யாழ்ப்பாணத்தில் பூசகரின் வீட்டில் வாள் வெட்டு குழு அடாவடி: அறைக்குள் அடைத்து பாரிய கொள்ளை !

0

கூரிய வாள்களுடன் உள்நுழைந்த திருட்டுக் கும்பல் வீட்டிலிருந்தவர்களை வாள்களைக் காட்டிக் கடுமையாக அச்சுறுத்தி வீட்டு அறைக்குள் வைத்துப் பூட்டி விட்டு அங்கிருந்த பெறுமதியான தங்கநகைகள் மற்றும் பணம் என்பவற்றைத் திருடிச் சென்றுள்ளனர். குறித்த சம்பவம் யாழ். சாவகச்சேரி நுணாவில் கண்ணகை அம்மன் ஆலயத்திற்கு அருகிலுள்ள ஆலயப் பூசகரின் வீடொன்றில் நேற்றுச் சனிக்கிழமை(13) அதிகாலை வேளை இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

முகமூடி அணிந்து வாள்களுடன் வீட்டு வளவுக்குள் உள்நுழைந்த எட்டுப் பேர் கொண்ட கும்பல் வீட்டின் கதவைத் தட்டியுள்ளனர். சத்தம் கேட்டு வீட்டிலிருந்தவர்கள் வீட்டுக் கதவைத் திறந்துள்ளனர்.

இதனையடுத்து குறித்த கும்பல் ஆலயப் பூசகர் உட்பட வீட்டிலிருந்தவர்களை வாள்களைக் காட்டிக் கடுமையாக அச்சுறுத்தி அறையொன்றுக்குள் அடைத்துவிட்டு அவர்கள் அணிந்திருந்த பெறுமதியான தங்கநகைகளை பறித்தெடுத்ததுடன் வீடு முழுவதும் சல்லடையிட்டுத் தேடி மொத்தமாக 18 பவுண் நகைகளையும், பணத்தையும் திருடிச் சென்றுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.