இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்பவர்களுக்கு ஓட்டுரிமையை ரத்து செய்ய வேண்டும் எனப் பேசி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார் பாபா ராம்தேவ்.
பதஞ்சலி நிறுவனரும் யோகா குருவுமான பாபா ராம்தேவ் உத்தரகாண்டில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசினார். அப்போது, “இந்த நாட்டில் யாரெல்லாம் என்னைப் போல் கல்யாணம் முடிக்காமல் பிரம்மச்சாரியாக இருக்கிறார்களோ அவர்களை எல்லாம் போற்ற வேண்டும். எங்களைப் பாருங்கள். எங்களுக்கு மனைவி கிடையாது; பிள்ளைகள் கிடையாது. அதனால் நாங்கள் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறோம் பாருங்கள். நான் எங்குப் போனாலும், குடும்பத்தை கூப்பிட்டுச் செல்ல வேண்டியது இல்லை. நான் பதஞ்சலி நிறுவனத்தைத் தொடங்கியுள்ளேன். ஒருவேளை நான் கல்யாணம் முடித்து குழந்தை பெற்றிருந்தால், அவர்கள் பதஞ்சலி நிறுவனத்தைச் சொந்தம் கொண்டாடியிருப்பார்கள். இது நடந்திருக்கும்.
அதேநேரம் கல்யாணம் செய்துகொள்வது ஒன்றும் ஈஸி கிடையாது. அது மிகவும் கஷ்டம். தற்போது பலரும் கல்யாணம் முடித்துக் கொள்கிறார்கள். கல்யாணம் முடித்துக் கொண்டு குழந்தை பெற்றுக்கொண்டால் அவர்களை வளர்ப்பதற்கே உங்கள் வாழ்க்கையைக் கொடுக்க வேண்டியிருக்கும். மக்கள் தங்கள் குடும்பங்களுக்காகவே உழைக்கிறார்கள். கல்யாணம் முடித்துக்கொள்பவர்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும். யாரெல்லாம் கல்யாணம் முடித்து இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொண்டார்களோ அவர்களது ஓட்டுரிமையை ரத்து செய்ய வேண்டும்” எனக் கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.