எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் மாவை சேனாதிராஜா போட்டியிடாவிட்டால் நானே முதலமைச்சர் வேட்பாளர் என வட.மாகாண சபையின் முன்னாள் அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.
பேரவைச் செயலகத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
வடமாகாண சபையின் ஆட்சிக் காலம் நிறைவுற்ற பின்னரான திட்டங்கள் மற்றும் எதிர்வரும் மாகாண சபை வேட்பாளர் யார் என கேட்ட போதே அவர் இவ்வாறு பதிலளித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “மாவட்டக் கிளையின் தற்போதைய தீர்மானத்தின் பிரகாரம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாகாண சபை வேட்பாளர் தமிழரசு கட்சி சார்ந்தவராக இருக்க வேண்டுமென்றும் தமிழரசு கட்சியின் யாப்பின் அடிப்படையில் ஆகக்குறைந்த சேவைக் காலத்தினைக் கொண்டவராகவும் இருக்க வேண்டுமென்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் பொதுவாக மாவை சேனாதிராஜா முதலமைச்சராக வர விருப்பம் தெரிவித்த காரணத்தினால் ஏற்கனவே மாவை சேனாதிராஜாவை ஆதரிப்பேன்.
சில சமயங்களில் மாவை சேனாதிராஜா மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடாத நிலை ஏற்படுமேயானால் அந்த இடத்தில் அடுத்த தெரிவாக உரித்துடையவன் நான் என்பதே எனது நிலைப்பாடு. அந்த சந்தர்ப்பத்தில் எனது கோரிக்கையை முன்வைப்பேன்.
கட்சியின் செயல்நிலை மற்றும் மாகாண அங்கீகாரங்கள் கடந்த 5 வருடங்களில் நான் செயற்பட்ட விதங்கள் அநுபவங்கள் அறிவுகள் இவற்றின் அடிப்படையில் அந்தத் தகுதி எனக்கு இருக்கின்றன என்பதை மற்றவர்களும் ஏற்றுக்கொள்வார்கள் என நம்புகின்றேன். ஆகவே மாவை சேனாதிராஜா போட்டியிடாத சூழ்நிலையில் எனது கோரிக்கையை வலியுறுத்துவேன்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.