பிரபாகரன் என்று பெயர் வைத்ததற்காக பெருமைப்படுகிறேன்! விஜயகாந்தின் மகன்!!

0

பொறுப்பை தேடிப் போவது அரசியல் அல்ல; சேவையை தேடி வருவது தான் அரசியல்: விஜயகாந்த் மகனின் முதல் அரசியல் மேடைப் பேச்சு

பொறுப்பை தேடிப்போவது அரசியல் இல்லை, சேவையை தேடி வருவதுதான் அரசியல் என்று விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் தெரிவித்தார்.

திரையுலகில் வெற்றியை ருசித்துவிட்டு, அரசியல் களத்தில் இறங்கினார் விஜயகாந்த். தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கி, சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் என்ற மாபெரும் இடத்தையும் பிடித்தார்.

விஜயகாந்த்தின் அரசியல் பயணத்தில் அவரது குடும்பத்திலிருந்து மனைவி பிரேமலதா, சுதீஷ் ஆகியோர் மட்டுமே இடம்பெற்றிருந்தார்கள். விஜயகாந்த் கலந்து கொள்ள இயலாத கட்சி நிகழ்ச்சிகளில் பிரேமலதா அல்லது சுதீஷ் கலந்து கொள்வார். ஆனால், விஜயகாந்தின் மகன்களான பிரபாகரன் மற்றும் சண்முகபாண்டியன் இருவருமே அரசியல் மேடையை பார்க்காமலே இருந்தனர்.

யாரும் எதிர்பாராத வகையில் அரசியல் பிரவேசம் கண்டுள்ளார் விஜயகாந்தின் மூத்த மகன் பிரபாகரன். விஜயகாந்த் பிறந்தநாள் மற்றும் தேமுதிக-வின் 14ம் ஆண்டு விழாவை முன்னிட்டு அனகாபுத்தூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இதில் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் கலந்து கொண்டு அதிக மதிப்பெண் பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். அந்த மேடையே அவரது முதல் அரசியல் மேடை என்பதால், தனது அரசியல் பயணம் தொடங்கியிருப்பதை அவரது பேச்சில் உறுதி செய்தார்.

இவ்விழாவில் விஜய பிரபாகரன் பேசியதாவது:

மாணவர்கள் எப்போதுமே ஒரு துறையில் மட்டும் கவனம் செலுத்தக்கூடாது. பல்வேறு துறைகளில் கவனம் இருந்தால் தான் அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொண்டு வாழ்க்கையில் ஜெயிக்க முடியும்

நான் படித்து முடித்தவுடன் “ஏதாவது வேலையில் சேர்த்து விடட்டுமா” என்று அப்பா கேட்டார். அதற்கு “விஜயகாந்த்தின் மகனாக வெற்றி பெற விரும்பவில்லை. பிரபாகரனாகவே ஜெயிக்க விரும்புகிறேன்” என்று தெரிவித்தேன். என் விருப்பப்படியே விட்டுவிட்டார். எதுவாக இருந்தாலும் அடிப்படையில் இருந்தே செய்ய வேண்டும் என்று அப்பா கூறுவார். அவரது சொல்படி செயல்பட்டு தான் இன்று வெற்றி பெற்றிருக்கிறேன்.

எனக்கு பிரபாகரன் என்று பெயர் வைத்ததற்காக மிகவும் பெருமைப்படுகிறேன். அது புனிதமான பெயர். எப்போதுமே மனதுக்கு பிடித்த வி‌ஷயங்களை விரும்பி செய்வேன். எந்த வெளிநாடுகளுக்கு சென்றாலும் எனக்காக 100 பேர் நிற்பார்கள். எப்போதுமே ஒரே மாதிரி சிந்தனையில்லாமல் மாற்றி யோசிக்க வேண்டும். அப்போது தான் வெற்றி கிடைக்கும்.

எனக்கு பிடித்த இடத்தில் நின்று கொண்டிருக்கிறேன். இதிலும் எனக்கு வெற்றி கிடைக்கும். அப்பா எனக்கு வைத்த பிரபாகரன் என்ற பெயரை காப்பாற்றும் வகையில் செயல்படுவேன். கூட்டத்துக்கு புறப்படும் போது அப்பா 2 வி‌ஷயங்களை என்னிடம் சொல்லி அனுப்பினார். ”கட்சியினரிடம் சீக்கிரம் வருவேன் என்று சொல்லு. கூட்டத்தை சீக்கிரம் முடிக்க சொல். மழை வருவது போல் இருக்கிறது. பெண்கள் எல்லாம் சீக்கிரம் வீட்டுக்கு செல்ல வேண்டும்” என்றார். அதற்கு”நம் கட்சி பெண்கள் எல்லாம் மிகவும் தைரியமானவர்கள். எதற்கும் பயப்பட மாட்டார்கள்” என்றேன்

ஒரு லட்சம் பேர் வந்தாலும் தேமுதிகவை அசைக்க முடியாது. ஏன் அதிலிருந்து ஒரு செங்கலை கூட உருவ முடியாது. என்னோடு இணைந்து செயல்பட பல இளைஞர்கள் முன்வருவார்கள். கண்டிப்பாக சாதித்து காட்டுவேன். அதற்கு நீங்களும் கை கொடுக்க வேண்டும்.
எப்போதுமே எனக்கு திமிர் அதிகம். அதோடு சொல்கிறேன். சத்தியமாக தேமுதிக ஆட்சியைப் பிடிக்கும். அதற்கு நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.

இவ்வாறு மேடையில் பேசினார் விஜய பிரபாகரன்.

அந்நிகழ்ச்சி முடிந்தவுடன் விஜய பிரபாகரன் பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசியதாவது:

தீவிர அரசியலில் ஈடுபட போகிறேன். இளைஞர் அணி பொறுப்பு கொடுக்கப் போவதாக பேச்சு இருக்கிறது. பொறுப்பை தேடிப்போவது அரசியல் இல்லை, சேவையை தேடி வருவதுதான் அரசியல். மக்கள் நலமுடன் வாழ வேண்டும் என்று விரும்புகிறேன். அதற்காக நிறைய திட்டங்களை வைத்துள்ளேன். அவை அனைத்தையும் செயல்படுத்துவேன். நான் கட்சியில் பொறுப்பு வகிப்பது குறித்து கட்சி தான் முடிவு செய்யும். என் அப்பா செய்யாததை நான் ஒன்றும் செய்து விடப்போவதில்லை. அவர் செய்ததைத் தான் நானும் செய்யப்போகிறேன்.

இவ்வாறு பத்திரிகையாளர் மத்தியில் பேசினார்.

Leave A Reply

Your email address will not be published.