சிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் , சீறும் புலி தமிழ்ச்செல்வன் சிங்களத்தால் வீழ்த்தப்பட்ட நாள் இன்று

0

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட போராளிகளின் நினைவுநாளில்….
உலகம் வியந்த உன்னதத்தின் நினைவுகள்

உலகமே விழி உயர்த்திநிற்கும் தமிழர்தாயக விடுதலைப்போராட்டத்தின் அழிக்கமுடியாத வரலாற்று வீரர்களில் ஒருவராக தன்னை நிலைநிறுத்திச் சென்றவர் பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன். இவரது போரியற் திறன்களையும் அரசியல் நுண்ணறிவையும் ஒருபோதும் தமிழர்களால் மறந்துவாழ முடியாது.

பல்வகைப்பட்ட உயிர்களின் ஒப்புவிப்புகளுடாக கட்டிஎழுப்பப்பட்ட, தமிழர்களின் விடுதலைப்போராட்டத்தில் தமிழ்ச்செல்வன் அவர்களின் ஓய்வு ஒழிச்சலற்ற உழைப்பும் ஒப்புவிப்பும் அளப்பரியன.

தன்னுடைய பதினேழாவது அகவையில், தினேஸ் என்ற முதிராத இளைஞனாக தமிழர்களின் மீதான அடக்குமுறைகளை உடைத்தெறிய தமிழர்தாயக விடுதலைப்போராட்டத்தில் இணைந்துகொண்ட இவர், தொடர்ச்சியாக 23 ஆண்டுகளை தன்னுடைய இலட்சியத்துக்காக தன்னலமற்று கொடையாக்கினார்போர்க்கருவி தாங்கிய விடுதலைப்போராளியாக தன் போராட்டவாழ்வில் கால்பதித்தவர், பயிற்சிமுகாமிலே தன்னுடைய தனித்திறமையை வெளிக்காட்டி, லெப்.கேணல். பொன்னம்மானின் கவனத்தை ஈர்த்து, பொன்னம்மானால் தேசியத்தலைவருக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர். தனக்கான பயிற்சிகளை நிறைவுசெய்து மருத்துவபணியில் சிறிதுகாலம் கடமையில் இருந்தார். தொடர்ந்து, தேசியத்தலைவர் அவர்களின் மெய்ப்பாதுகாப்பு அணியிலும் இணைத்துக்கொள்ளப்பட்டவர். பல்வேறு கொடுஞ்சமர்களில் தனித்துவமாகத் திகழ்ந்து தேசியத்தலைவர் அவர்களின் எண்ணத்தை ஈர்த்தவர்.

மிக எளிமையான இயல்பான ஒரு போராளியாக வாழந்தவர். இந்திய அமைதிப்படையினருடன் போர் நடைபெற்ற காலப்பகுதியில் உணவுமின்றி, உறக்கமும் இன்றி அலைந்துகொண்டிருந்த கொடுங்காலத்தில், உயிரை ஒறுத்து இந்திய அமைதிப்படையினர்மீது கரந்தடி உத்திகளைப்பயன்படுத்தி, இடைவிடாத பல்வேறு தாக்குதல்களை நடத்திய துணிகரம் தமிழ்ச்செல்வனுக்குரியது. எந்த இடத்திலும் தரித்திருக்கமுடியாத நெருக்கடிகள் மிகுந்த அந்தச்சூழ்நிலையில், தென்மராட்சிப்பகுதியில் மக்களின் பெரும்பாதுகாப்புடன் உலவித்திரிந்து, தன்பணியாற்றியவர் இவர். தொடர்ந்தும் களமுனைகளில் போராடுவதும், பகைவரை ஓடோடவிரட்டுவதும், விழுப்புண்ணடைவதுமாக இவரது போரணிவாழ்வு நகர்ந்துகொண்டிருந்தது. சாவின் விளிம்புவரை சென்றுமீண்ட கணங்களை வென்று, தன்னுடைய ஓர்மத்தினாலும் விடாமுயற்சியாலும் நம்பிக்கையாலும் போராற்றலாலும் யாழ்மாவட்ட தளபதியாக உயர்ந்தவர். ஆனையிறவு, பூநகரி உள்ளிட்ட பல படைத்தளங்களின் வீழ்ச்சியிலும், போராட்ட வெற்றியிலும் தமிழ்ச்செல்வனுக்கு கணிசமான பங்குண்டு.

எல்லோரும் இவரை மிகச்சிறந்த தளபதியாக மட்டும் பார்த்துக்கொண்டிருக்க, இவரிடம் உள்ளிருந்த அரசியல் மிகுதிறனை தேசியத்தலைவர் அவர்கள் தன் அகக்கண்களால் அடையாளம் கண்டுகொண்டு, தேசத்தின் அரசியலை முன்னெடுக்கும் அரசியற்றுறைப் பெரும் பணியை இவரிடம் கையளித்தார். அரசியற்பணியை முன்னெடுத்துச்செல்லும் கூர்மையான அறிவும், புன்னகையுடன் கூடிய மலர்ச்சியானமுகமும் இவரிடமிருந்தன.

குறுகிய காலத்திலேயே தன்னை கேள்விக்குறியோடு பார்த்தவர்களை வியப்படையவைத்தார் தமிழ்ச்செல்வன். திம்புப் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டு பயின்ற பட்டறிவு இவருக்கு படிப்பாயிற்று. எதிராளிகளின் உண்மைமுகங்களை நேரில் காணும் வாய்ப்பும் இவருக்கு அப்போது கிட்டடியது. அரசியல் என்பதன் உட்பொருளை இவர் அங்கேதான் உய்த்துணரும் வாய்ப்புகள் குவிந்தன. அந்த அறிவும் அவருக்கு துணைநின்றதென்றே சொல்லலாம்.

இவ்வேளையில் அரசியல்செயற்பாடு என்பதற்கு அப்பால், அனைத்துலகத்தின் அரசியல் வியூகங்களை புரிந்துகொண்டு, அவற்றின் உள்ளிருந்த சூட்சுமங்களைப்புரிந்துகொண்டு, சிரித்தமுகத்துடனே அதேவேளை மிக இறுக்கமாக பணியாற்றவேண்டிய காலம் வந்தமைகிறது. எட்டுத்திக்கிலிருந்தும் அனைத்துலக அரசியல் வியூகங்கள் சுற்றிவளைக்க, அரசியல் ஆசான் தேசத்தின் குரல் பாலசிங்கம் அவர்களிடம் கற்றுத்தேர்ந்த அரசியலறிவுடன், தன் மதிநுட்பத்தையும், தன் சிரிப்புசூடிய முகத்தையும் கேடயமாகக்கொண்டு தமிழ்ச்செல்வன் இயங்கிக்கொண்டிருந்தார்.

எண்ணற்ற குற்றச்சாட்டுகளை உருவாக்கிக்கொண்டு, போராளிகளை பயங்கரவாதிகள் என்றும், போராட்டத்தை பயங்கரவாத நடவடிக்கைகள் என்றும் இலங்கைஅரசு உலகநாடுகளில் ஆணித்தரமாக பரப்பிக்கொண்டிருந்த வேளையில், சிங்களமக்களே தமிழ்ச்செல்வனை அவருடைய சிரித்த முகத்தினூடான கருத்துகளை உள்வாங்கிக்கொண்டனர் என்பது கண்கூடு. அதுமட்டுமன்றி, ஒட்டுமொத்த போராளிகளின் உண்மையான முழுமையான, முகமாக தமிழ்ச்செல்வன் உலகிற்கு தன்னை அடையாளப்படுத்தினார்.

அனைத்துலகமானது, தமிழர்களின் நிலமீட்புப்போரை சரியான முறையில் உணர்ந்துகொள்ளவும், இந்தப்போராட்டத்தின் உண்மைத்தன்மையினையும் நியாயப்பாடுகளையும் புரிந்துகொள்ளவும் வேண்டும் என்கின்ற இலக்கோடு சு.ப.தமிழ்ச்செல்வன் விடுதலைக்கான உச்சக்கட்ட பணிகளை ஆற்றினார். தனது எண்ணங்களை மக்களிடத்தே எடுத்துரைத்து, மக்களை விடுதலையின் பாதையில் வழிகாட்டும் உன்னத பங்காளியாக, பொறுப்பாளனாக தேசியத்தலைவர் அவர்கள் தன்னை அடையாளங்கண்டுகொண்டதை மிகச்சரியான முறையில் நிறைவேற்றிக்கொண்டிருந்தவர் தமிழ்ச்செல்வன். தன்னுடைய தலைவரின் எண்ணங்களை மிகச்சிறப்பான முறையில் ஆழமான புரிதலோடு உள்வாங்கி மக்களிடத்தே கொண்டுசேர்த்தவர் இவர்.

தமிழின விடுதலைக்கான தன்னுடைய பணியை இலகுவாக்கிக்கொள்வதற்காக தன்னை மேலும் மேலும் வளர்த்து, அறிவிலும் ஆற்றலிலும் சிறப்பாக முன்னேறியிருந்தார். எந்தவொரு அரசியல் சாணக்கியனையும் தன் கருத்தாளுமையால் வென்றுவிடும் சிறப்பும் துணிச்சலும் ஆற்றலும் அவருக்கிருந்தது. பேச்சுவார்த்தைகளில் எதிராளிகளின் உலுப்பிஎடுக்கும் கருத்துகளுக்கு அஞ்சாமல் அசராமல் நறுக்கென்று மிகத்தெளிந்தமுறையில் பதிலிறுக்கும் திறன் இவரது வரமாக இருந்ததை இவரிடம்; நேர்காணல்கள் செய்த ஊடகவிற்பன்னர்களுக்கு நன்கு தெரியும்.

அரசியல் என்பது ஆதிக்கமனப்பான்மை கொண்டதல்ல என்பதை தமிழ்ச்செல்வன் தமிழ்மக்களுக்கும் வெளிஉலகத்துக்கும் வாழ்ந்துகாட்டினார். புலம்பெயர் நாடுகளுக்கு பயணித்தகாலப்பகுதியில் வெளிநாட்டுமினுக்கங்களில் கரைந்து வழிமாறாமல், அங்கும் தலைவனின் நெஞ்சில் கனன்றுகொண்டிருக்கும் விடுதலைதாகத்தை விளக்கி புலம்பெயர்மக்களின் பெருமதிப்புக்கு ஆட்பட்டவர்.

தான் எதிர்கொள்ளும் ஒவ்வொருமனிதருக்கும் சிரிப்பையும் அன்பையும் பரிமாறி, குளிரவைக்கும் தன்மை இவருக்குமட்டுமே கைவந்தது. தேசியத்தலைவர் அவர்களால் உருவாக்கப்பட்ட எண்ணற்ற ஏராளமான கட்டமைப்புகளின் நிர்வாகத்தையும் கண்காணித்துக்கொண்டு, அனைத்துலக அரசியலையும் சமாளிப்பதென்பது எல்லோர்க்கும் கைகூடிவரக்கூடிய திறனல்ல. ஆனால், தமிழ்ச்செல்வனுக்கு அது கைகூடியது என்பதே இவரது ஆற்றலுக்கும் ஆளுமைக்கும் எடுத்துக்காட்டாகும். எல்லோரையும் போல ஒருநாளில் 24 மணித்தியாலங்கள்தான் அவருக்கும் இருந்தது. ஆனால், தன்னை காணவரும் எவருக்கும் நேரமில்லை என்ற சொல்லை உதிர்த்துவிடாதபடிக்கு தன்னுடைய நேரத்தை முகாமைத்துவம் செய்யும் திறன் இவரிடமிருந்ததை அனைவரும் அறிவர்.

இவருடைய எளிமையும், இரக்கமும், மற்றவர்களை உண்மையாக நேசிக்கும் உணர்வும், எக்கணமும் மக்களை நேசிக்கும் இயல்பும் எல்லோராலும் விரும்பப்பட்டது. தாயகத்திலும் வெளியுலகிலும் தமிழ்மக்களின் மிகுந்த நேசத்துக்குரியவராக திகழ்ந்தவர் இவர். இவருடைய இழப்பு நிகழ்ந்த அதிகாலையை எவராலும் மனதிலிருந்து நீக்கிவிடமுடியாது.

02.11.2007 அன்று வேவுவிமானத்தின் நடமாட்டம் ஏதோவோர் அசம்பாவிதத்தை உணர்த்துவது போலிருந்தது. வானத்தை நோக்கி கண்களையும், காதுகளையும் செலுத்திக்கொண்டே தம் அன்றாடக்கடமைகளில் தமிழ்மக்கள் ஈடுபட்டிருந்தனர். கூற்றுவனாய் அந்த விமானங்கள் கூவிக்கொண்டு வந்தன. எங்கே எத்திசையில் என்றுணரும் முன்பே, நிலமதிர அவை குண்டுகளைக் கொட்டின. கணப்பொழுதில், அவை சென்றுமறைய தங்களை சமாளித்தபடி மக்கள் வெளியே வருகிறார்கள். விமானஙகள் எங்கே தாக்குதலை நடத்தியிருக்கக்கூடும் என்கின்ற ஏக்கம் தவிப்பு அச்சம் உள்ளிட்ட உணர்வுகளோடு மக்கள் அல்லாடுகின்றனர்.

நண்பகலில்தான் அரசியற்றுறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனும் அவருடைய மெய்ப்பாதுகாவலர்களும் உயிரிழந்த செய்தி உறுதியானது. அந்த மதியப்பொழுதில் வாய்விட்டுக் கதறியவர்களும், கூற்றுவனைச் சாபமிட்டவர்களும், குமுறியவர்களும் ஏராளமானோர். இவரது இறுதிவணக்க நிகழ்விலும் விமானங்கள் வந்துவந்து மிரட்டிச்சென்றன. தங்கள் உயிரின்மீதான அச்சத்திலும் மேலாக, தமிழ்ச்செல்வனை மக்கள் அதிகமாக நேசித்தார்கள் என்பதை அக்காலப்பகுதியில் அங்கிருந்த அனைவராலும் நினைத்துப்பார்க்க முடியும்.

அரசியற்றுறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனோடு, லெப்.கேணல் அலெக்ஸ், மேஜர் மிகுதன், மேஜர் கலையரசன், லெப். ஆட்சிவேல், லெப். மாவைக்குமரன் ஆகியோரும் தம்முயிர் இழந்தனர். தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட போராளிகளின் உயிர்ப்பறிப்பு என்பது உலகமனச்சாட்சியின் உணர்வுகளை உலுப்பவே இல்லை என்றுதான் சொல்லமுடியும். தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட போராளிகளை நீதியற்ற முறையில் அழித்து, அதன்மூலம் தமக்குத்தாமே கறைபூசிக்கொண்டார்கள் இனவாத பௌத்த ஆட்சியாளர்கள்.

தாயகத்தின் வீரப்புதல்வர்களான இவர்களின் இழப்பு தமிழ்மக்களுடைய உணர்வுகளில் உருவேற்றிச்சென்றிருக்கின்றது. இவர்களது உணர்வுகளிலும் உயிர்களிலும் கலந்திருந்த விடுதலைக்கனவை மெய்பிப்பதே இன்றுள்ளவர்களின் முன் இருக்கும் கடமையாக விரிந்துள்ளது. அனைத்து வேறுபாடுகளுக்கும் அப்பால், தமிழர்கள் என்கின்ற பொதுப்புள்ளியில் தமிழர்களை வசீகரித்து இணைத்துச் சென்ற சிறப்பான இயல்புடையவர் தமிழ்ச்செல்வன். உலகம் முழுவதும் நல்லுறவையும் நல்லுணர்வையும் காவித்திரிந்து சமாதானம் பேசிய அமைதிப்புறாவான தமிழ்ச்செல்வனுக்கும் அவர்தம் தோழர்களுக்கும் இன்று இவர்களுடைய நினைவுநாளில், நாம் எமது நினைவுவணக்கத்தை காணிக்கையாக்குவதுடன், இவர்களுடைய ஆன்மாவிற்கு என்ன செய்தியை முன்வைத்து நிற்கிறோம் என எம்மைநாமே மீட்டுபப்பார்க்கவேண்டும்.

இதேவேளை, “ எமதுமாவீரர்களின் சுதந்திரதாகம் சாவுடன் தணிந்துபோகவில்லை. அது எமது இனத்தின் வீர விடுதலைக்குரலாக உலகெங்கும் ஒலித்துக்கொண்டிருக்கிறது “ என்கின்ற எமது தேசியத்தலைவரின் எண்ணக்கருத்தையும் நெஞ்சத்திற் பதித்துக்கொள்வோம்.

Leave A Reply

Your email address will not be published.