தமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சியை ஆரம்பித்தார் விக்னேஸ்வரன்

0

தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில் இக்கட்சியின் பெயரை அறிவித்துள்ளார்.தமிழ் சிங்கள முரண்பாடு 2019 உடன் நூற்றாண்டை எட்டுகின்றது. ஆனாலும் அதற்கான அடிப்படை காரணங்கள் ஏதுமே மாறவில்லை. நாங்கள் முன்னெடுப்பது தற்பாதுகாப்பிற்கான போராட்டம். அதனை சோர விடாது தொடர்ந்தும் முன்னெடுப்போம். எமது பொருளாதாரத்தில் பின்தங்கியிருந்த சிங்கப்பூர் இப்போது எட்ட முடியாத இலக்கை அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கதென முதல் அமைச்சர் தனது நல்லூர் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி என்பது ஆட்சி மாற்றமேயன்றி தமிழ் மக்களிற்கு தீர்வை தரவில்லை.
அதிகாரமற்ற மாகாண சபையில் எங்களால் செய்ய முடிந்தமை பற்றி நேற்று பேசியிருந்தேன்.
எங்களுக்கு தேவை சலுகையல்ல.உரிமையே எங்கள் தேவையெனவும் முதலமைச்சர் தெரிவித்தார்.

வடக்கு ஆளுநர் முதலமைச்சர் நிதியத்தை முடக்கி விட்டு இப்போது இலண்டன் சென்று புலம் பெயர் உறவுகளிடம் பிச்சை கேட்கிறார். என்னிடமுள்ள நான்கு தெரிவுகள் பற்றி கூறியிருந்தேன். வீட்டே செல்வது, வேறு கட்சியில் இணைவது என்பது பொருத்தமில்லாது போய்விட்டது. அவ்வகையில் கைப்பொம்மையாக கூட்டமைப்பில் இணைந்து போட்டியிடுவது சாத்தியமற்றதாகி விட்டது.

தமிழ் மக்கள் பேரவையுடன் இணைந்து மக்கள் இயக்க பாதையும் சில சில காரணங்களால் சாத்தியப்படாதுள்ளது.
அகிம்சை வழி எமது போராட்டம் பின்னர் ஆயுதப் போராட்டமாக மாறியது தெரிந்ததே.அதிலும் ஒரு சில வாக்குகளால் முறையற்று வந்த சிலர் தற்போது என்னை ஏதும் செய்யவில்லையென குற்றஞ்சாட்டுகின்றனர். அவ்வாறு 9 வாக்கு பெற்று வந்த கட்சியுடன் இப்போது கூட்டமைப்பு கூட்டு வைத்துள்ளது.

எமது போராட்டத்தை பயங்கரவாத போராட்டமென காண்பிக்க கை கொடுத்த இதே தரப்புக்களே இப்போது கூட்டு சார்ந்து அரசியல் பாதையில் பயணிக்கின்றனர்.வலிவடக்கில் துண்டு காணிகளை விடுவித்து விட்டு முல்லைத்தீவில் மாவட்டத்தையே சுருட்டி வருகின்றனர். அதனை கூட்டமைப்பு தலைமை வாய் மூடி பேசாதிருக்கின்றது.
மன்னார் புதைகுழி பற்றி வாயே திறக்க கூட்டமைப்பு தான் பெறுகின்ற சலுகைக் கு விசுவாசமாகவே பேசாதிருக்கிறது.
அரசியல் கைதிகள் விடுதலைக்கு வாய் திறக்க முடியாதிருக்கிறது.

.அதனால் தான் அரசியல் கட்சியொன்றை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளேன்.

உள்நாட்டு, வெளிநாட்டு உறவுகளது ஆதரவுடன் களமிறங்குகிறேன்.

எனது மக்களே எனது பயணத்தை தீர்மானிப்பர். தமிழ் தேசிய சிந்தனை சார்ந்த அனைவரையும் இணைத்து பயணிப்பேன்.
ஆனாலும் கூட்டமைப்பை உடைத்ததென்ற பெயரை விரும்பவில்லை. ஆனால் கூட்டமைப்பே தனது நேர்மையற்ற அரசியலால் என்னை தனித்து அரசியல் பயணததை முன்னெடுக்க வழிகோலியிருக்கின்றது.

Leave A Reply

Your email address will not be published.