இரு முஸ்லிம் தலைவர்கள் மகிந்தவுடன் சரணாகதி? அப்போ ரணில் அதோகதி ! ஆட்டம் காணும் அரசியல்

0

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பங்காளிக் கட்சிகளான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் ஆகியோர் நேற்றையதினம்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இலங்கையில் புதிதாக பிரதமராக நியமிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையினை நிரூபிப்பதற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வரும் நிலையில், குறித்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்றைய தினம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் சந்தித்துப் பேசியிருந்தார்.

ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவைளிப்பதாக றிசாட் பதியுதீன் தெரிவித்திருந்த நிலையில், அவருடைய கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்ததோடு, புதிய அரசாங்கத்தில் பிரதியமைச்சுப் பதவியைப் பெறுவதற்கும் முயற்சித்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்திருந்தன.

இந்த செய்திக்குப் பின்னரே, ஜனாதிபதியை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் சந்தித்திருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து, முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் அவரின் போட்டிக் கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமுடனும் சமகால அரசியல் குறித்து நேற்றைய தினம் பேசியதாக, முஸ்லிம் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான பின்னணியிலேயே, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீனும் இன்று காலை ஜனாதிபதியை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இருந்தபோதும், இந்த சந்திப்பு பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்புகள் எந்தத் தரப்பிலிருந்தும் இதுவரை வெளியிடப்படவில்லை.

ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு 07 உறுப்பினர்களும், றிசாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரசுக்கு 05 உறுப்பினர்களும் நாடாளுமன்றத்தில் உள்ளனர்.

இந்தக் கட்சிகளின் தலைவர்கள் இருவரும் இன்று ஜனாதிபதியைச் சந்தித்தமையினை அடுத்து, மகிந்த ராஜபக்ஷவுக்கு இவர்கள் ஆதரவளிக்கும் நிலைப்பாட்டினை எடுப்பார்கள் எனும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதேவேளை, ரணில் விக்கரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர், மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிப்பதாக இன்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

அந்த வகையில், ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த 07 நாடாளுமன்ற உறுப்பினர்கள், இதுவரை மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளனர்.

 

Leave A Reply

Your email address will not be published.