அடுத்த ஜனாதிபதி வேட்பாளரை முடிவு செய்த மஹிந்த அணி? மைத்திரிக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!!

0

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் 2020ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தனது இடத்தை தக்கவைக்கவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு மகிந்த ராஜபக்சவை அந்த பதவிக்கு நியமித்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

மகிந்த ராஜபக்ச தனக்கான அந்த இடத்தை பறிக்க மாட்டார் என்ற நிலையான முடிவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வந்திருக்கக் கூடும். இவர்களுக்கு இடையில் நடைபெற்றதாக கூறப்படும் பேச்சுவார்த்தையில் இந்த விடயமும் கட்டாயம் உள்ளடங்கி இருந்திருக்கும்.

எவ்வாறாயினும் மகிந்த ராஜபக்ச, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இருந்து விலகி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து கொண்டதுடன் நாமல் ராஜபக்ச உட்பட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அதிகளவான உறுப்பினர்கள், பொதுஜன பெரமுனவில் இணைந்து விட்டனர்.

இதற்கு அமைய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பிலும் அவர்கள் ஒரு இணக்கத்திற்கு வந்துள்ளதாக தெரியவருகிறது.

இந்த நிலையில், எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தும் அவசியம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு இல்லை என அந்த கட்சியின் உட்தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.

நாட்டில் நிலவும் நிலைமைக்கு அமையவும் ஏற்பட்டுள்ள ஸ்திரமற்ற நிலையிலும் மைத்திரிபால சிறிசேன 25 சதவீத வாக்குகளை கூட பெற முடியாத சூழல் காணப்படுவதாக பொதுஜன பெரமுனவினர் கணக்கிட்டுள்ளனர்.

இந்த நிலையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தனது சகோதரர் கோத்தபாய ராஜபக்ச அல்லது தனது நீண்டகால நண்பர் குமார வெல்கம ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்த மகிந்த ராஜபக்ச இணக்கம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர்களுக்கு தெளிவுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

குமார வெல்கம அரசியல் ரீதியாக நாகரீகமாக நடந்துக்கொள்வது அவருக்கு மதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அவரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதில் எதிர்ப்புகள் கிளம்பாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை ஜனாதிபதியாக தெரிவு செய்த மக்களை காட்டிக்கொடுத்துள்ளமை தொடர்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களிடையே பரவலாக பேசப்பட்டு வருகிறது.

ஜனாதிபதியின் நடவடிக்கை காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையால், மக்கள் மத்தியில் ஜனாதிபதிக்கு எதிரான நிலைப்பாடு உருவாகியுள்ளமை தொடர்பிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கவனம் செலுத்தியுள்ளது.

இப்படியான நிலையில், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட மைத்திரிபால சிறிசேனவுக்கு சந்தர்ப்பம் கிடைக்காமல் போகலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.