ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பை குறைக்க உத்தரவு ! மைத்திரி அதிரடி

0

பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கையை 10 ஆக குறைக்க பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கப்பட்டுள்ள மேலதிக பாதுகாப்பை விலக்கிக் கொள்ளுமாறும், அவருக்கான பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கையை 10 பேராக குறைக்குமாறும் காவல்துறை மா அதிபர் நேற்று ஞாயிற்றுக்கிழமை(28) பிற்பகல் பிரதமர் பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிக் காவல்துறை மா அதிபர் ஜெயந்த விக்ரமசிங்கவுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அவசரகதியில் இந்த உத்தரவை நடைமுறைப்படுத்துமாறும், இதுதொடர்பில் தனக்கு அறிவிக்குமாறும் பொலிஸ்மா அதிபர் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்க நீக்கப்பட்டுப் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அறிவித்தார்.

இதனால்,ரணில் விக்கிரமசிங்கவுக்குப் பிரதமர் பாதுகாப்புப் பிரிவு மற்றும் சிறப்பு அதிரடிப்படை மூலம் வழங்கப்பட்டுள்ள மேலதிக பாதுகாப்பை நீக்குமாறும் அவருக்குப் பத்துப் பாதுகாப்பு அதிகாரிகள் போதும் எனவும் பொலிஸ்மா அதிபர் தனது உத்தரவில் மேலும் கூறியுள்ளார்.

நாடாளுமன்றம் கூட்டப்படும் வரை ரணில் விக்கிரமசிங்கவின் பிரதமருக்கான சிறப்புரிமைகளை உறுதி செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு சபாநாயகர் நேற்றைய தினம் கடிதம் அனுப்பியிருந்த நிலையிலும் கூட பாதுகாப்பைக் குறைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ரணில் விக்கிரமசிங்கவின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவை அலரி மாளிகையை விட்டு வெளியேற்றப் போவதாக கூட்டு எதிரணியினர் மிரட்டி வரும் சூழலில் அவரது பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளமையால் கொழும்பில் பெரும பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, ஐக்கியதேசியக் கட்சி ஆதரவாளர்கள் தொடர்ந்தும் அலரி மாளிகையில் குவிந்து வருகின்றனர். கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் அங்கேயே தங்கியுள்ளனர்.

இதன் மூலம் எந்தவொரு நடவடிக்கையில் இருந்தும் ரணில் விக்ரமசிங்கவைப் பாதுகாக்க அவர்கள் முயற்சித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.