‘கிலோகிராமை’ அளவிட்ட மூலப் படிக்கல்லுக்கு ஓய்வு வழங்கப்படுகிறது!

0

சந்தைகளிலும், வர்த்தக நிலையங்களிலும் பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வந்த கிலோ படிக்கல் கடந்த சில காலமாக பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக இலத்திரனியல் விசை அளவீட்டு இயந்திரங்கள் பாவனைக்கு வந்துவிட்டன.

அவை தற்போது பரிணாமமடைந்து நவீன தொழினுட்ப அளவீடுகளை உள்ளடக்கி பயன்படுத்தப்பட்டு வருகின்றன. எனினும், அந்த ஒரு கிலோ எடைக் கல் எவ்வளவு எடை இருக்கவேண்டும் என்று நிறுத்து அளவிடுவது யார் தெரியுமா?

அதை செய்வதற்கு உள்ளூரில் அதிகாரிகள் இருக்கிறார்கள். என்றாலும் உலக அளவில் ஒரு கிலோ எடை என்பது எவ்வளவு என்பதை வரையறை செய்வதற்காக பயன்படுத்தி வந்த ஒரு மூல எடைக் கல்லுக்கு ஓய்வு வழங்க இருக்கிறார்கள். 2019 ஆம் ஆண்டு முதல் அந்த மூல எடைக் கல்லை மாற்றி, நவீன கருவி மூலம் உலக அளவில் எடையை வரையறை செய்ய உள்ளார்கள்.

இந்த மாற்றங்கள் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றாலும், மிகவும் துல்லியமான எடை அளவுகள் தேவைப்படும் தொழிற்துறைகள் மற்றும் அறிவியல் துறைகளில் நடைமுறை தேவைகளுக்கு பயன்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த, 1889 ஆம் ஆண்டில், பிளாட்டினம் – இரிடியம் கலந்த உலோக கட்டி, பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள பாதுகாப்பு பெட்டியில் பத்திரமாக வைக்கப்பட்டது. அந்த கட்டியின் எடையை, உலக நாடுகள், ‘ஒரு கிலோ கிராம்’ என, பின்பற்றி வருகின்றன.

இதை மாற்றும் வகையில், உருவாக்கப்பட்டுள்ள, அறிவியல் ரீதியிலான புதிய முறைக்கு, பாரிஸில் நடந்த கூட்டத்தில், 50 க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் இணக்கம் வௌியிட்டுள்ளனர். கிலோ என்பது சர்வதேச எடை அலகுகள் அமைப்பின் 7 அடிப்படை அலகுகளில் ஒன்றாகும்.

கிலோ, அம்பியர் (மின்சாரம்), கெல்வின் (வெப்பம்), மோல் (துகள்களின் எண்கள்) ஆகிய நான்கும் பாரிஸின் மேற்கு நகரான வெர்செயில்ஸில் நடைபெறும் பொது மாநாட்டின்போது மேம்படுத்தப்படவுள்ளன.

அந்த மூல எடைக்கல்லான “கிராண்ட் கே” என்பது 90 சதவீத பிளாட்டினமும், 10 சதவீத இரிடியமும் கலந்து லண்டனில் தயாரிக்கப்பட்ட 4 சென்டிமீட்டர் உருளை வடிவ திண்ம பொருளாகும்.

பொருட்கள் காற்றினால் அணுக்களை இழக்கலாம் அல்லது காற்றிலுள்ள மூலக்கூறுகளை ஈர்த்துக்கொள்ளலாம் என்ற கோட்பாட்டின் அடிப்படையில், அதன் எடை அளவு கடந்த நூற்றாண்டில் பத்து மைக்ரோ கிராம்கள் குறைந்துள்ளன.

அப்படியானால், உலக அளவில் ஒரு கிலோவை அளவிட பயன்படுத்தப்படும் எடை மாதிரிகள் மற்றும் அளவிடும் கருவியின் அளவுகள் துல்லியமற்றவை என பொருள்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.