மகிந்த பிரதமர் அடுத்து என்ன? சிறிலங்காவின் அரசியல் ஆட்டப்பார்வை!

0

நெருப்பில்லாமல் புகை வருமா? இது சிறிலங்கா அரசியலை பொறுத்தவரை இன்று மாலை இது பழையமொழி. புகையில்லாமல் நெருப்பு வந்து மகிந்த பிரதமாராகி விட்டமை புதிய செய்தி.

எல்லா நகர்வுகளுமே டொமினோ கட்டைகள் போல படபடவென சரிந்தன. தேசிய அரசாங்கத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு விலகிய பின்னர் இவை யாவும் சடுதியாக படபடவென மாறின. படபடவென கொழும்பில் பட்டாசுகளும் வெடித்தன.

அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனா முன்னால் மகிந்த பிரதமராக பதவியேற்ற காட்சிகளும் இனி மகிந்த அரசாங்கத்துக்கு ஆதரவு என றிசாட் பதியுதீன் போன்றவர்கள் பல்டி அடித்த சாட்சிகளும் வந்தன.

ஆகமொத்தம் இலங்கையில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டுள்ளது. தனது தவணையை முழுமையாக முடிக்காத ராசியற்ற பிரதமர் என்ற ராசியை ரணில் விக்ரமசிங்க மீண்டும் ஒரு முறை உறுதிப்படுத்திவிட்டார்.

எனினும் மகிந்த பதவியேற்ற பின்னரும் நானே பிரதமர் என பதறிய ரணில் சட்டவிரோத நியமனம் என நாட்டு மக்களுக்கு சொன்னார்.

மஹிந்த பதவியேற்றமை, அரசமைப்புக்கு முரணானது என்பதால் பிரதமராக, தானே தொடர்ந்தும் பதவியில் உள்ளதாகவும் ரணில் சொல்கிறார். மங்கள சமரவீரவும் ஆமென் என அறிக்கைவிட்டார்.

ஆனால் இன்றை நகர்வுகளுக்கு முன்னர் ஒரு சூட்சும நகர்வு இருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் எஸ்.பி திசாநாயக்கா வீட்டில் ஓரு இராப்போசன விருந்துடன் இரகசியச் சந்திப்புநடந்ததாக செய்தி வெளியாகியபோதே இதற்குரிய சுழிகள் போடப்பட்டன.

இந்தப் பேச்சுக்களில் மஹிந்தவைப் பிரதமராகக் கொண்ட, இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைப்பது குறித்தும் பேசப்பட்டது. மைத்திரியை படுகொலை செய்வது தொடர்பான சதித்திட்டம் தொடர்பாக, அவருக்கே தெரியாத அதிர்ச்சி தகவல்களை, மஹிந்த வெளிப்படுத்தினார்

இந்தச்சந்திப்புப் பற்றிய தகவல்கள் வெளியானவுடன், எந்தத் தரப்பும் அதை மறுக்கவில்லை. பின்னர் மெல்லமெல்ல மறுத்தன. ஆனால் இன்று முன்னிரவில் மைத்திரி முன்னால் மகிந்த பிரதமராக பதவியேற்ற காட்சிகளுடன் இது உறுதிப்படுத்தப்பட்டது.

நாடாளுமன்ற ஆசனங்களின் யதார்த்தப்படி ஒன்றிணைந்த எதிரணியான மகிந்தாவாதிகள் சிறிலங்கா சுதந்திரக்கட்சியுடன் சேர்த்தால் கூட, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இல்லை.

இதனால் சிறுபான்மைக் கட்சிகளின் ஆதரவைப் பெற்றோ, அவற்றை உடைத்தோ, அல்லது ஐ.தே.கவின் பக்கத்தில் இருந்து சிலரை இழுத்தோ தான், இந்தத் திட்டம் நிறைவேற்ற வேண்டும். அதுதான் இனி நடக்கும்.

தற்போதைய அரசாங்கம்; கவிழ்ந்துவிட்டது இனி யாருக்கு என்ன இலாபம்?

எஸ்.பி. திஸாநாயக்க உள்ளிட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் திரிசங்கு நிலையிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் 15 பேரும், இப்போது, பிரதமர் மகிந்தவின் கீழ்.

விமல் வீரவன்ச, மஹிந்தானந்த அளுத்கமகே, கெஹலிய ரம்புக்வெல போன்றவர்கள் அவசரத்துக்கும ஒரு அவசர தீர்வு இனி அவர்களுக்கும் அரசாங்கத்தின் சலுகைகள் கிட்டும்.

ஒன்றிணைந்த எதிரணியைப் பொறுத்த வரையில், அரசாங்கத்தைக் கவிழ்த்து மஹிந்த ராஜபக்ஷவைப் பிரதமராக்கிய கைங்கரியத்தை செய்துவிட்டது.

இனி இடைக்கால அரசாங்கத்தின் கீழ் தேர்தலை நடத்தினால், ஆட்சியைப் பிடிப்பதும் சுலபம். ஏன்ற கணக்கு உள்ளது.

இயலுமானால் முடிந்தால், 19ஆவது திருத்தத்தில், திருத்தம் செய்து, அரசதலைவருக்காக அதிகாரத்தை மீண்டும் கொண்டு வர முடியும். இல்லாவிட்டால், மஹிந்தவே பிரதமர்

ஆகமொத்தம், ஐ.தே.க என்ற யானையின் தும்பிக்கையை வெட்டிவிட்டு, இடைக்கால அரசாங்கத்தைக் கைப்பற்றும் இந்தத் திட்டம் ஒன்றிணைந்த எதிரணியால் கச்சிதமாக்கபட்டுவிடடது. ஆயினும் ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்வினைகள் இனி சவாலாகத்ததான் இருக்கும்.

இனி மஹிந்த ராஜபக்ஷ, பொதுஜன பெரமுனவின் தலைமையை ஏற்;று பொதுஜன பெரமுனவை அவரது கட்சியாக மாற்ற முடியும்.

பொதுஜன முன்னணியுடன் சிறிலங்கா சுதந்திரக் கட்சி இணைந்து போட்டியிட்டால், இனியும் ஆட்சியை காப்பாற்றிக்கொள்ளலாம்

இதேபோல மைத்திரியை பொறுத்தவரையில், அவர் மீண்டும் அரசதலைவர் பதவிக்குப் போட்டியிட விரும்புகிறார்.

அவருக்கு உள்ள ஒரே தெரிவான பொதுஜன பெரமுனவிடம் தஞ்சமடைந்துவிட்டார். இதனால்தான் இன்று அவர் தனக்கு முன்னால் மகிந்தவை சத்தியப்பிரமாணம் செய்யவைத்தார்.

இப்போது பொதுஜன பெரமுனவும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்துள்ளதால் அவரை அரசதலைவர் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த முடியும்.

ஆகமொத்தம் நல்லாட்சியை உருவாக்கியபோது மைத்திரிக்கு வழங்கப்பட்ட மக்களாணையை மிதிக்கபட்டுள்ளது. மைத்திரி மக்களாணையை மதிப்பார் என்ற ஐ.தே.கவின் நம்பிக்கையும் பொய்த்தது. மைத்திரி முன்னால் மகிந்த பிரதமராக பதவியேற்ற காட்சிகள் தமிழ்மக்களையும் அச்சப்படுத்தியுள்ளது.

ஆனால் இந்தகுறுக்கு வழியில் ஆட்சி தொடருமா முட்டுச்சந்தில் முட்டுமா என்பதை இனிவரும் கொதிநிலையாக நாட்கள்தான் தீர்மானிக்கும்.

இலங்கையின் அரசியலிலும் அறம் ஏதும் இல்லை யாருடைய கை ஓங்குகிறதோ அந்தப்பக்கம் கைகள் ஓங்கக்கூடும்;.

ஆல் பழத்தால் இங்கே கிளி அரசுபழத்தால் இங்கே கிளி இதுதாக் அரசியல்.. இதில் தமிழ்தேசிய கூட்டமைப்பு கிளிகள் எந்தப்பக்கம் அதனிடமுள்ள எதிர்க்கட்சி தலைவர் பதவி நீடிக்குமா? இனி தான் அவர்களின் ஆட்டம் ஆரம்பிக்கும்.

Leave A Reply

Your email address will not be published.