தமிழரசுக் கட்சியிலிருந்து சுமந்திரனை நீக்குங்கள் ! மாவைக்கு அவசர கடிதம்

0

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழரசுக் கட்சியின் உப செயலாளருமான எம். ஏ. சுமந்திரனை கட்சியில் இருந்து நீக்குமாறு தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவுக்கு சிவசேனா அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன் கடிதம் அனுப்பியுள்ளார்.

வவுனியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் இளைஞரணி மாநாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் உரையாற்றும் போது ஜனாதிபதியை “நீ’ என விளித்து ஒருமையில் உரையாற்றி இருந்தார்.

அந்நிலையில் சுமந்திரன் அவ்வாறு ஒருமையில் ஜனாதிபதியை விளித்து உரையாற்றியமையை ஏற்க முடியாது எனவும், அதனால் அவரைத் தமிழரசு கட்சியில் இருந்து நீக்குமாறும் கோரி நேற்று திகதியிடப்பட்ட (06ஆம் திகதி) கடிதம் ஒன்றை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவுக்கு மறவன் புலவு சச்சிதானந்தன் அனுப்பியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளவை வருமாறு:

“நீ என்ற உச்சரிப்பின் தொனிதான் சிக்கலானதாக உள்ளது. இக்காலத்தில் நீ, உன்னை, வாடா, வாடி போன்ற சொற்களைக் கணவனும் மனைவியும் பரிமாறும் சிற்றின்ப நேரங்களையோ, கடவுளும் அடியவனும் பரிமாறும் பேரின்ப நேரங்களையோ அறியாதவல்லர் தமிழர்.

தமிழர் சார்பாளர் ஒருவர் சினந்து வெறுப்பைச் சிந்தியவாறு, சிங்களத் தலைமைச் சார்பாளரை நீ என விளித்தல் தமிழரின் மரபல்ல. முதிர்ச்சியற்ற வெறுப்பைத் தூண்டும் பேச்சு. ஆற்றாமையின் உச்ச வெளிப்பாடு. தமிழரின் அறிவார்ந்த அணுகுமுறைக்கு ஊனமானது.

சினம் என்னும் சேர்ந்தரைக் கொல்லி என்ற குறள் வரி தெரிந்தவர் இவ்வாறு பேசார். சம்பந்தன் முன்பும் ஆஸ்திரேலியப் பேச்சுக்காக சுமந்திரனைக் கண்டித்தவர். இப்பொழுதும் அவர் இத்தகைய உரையை ஏற்கார்.

1960 இன் இரண்டாவது தேர்தலில் 1971 தேர்தலில் தமிழரசுக் கட்சியின் சிலரின் இவ்வாறான பெறுப்பற்ற உரையால் சிங்கள மக்கள் தமக்குத் தாமே தமிழர் ஆதரவு இல்லாமல் ஆட்சி அமைத்தார்கள். சிங்கள மக்களை ஒன்றிணைத்துத் தமிழர் ஆதரவில்லாத ஆட்சியை 2018 க்குப் பின் வரும் தேர்தலில் சிங்களவர் தேர்வார்கள், 1960இல் வந்த ஆட்சி, 1971இல் வந்த ஆட்சி இரண்டுமே தமிழரைத் திட்டமிட்டு நசுக்கிய ஆட்சிகள். 2018 க்குப் பின்னரும் தமிழரை நசுக்கும் ஆட்சியைத் தேர்ந்தெடுக்கச் சிங்களவரைத் தூண்டிய சுமந்திரனை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விடுவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

1961இல் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் தமிழகத் தலைவர்களைச் சந்தித்து ஆதரவு கேட்ட நாள் முதலாக இன்றுவரை, ஈழத் தமிழர் நலம் காக்க எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி, எந்தவிதப் பதவி ஆசையும் இன்றி, கட்சியின் அடிமட்டத் தொண்டனாகப் பணிபுரிந்து வருகிறேன். 1977இல் கட்சியின் நடுவண் குழுவுக்குத் அமிர்தலிங்கம் என்னைப் பணியமர்த்தினார். தந்தை செல்வா நினைவு அறங்காவல் குழுச் செயலாளராக்கினார்.

1989இல் உங்களை நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்த கொழும்பில் நடந்த நடுவண் குழுக் கூட்டத்திலும் இருந்தேன். பின்னர் தமிழகத்திலும் டில்லியிலும் உங்களோடு கட்சிக்காக நான் உழைத்தமையை நீங்கள் நன்கு அறிவீர்கள். கடந்த வாரம் சர்வதேசத்தைக் கலந்தே ஆதரவு யாருக்கு எனத் தீர்மானிப்போம் என்ற உங்கள் அறிவார்ந்த அறிக்கையை ஆதரித்து வெளிப்படையாகக் கருத்துக் கூறியிருந்தேன்.

2015இல் வவுனியாப் பொதுக்கூட்டத்தில் கட்சியின் நடுவண்குழு உறுப்பினனானேன். தயைகூர்ந்து நடுவண் குழுவைக் கூட்டி சுமந்திரனைக் கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்குமாறு கோருகிறேன்

Leave A Reply

Your email address will not be published.