பணிந்தது சர்க்கார் : சர்ச்சை காட்சிகள் நீக்கப்பட்டன!!

0

தணிந்த சர்க்கார் சர்ச்சை :

நடிகர் விஜய் சமீபத்தில் வெளியான சர்கார் திரைப்படத்தில் அரசின் சமூக நலத்திட்டங்கள் குறித்தும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் குறித்தும் அவதூறு கருத்துக்கள் தெரிவித்திருந்ததாக கூறி அதிமுகவினர் எழுப்பிய ஆவேசக்குரல் மெல்ல தணிந்திருக்கிறது. ஆம், சர்கார் திரைப்படம் மறுதணிக்கை செய்யப்பட்டு குறிப்பிட்ட சர்ச்சைகள் நீக்கப்பட்டுவிட்டன.

ஆனால், சமூக நலத்திட்டங்கள் குறித்தும் ; விலையில்லா திட்டங்கள் குறித்தும் சர்கார் திரைப்படம் இங்கு ஒருசாராரிடத்தில் உண்டாகியிருக்கும் எதிர்மறை பிம்பத்தினை நீக்குபவர்கள் யார்? என்ற கேள்வி கல்வியாளர்கள் மற்றும் அரசியலாளர்கள் மத்தியில் எழாமல் இல்லை.

இங்கே இடஒதுக்கீடு குறித்தே மாற்றுக்கருத்துக்களை தெரிவிப்பவர்கள் இன்னமும் இருக்கிற நிலையில், சமூக நலத்திட்டங்கள் குறித்து ஏ.ஆர் முருகதாஸ், விஜய் போன்றவர்கள் மேட்டுக்குடி மனோபாவ தன்மையிலான கருத்துக்களை பேசுவதில் ஐயமொன்றும் இல்லை.

காமராஜரும் – மதிய உணவும்:

ஆம், இங்கே அனைவருக்குமான கல்வி என்பதே மறுக்கப்பட்ட நிலையில் குலக்கல்வி திட்டத்தினை ஒழித்து தமிழகத்தின் சிற்றூர்களிலும் பள்ளிகளை திறந்து ஏழை ; எளியோர்களுக்கு கல்வியெனும் அமுதூட்டிய காமராஜரும் மாணவர்களின் வருகையை அதிகரிப்பதற்காக சத்துணவு திட்டத்தினை அறிமுகப்படுத்தினார். அதற்கு முன்னரும் சரி பின்பும் சரி தொடர்ச்சியாக தமிழகத்து ஆட்சியாளர்களால் சமூக நல திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன.

யாருக்கானவை சமூக நலத்திட்டங்கள் :

பச்சிளங்குழந்தைகள், தாய்மார்கள், வளரிளம் பெண்கள், இளைஞர்கள், பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கான திட்டங்கள், விவசாயிகளுக்கான திட்டங்கள், முதியோர்களுக்கான உதவி தொகை திட்டங்கள், மருத்துவ காப்பீடு திட்டங்கள், தாட்கோ கடன்கள், அம்மா உணகவம், இலவச அவசர சிகிச்சை ஊர்தி, இறந்தவர்களின் குடும்பத்திற்கான ஈமக்கிரியை உதவித்தொகை, கல்வியில் – வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு, மாவட்டத்திற்கோர் மருத்துவ கல்லூரி, பசுமை வீட்டு திட்டங்கள் என்று திமுக, அதிமுக என இரு கட்சிகளின் அரசுகளால் அனைத்து துறையிலும் அறிமுகப்படுத்தப்பட்டு எளியோர்களின், சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திட்ட திட்டங்கள் பலப்பல.

தமிழகமும் ; பிற மாநிலங்களும் :

வேற்று மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் அனைத்து துறைகளிலும் தமிழகம் எந்த அளவினுக்கு மேலேழேந்துள்ளது என்பதனை நம்மால் அறிந்துகொள்ள முடியும்.

இலவச சீருடை, காலணி, புத்தகங்கள், கல்வி உதவி தொகை, மிதிவண்டி, இலவச பயணசீட்டு என பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கான திட்டங்களால் இங்கு பயன் பெற்று சமூகத்தில் மேலெழுந்த மாணவ – மாணவிகள் ஏராளம். இதே போன்று அனைத்து துறைசார் திட்டங்களையும் பட்டியலிடலாம். இவையாவும் மக்களுக்கான திட்டங்களாக அரசுகளால் செயற்படுத்தப்பட்டவை. அவை போன்ற நலத்திட்டங்களே விலையில்லா மடிக்கணினி, மிக்சி, கிரைண்டர் உள்ளிட்டவை. அரசால் அளிக்கப்பட்ட பின்னரே இத்தகைய பொருட்கள் இடம்பெற்ற வீடுகள் ஏராளம்.

மேட்டிமைத்தன்மை பேசுகிறதா சர்கார் :

அரசியல் கட்சிகளின், அரசுகளின் செயற்பாடுகளின் மீது நமக்கு மாறுபாடுகள் ; விமர்சனங்கள் இருக்கலாம். ஏன் அரசுகளின் திட்டங்கள் குறித்து கூட நமக்கு விமர்சனங்கள் இருக்கலாம் ; இருக்கவே செய்கின்றன. ஆனால், இட ஒதுக்கீட்டின் அவசியம் குறித்த அவசியத்தினை புரியாமல் எதிர்ப்பதனை போலவே, இத்தகைய திட்டங்களை விமர்சிப்பது ; இத்தகைய திட்டங்கள் அறிமுகப்படுத்த பட்டதால் தான் மக்கள் சீரழிந்துவிட்டார்கள் என மாயையை உண்டாக்குவதெல்லாம் என்ன மாதிரியான படைப்புரிமை என்ற கேள்வி நம்மில் பெரும்பாலானோருக்கு எழாமல் இல்லை. இத்தகைய திட்டங்கள் மூலம் எண்ணற்ற ஏழை ; எளியோர் பயன்பெற்றுக்கொண்டிருக்கின்றனர் என்பதனை முருகதாஸ் போன்ற படைப்பாளிகள் அறிந்துகொள்ள வேண்டும்.

சமூகத்தில் முன்னேறிவிட்ட தரப்பினர், அவர்களை விட கீழானநிலையில் உள்ளவர்களுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்களை எள்ளி நகையாடுவது ஏற்புடைய செயல் அல்ல. ஓர் அரசு என்பது சமூகத்தின் எல்லா தரப்பினருக்குமான திட்டங்களையே தீட்டி செயல்படுத்தும். தமிழில் திரைப்படங்களுக்கு பெயரிட்டால் வரி விலக்கு என அறிவித்தது முதல், எண்ணற்ற திட்டங்களை திரைப்பட ஊழியர்களுக்காகவும் செய்தவை இந்த அரசுகள் தான்.

அரசியல் கட்சிகளின் செயற்பாடுகளில் நமக்கு மாற்றுக்கருத்துக்கள் இருக்கலாம். தவறுகளை நேரிய வழியில் சுட்டிக்காட்டலாம். புள்ளிவிவரங்களுடன் வாதிடலாம். ஆனால், தனி நபர்களின் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு விமர்சிப்பதென்பது ஏற்புடையதன்று. ஆனால், அவ்வாறான விமர்சனத்தையே முன்னெடுத்துள்ளது சர்கார் திரைப்படம் என்பதுவே பொதுமக்களின் கருத்தாக உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.