நவம்பர் 16 இல் மகிந்தவின் மாஜாயாலம் என்ன? இலங்கையில் என்ன நடக்கப் போகிறது?

0

ஒன்றான் வீட்டு தெய்வம் ஒதுங்கியிருக்க….மூலைவீட்டு தெய்வம் குங்கிலியத்துக்கு ஆலாய் பறந்ததாம். இலங்கைத்தீவில் (சிறிலங்காவின்) ஆட்சிக்குழப்பங்களுக்கு இடையில் சீனா தனக்குரிய குங்கிலியத்துக்கு ஆலாய் பறந்தபோது இதுதான் தெரிந்தது. சிறிலங்காவின் புதியபிரதமராக மைத்திரியால் நியமிக்கப்பட்ட மஹிந்தவை அவரது வதிவிடத்தில் சந்தித்து வாழ்த்திய சீனத்தூதர் அதேகையுடன் ரணிலிடமும் ஓடிச்சென்று (துக்கம்விசாரிப்பு? )திரும்பினார்.

இவ்வளவுக்கும்… இலங்கையின் சமகாலஅரசியல் அக்கப்போரில் பெரியண்ணனான இந்தியாவின் அதிகாரபூர்வ அதிர்வுகள் இதுவரையில்லை. உள்குத்தாக ஏதும் இடம்பெறுகின்றதோ தெரியவில்லை. சிறிலங்காவின் இந்த பின்கதவு அரசியல்சதி ஆட்டத்தின் உண்மையான இறுதி தோல்வியாளராக இறுதியில் மாறப்போவது மைத்திரியே. ஏன் இவ்வாறு இப்போது சொல்கிறேன் என்பது கொஞ்சக்காலத்தில் தெரியும்.

ஆகமொத்தம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் எஸ்.பி திசாநயக்காவின் வீட்டில் மைத்திரியும் மகிந்தவும் இரகசியப்பேச்சுக்ளை நடத்தியபின்னர் துரிதமாக நண்பர்களையும் எதிரிகளையும் இடம்மாற்றிய அரசியல்வந்தது.
ஆனால் சதிகள் மட்டும் தொடர்கின்றன. முன்னர் மகிந்த தனது ஆட்சியில் தலைமை நீதிபதி சிரியானியை மாற்றியது போலவே இப்போது மைத்திரி ரணிலை மாற்றியுள்ளார். இந்தமுறை இந்த சதிஅரசியலமைப்பு சதியாக வந்தது அவ்வளவுதான்
2014 இறுதியில் மகிந்த கையால் அப்பம் சாப்பிட்டுவிட்டு அவருக்கே ஆப்படித்த மைத்திரி இப்போது 2018 இறுதியில் ரணிலுக்கு அதேபாணியில் ஆப்படித்திருக்கிறார். காலையில் ரணிலுடன் இருந்தவர் மாலையில் மகிந்தவுடன் நின்றார்.
இவ்வாறானவரை நம்பி தமிழருக்கு தீர்வுவருமென சொல்லிய வகையறா தொகையறா தமிழ் முகங்கள் இனி என்ன சொல்லக்கூடும்?

ஆனால் இப்போது எல்லோர் கண்களும்; நவம்பர் 16 இல் கூடும் நாடாளுமன்றத்தில் மகிந்தசெய்யப்போகும் மாஜாயாலத்துக்காக (பெரும்பான்மையை நிருபிக்கும்) காத்துள்ளன. நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டாமல் ஏன் அதனை நவம்பர் 16 வரை மைத்திரி ஒத்திவைத்தார் என யாரும் வெள்ளந்தியாக வினவக்கூடாது. தற்போதைய நிலையில் மகிந்தவுக்கு தலைமையமைச்சராக பெரும்பான்மையை நிருபிக்கும் சாதக நிலைஇல்லை. மாறாக ரணில் தரப்பால் பெரும்பான்மை நிருபிக்ப்படக்கூடும். இதனால் ரணிலின் வெற்றியை தடுக்கவே இந்த முடக்கம்.

இதற்கும் அப்பால் கொடுப்பதை கொடுத்து வாங்குவதை வாங்கும் ஆள்பிடிப்பு நகர்வுகளுக்கு குறைந்தது 2 வாரங்களாவது தேவைப்படத்தானே செய்யும். ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மஹிந்தவுக்கு ஆதரவு என அதன் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த அளுத்கமகே கூறுகிறார்.தனக்கு ரணில் அமைச்சுப்பதவியை வழங்கவில்லையென்ற கோபத்தில் இருக்கும் ஐ.தே.க உறுப்பினர் இப்போது ரணிலை வஞ்சம் தீர்க்க மகிந்தவுக்கு ஆதரவளிப்பது வெளிப்படை
இன்று மைத்திரி நாட்டு மக்களுக்கு நடத்தவுள்ள விஷேட உரையில் மகிந்தவுக்கு பதவி வழங்கியமை தான் செய்த அரசியலமைப்பு சதி நகர்வு அல்ல என்பதை நிருபிக்க முயலுவார்.

அத்துடன் தன்மீதான கொலைச்சதியில் உள்ள சில கதைகளை ரணில்தரப்புடன் தொடர்புபடுத்தி அவர்கூறக்கூடும். இந்த கதைகள் முடிவுற்ற பின்னர் நாளை திங்கட்கிழமை புதிய அமைச்சரவை நியமிக்கப்படவுள்ளது. புதிதாக அரசாங்கம், தேசிய அரசாங்கம் இல்லையென்பதால் அதில் அதிகமான 30 அமைச்சர்களே இடம்பிடிக்க முடியும்(இது அரசியலமைப்புவிதி)இதனால் புதிய அமைச்சரவையில் இடம்பிடிப்பதற்கான உள்குத்துகளின் மூலம் சில ரணில் பக்கம் தாவிவிடக்கூடாது என்;ற அச்சத்தின் முன்னோடியாக மைத்திரி- மஹிந்த சமேதர தரிசனத்தை ஐக்கிய மக்கள் சுதந்திரமுன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று செய்தனர்.

மைத்திரி செய்தது ஒரு அரசியலமைப்பு சதி எனினும் அதனை அவர் சூட்சுமமாக செய்தார்.
நுட்பமாகநோக்குங்கள்….நல்லாட்சி அரசாங்கத்திலிருந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி விலகும் முடிவு கடந்த 26 மாலை எடுக்கப்பட்ட பின்னர்தான் இந்த அரசியலமைப்பு சதி பின்கதவால் வந்தது. சிறிலங்கா அரசியலமைப்பின் 19 திருத்தத்தில் உள்ள 46 (2) சரத்தின்படி பிரதமரை நீக்கும் அதிகாரம் அரசதலைவருக்கு இல்லை. இது யதார்த்தம். (46 (2) சரத்தானர் அரசதலைவர் ஒருவர் பிரதமரை நியமிக்கலாம் ஆனால் நீக்க முடியாதென்கிறது.)

எனினும் மைத்திரியின் இந்த அரசியலமைப்புச்சதி சற்று வித்தியாசமானது. அதாவது அரசியலமைப்பின் 46 (2) சரத்தின்படி அமைச்சரவை இருக்கும்வரை அரசதலைவர் பிரதமரை நீக்கமுடியாதென்ற மறுவாசிப்பு ஒன்றும் உண்டு.
இதனால்தான் அரசாங்கத்திலிருந்து முதல்லில் ஐக்கிய மக்கள்சுதந்திர முன்னணி விலகும் நகர்வு கடந்த 26 மாலையில் முதலில் எடுக்கப்பட்டது அதாவது நல்லாட்சி எனப்;பட்ட தேசியஅரசாஙகத்தில் இருந்த இரண்டு முக்கிய கட்சிகளில் ஒரு கட்சிவிலகினால் தேசியஅரசாங்கம் கவிழும். அரசாங்கம் கவிழ்ந்தால் கூடவே அமைச்சரவையும் கலைந்துவிடுமெல்லவா?(அதாவது ரணிலை மைத்திரி பதவிநீக்கம் செய்யாமலேயே)

இதன்பின்னர்தான் புதிய பிரதமரை நியமிக்கும் அதிகாரத்தை மைத்திரி எடுத்தார். அப்படிபார்த்தாலும் நாடாளுமன்றத்தில் அதிக ஆசனங்களை கொண்டுள்ள ரணிலைத்தான் அவர் அழைத்திருக்கவேண்டும் இதனால் மைத்திரிய செய்தநகர்வு ஒரு குறுக்கு வழியாக நிறுவப்படுகிறது. இது அரசியலமைப்புசதியே.இந்தவிடயத்தில்தான் இப்போது மேற்குலம் அதிகம் கவலையடைகிறது. அரசியலமைப்பின்படி நடக்குமாறும் அது சிறிலங்காவை கோருகிறது
எது எப்படியோ நாளை புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டபின்னர் சிறையில் உள்ள ஞானசாரதேரர் முதலான சில முகங்கள் வெளிவரும் காட்சிகளை மஹா ஜனங்கள் காணமுடியும்.

இதற்கிடையே அரசியல்அமைப்பின்படி யானே பிரதமர் என மைத்திரியிடம் முதுகில் குத்துவாங்கிய காயத்துடன் முனகும் ரணிலை அலரிமாளிகையில் இருந்து அப்புறப்படுத்தும்நகர்வுகள் இப்போது எடுக்கப்படுகின்றன. ரணிலின் பாதுகாப்பைநீக்க இப்போது மைத்திரிஅறிவுறுத்தியுள்ளார். பெரியண்ணன் வீட்டுஉயர்தானிகர் மற்றும் மேற்குலகம் உட்பட்ட ராஜதந்திரிகளை(அமெரிக்கா, பிரித்தானியா ஜப்பான், கனடா, ஒஸ்ரேலியா) அலரிமாளிகைக்கு நேற்று மாலை வரவழைத்த ரணில் தனக்கு நடந்த சோகக்கதையை கூறி நீதிகோரிவருகிறார். இதனால் அவரை முடக்க எடுக்கப்படும் நகர்வுகள் இவை.
இவ்வாறான நகர்வுகளின் பின்னணியில் நாளை கொழும்பு வீதிகளில் ஐக்கியதேசியக்கட்சிக்காரர்கள் இறங்கி போராடப்போகின்றார்கள்.

கடந்த சிலவாரங்களுக்கு முன்னர் மகிந்தாவாதிகள் இதேபோல வீதியில் இறங்கிய நிலையில் இவ்வாறு எல்லாம் போராடி அரசாங்கத்தை கவிழ்க்க முடியாதென்றவர்கள் இப்போது அதேபாணியில் போராடி ஆட்சியை கோரப்போகின்றார்கள்.
இதற்கிடையே ஆதரவு மற்றும் ஆள்பிடிப்பு ஆட்டங்கள் பகிரங்கமாகவும் மறைமுகமாகவும் தொடர்கின்றன.

6 நாடாளுமன்றஆசனங்களை வைத்துள்ள தமிழ் முற்போக்குகூட்டணியும் 7 ஆசனங்களை கொண்டுள்ள முஸ்லிம் கொங்கிரஸ் ரணிலுக்கு ஆதரவு தெரிவித்தன. இதனை மனோ கணேசன் ரவூப் ஹக்கீமும் உறுதிப்படுத்தினர்.
மஹிந்தவுக்கே தமது ஆதரவென்கிறது 2 ஆசனங்களை, ஆறுமுகம் தொண்டானின் இலங்கை தொழிலாளர் கொங்கிரஸ். இரண்டுதரப்புக்கும்; ஆதரவு இல்லையென்கிறது 6 ஆசனங்கள் உள்ள ஜே.வி.பி.

ஆனால் 16 ஆசனங்களை கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரை இந்தவிடயத்தில் வெளிப்படையாக எதுவும் சொல்லவில்லை. ரணில் மஹிந்த ஆகிய இரண்டு முகங்களின் அடிப்படையில் முடிவு எடுக்க முடியாது. கொள்கையின் அடிப்படையில் முடிவென்கிறார் இரா. சம்பந்தன் அவரை பொறுத்தவரை இந்த ஆட்டத்தில் தனது எதிர்க்கட்சித்தலைவர் பதவியும் பணயத்தில் உள்ளது தெரியும்.

இந்தமுறையாவது கையறு நிலையில் உள்ள தமிழ் ம்ககளுக்காக நல்லதொரு பேரத்தை கூட்டமைப்பு பேசுமா எழுத்துமூலம் உத்தரவாதங்களை பெற்றுக்கொள்ளுமா? இல்லை பழைய குருடி கதவை திறவடி என செல்லுமா? என்பதும் ஒருவிடயம்

-Sivaguru Premananthan

Leave A Reply

Your email address will not be published.