உடனடியான நாடாளுமன்றத்தை அழைக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
சட்டவிரோதமான செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டாம் என்றும் அனைத்து விடயங்களையும் அரசியலமைப்பிற்கு அமையவே மேற்கொள்ள வேண்டும் என்றும் கூட்டமைப்பு இன்று நடைபெற்ற சந்திப்பின்போது குறிப்பிட்டுள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும், பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று காலை கொழும்பு – விஜேராமயவில் அமைந்துள்ள மஹிந்த ராஜபக்சவின் இல்லத்தில் நடைபெற்றது.
இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தன், கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்த அதேவேளை, பிரதமருடன் முன்னாள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கலந்துகொண்டிருந்தார்.
இந்த சந்திப்பை முடித்துக்கொண்டு வெளியே வந்த நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் சிங்கள ஊடகமொன்றுக்கு இவ்வாறு கருத்து வெளியிட்டார்.
நாங்கள் பிரதமரை சந்திக்கவில்லை. மஹிந்த ராஜபக்சவைதான் சந்தித்தோம். சட்டவிரோத காரியங்களுக்கு ஒத்துழைக்காமல் அரசியலமைப்பின்படி நடக்கும்படி வலியுறுத்தினோம். அத்தோடு நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறும் வலியுறுத்தினோம் என்று சுமந்திரன் தெரிவித்தார்.