத்தை நிரூபிக்க கூட்டமைப்பின் 16 எம்.பிக்களின் ஆதரவு தனக்கு தேவை என்று தெரிவித்துள்ளார் ..
மகிந்தவின் கோரிக்கைக்கு பதிலளித்த சம்பந்தன் ,“எமது கோரிக்கைகளை நீங்கள் விரைவில் நிறைவேற்றுவேன் என எழுத்துமூலம் ஒப்புதல் தரும்பட்சத்தில் எமது ஆதரவினை உங்களுக்கு வழங்குவது தொடர்பில் கூட்டமைப்பின் சக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து முடிவு எடுப்போம்” என்று பதிலளித்துள்ளார் .
இந்த முக்கிய பேச்சுவார்த்தையின் போது முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸூம் கலந்துகொண்டார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக் கூட்டம் இன்று முற்பகல் 11 மணிக்கு நாடாளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
அரசியல் பிரச்சனைக்கு உரிய தீர்வு , அதாவது வடக்கு கிழக்கு இணைந்த சமஸ்டி ஆட்சி , அரசியல் கைதிகளை உடனடியாக விடுவித்தல் , ஆக்கிரமிப்பு நிலங்களை விடுவித்தல் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து எழுத்து மூலமான ஒப்புதலை பெற்று மகிந்தவுக்கு கூட்டமைப்பு ஆதரவளிக்குமேயானால் அது வரவேற்க தக்க விடயம் .
மகிந்தவுக்கு எழுத்து மூலமான ஒப்புதல் அடிப்படியில் ஆதரவளிப்பதன் மூலம் ஆக குறைந்தது அரசியல் கைதிகளை சரி விடுவிக்க முடியும் .பல வருட காலமாக விசாரணைகள் எதுவும் இன்றி தமது இளமை காலத்தினை தொலைத்து சிறைகளில் வாடும் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டிய தார்மீக கடைப்பாடு தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு உள்ளது .
தமது அரசியல் சுகபோகங்களை தவிர்த்து தமிழ் மக்களின் நலன் சார்ந்த நல்ல முடிவினை தமிழ் தீசிய கூட்டமைப்பு எடுக்க வேண்டும் என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு .