கூட்டமைப்பிலிருந்து விலகுவதாக சி.வி. கடிதம்!

0

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியிலிருந்து விலகுவதாக கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவிற்கு இன்று (புதன்கிழமை) தனது விலகல் கடிதத்தினை அனுப்பியுள்ளார்.

அக் கடிதத்தில் தன்னை அரசியலுக்கு கொண்டு வந்தற்கு நன்றி தெரிவித்திருக்கும் விக்கினேஸ்வரன், தன்னை கட்சி உறுப்பினராக பார்க்காது தனக்கு எதிரான செயற்பாடுகளையே தமிழரசுக் கட்சி மேற்கொண்டிருந்ததாகவும் குறிப்பிட்டிருக்கின்றார்.

ஆகையினால் தான் அக்கட்சியில் இருந்து உத்தியோகபூர்வமாக விலகிக்கொள்வதாகவும் அறிவித்திருக்கின்றார்.

இதேவேளை, இவ்விடயம் தொடர்பில் கட்சித் தலைவர் மாவை சேனாதிராசா கருத்துத் தெரிவிக்கையில், மாகாண சபைத் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் சார்பிலே விக்கினேஸ்வரன் போட்டியிட்டிருந்தார். அவர் தற்போது கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கின்றார்.

ஆனால் அவர் அண்மையில் ஒரு புதிய கட்சியொன்றையும் ஆரம்பித்திருந்தார். அவ்வாறு கட்சி ஆரம்பித்ததனூடாக அவர் தாமாகவே கட்சியிலிருந்து விலகியதாக கருதப்படுவார்.

அவ்வாறு புதிய கட்சியை ஆரம்பித்த விக்கினேஸ்வரன் மீதோ அல்லது அவருடைய செயற்பாடுகள் மீது எந்தவித ஒழுக்காற்று நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

ஆகவே அவர் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்து புதிய கட்சியை ஆரம்பித்துள்ள நிலையில் அவர் தாமாகவே கட்சியிலிருந்து விலக்கப்படுவதாகவும் மாவை சேனாதிராசா மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.