‘ஜெ., இருக்கும்போது படம் எடுத்திருந்தால் அவர்கள் வீரர்கள்’ – அதிர்ந்த தினகரன்

0

தீபாவளி அன்று வெளியான `சர்கார்’ படத்துக்கு தொடர்ந்து பல எதிர்ப்புகளும் புகார்களும் வந்த வண்ண உள்ளன. இந்தப் படத்துக்கும் நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸுக்கும் அரசியல்வாதிகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்துவருகின்றனர். இன்று சென்னை அடையாறில் செய்தியாளர்களைச் சந்தித்த அ.ம.மு.க துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகர பேசும்போது, “ சர்கார் வியாபார நோக்கத்துடன் எடுக்கப்பட்ட படம். மக்களுக்கு நல்ல கருத்தைச் சொல்ல எடுக்கப்பட்ட ஆவணப் படம் இல்லை. இதில் நடித்த நடிகர்கள் அனைவரும் சம்பளம் வாங்கிக் கொண்டுதான் நடித்துள்ளனர். இதுவே ஜெயலலிதா இருக்கும்போது இந்தப் படத்தை இயக்கி, நடித்திருந்தால் அவர்களைப் பெரிய வீரர்களாக ஏற்றுக்கொள்ளலாம். இது போன்றவர்களை எல்லாம் பெரிதாக எடுத்துக்கொண்டு அந்தப் படத்துக்கு மேலும் விளம்பரம் சேர்ப்பதாகவே தோன்றுகிறது. அந்தப் படம் இது முன்னர் ஓடிய பிற படங்களைப் போலத்தான் ஓடும். அதைப் பற்றியே தொடர்ந்து பேசி படம் பார்க்காத மக்களையும் பார்க்கத் தூண்டுவதாகவே தோன்றுகிறது.

மறைந்த தலைவர்களைப் பற்றி அவர்கள் இல்லாத நேரத்தில் இதுபோன்ற படம் எடுப்பது அவர்கள் எவ்வளவு தூரம் நாகரிகத்தை கடைப்பிடிக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது. மாணவர்களுக்கு வழங்கப்படும் லேப்டாப், பஸ் பாஸ், மதிய உணவு போன்றவையும் இலவசம்தான். அவற்றைத் தடை செய்ய வேண்டும் எனக் கூறினால் அது ஏற்றுக்கொள்ள முடியாது. ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில்தான் இலவசப் பொருள்கள் வழங்கப்படுகிறது. அதை மக்களும் ஆர்வமாக வாங்கி உபயோகப்படுத்துகிறார்கள். இந்தப் படத்தில் சில துறைகளையே மாற்றித் தெரிவிக்கப்பட்டுள்ளதாம். இதிலிருந்து அவர்களின் அறிவு அவ்வளவுதான் என்றே கூறத் தோன்றுகிறது. நடிகர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என நினைப்பது தவறு இல்லை. ஆனால், அனைத்திலும் உள்ள பிரச்னைகளைக் காட்ட வேண்டும். சினிமா டிக்கெட் கூட கள்ளத்தனமாக விற்கப்படுகிறது. அவர்கள் எடுக்கும் சினிமாவுக்கு வரி விலக்கு கேட்கிறார்கள். அதைப் பற்றியெல்லாம் படம் எடுக்கலாமே?

இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியடைந்து வருகிறது. பண மதிப்பு நடவடிக்கை பணக்காரர்கள் முதல் ஏழை வரை அனைவருக்கும் பாதிப்பைத் தந்துள்ளது. இந்தியாவின் பொருளாதார நிலை நலிவடைந்துள்ள நிலையில் மற்றுமொரு அணுகுண்டு போல் இந்த பண மதிப்பிழப்பு வந்தது. இந்தியாவின் பொருளாதாரத்தை பாதாளத்தை நோக்கித் தள்ளுவதாகவே இது உள்ளது. இது வளர்ச்சிக்கான திட்டம் இல்லை. இந்த நடவடிக்கை தவறானது. மக்களுக்கு பெரும் பாதிப்பு. எனவே, இன்று கறுப்பு தினம்தான்” என விமர்சித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.