ஜனாதிபதியின் நிலைப்பாட்டை நான் அறிவேன் ; வெற்றுக் கதிரைகளுக்கு மத்தியில் விஜயதாஸ ராஜபக்ஷ

0

பாராளுமன்றத்தின் சட்டவாக்கசபையின் சபாநாயகரும் நிறைவேற்றதிகாரத்தின் தலைவர் ஜனாதிபதியும் இணைந்து தற்போதைய பிரச்சினையை தீர்க்கவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

இதேவேளை, பெரும்பான்மைக்கு செவிசாய்க்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஜனாதிபதி உள்ளாரென்பதை நான் அறிவேன். ஆகவே அதனை ஆக்கபூர்வமாக முன்னெடுத்து ஜனநாயகத்தை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பாராளுமன்றம் இன்று காலை சபாநாயகர் கரு ஜயசூரிய தமைமையில் கூடியது. இதன் போது பிரதமர் அலுவலகத்துக்கு நிதி வழங்குவதை தடுக்க கோரும் பிரேரணையை முன்வைத்து பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க உரையாற்றினார்.

ஆனால் ஆளுங்கட்சிசார்பில் இன்றைய பாராளுமன்ற அமர்வு புறக்கணிக்கப்பட்டிருந்த நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ விசேட உரையொன்றை ஆற்றினார்.

இதன் போதே பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

மூன்று தசாப்தகால போர் மீணடும் ஏற்படக் கூடாது என்ற நிலைப்பாட்டுக்கு அமையவே தேசிய அரசாங்கத்தை உருவாக்கினோம். அந்த நோக்கம் மிகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு, 19 ஆவது அரசியலமைப்பு ஊடாக உறுதிப்படுத்தப்பட்டது. ஆனால் இன்று நிலைமை துரதிர்ஷ்டமாகியுள்ளது.

சட்டவாக்க சபையின் தீர்மானங்களை நிறைவேற்று அதிகாரம் நிராகரிப்பதும் நிறைவேற்றதிகாரத்தின் தீர்மானங்களை சட்டவாக்க சபை சவாலுக்குட்படுத்துவதுமாக தேசிய அரசியலில் ஜனநாயகம் செயலிழந்து போய்விட்டது.

ஜனநாயகத்தை உறுதிப்படுத்த தேர்தலொன்றை நடத்துவதற்கான தீர்மானத்தை சட்டவாக்க சபையும் நிறைவேற்றதிகாரமும் இணைந்தே முன்னெடுக்க வேண்டும். மாறாக நீதிமன்றம் ஜனநாயகத் தேர்தலை தீர்மானிப்பது என்னைப்பெறுத்தளவில் ஏற்றுக்கொள்ளக் கூடிய விடயமல்ல.

எனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இனிமேலும் காலதாமதம் ஏற்படுத்தாது பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும். பாராளுமன்றத்தின் பெரும்பான்மைக்கு செவிசாய்க்க வேண்டுமென்பதே எனது நிலைப்பாடாகும். எனவே பாராளுமன்றத்தின் சட்டவாக்கசபையின் சபாநாயகரும் நிறைவேற்றதிகாரத்தின் தலைவர் ஜனாதிபதியும் இணைந்து இந்த பிரச்சினையை தீர்க்கவேண்டும்.

பெரும்பான்மைக்கு செவிசாய்க்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஜனாதிபதி உள்ளாரென்பதை நான் அறிவேன் ஆகவே அதனை ஆக்கபூர்வமாக முன்னெடுத்து ஜனநாயகத்தை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவாக இருந்தாலும் சரி முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவாக இருந்தாலும் சரி தங்களுக்கு ஆதரவு வழங்கிய பாராளுமன்ற உறுப்பினர்களையும் பிளவுகளையும் கட்டுப்படுத்த தவறி விட்டனர் எனவும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.